இலங்கைத் திருநாட்டின் வடகோடியில் உள்ள தொண்டமானாற்றங்கரையில் செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு இவ் ஆலய அமைவிடமான வல்லியாற்றங்கரையில் உள்ள மரநிழலின் கீழ் வீரபாகுதேவர் வேல் ஒன்றினை வைத்து சந்திக்காலப் பூசை செய்தார் என்றும் அதனைத் தொடர்ந்து முனிவர்களும், சித்தர்களும், யோகிகளும் அவ்விடத்தில் தவம் செய்ததாகவும் வரலாறு கூறுகின்றது. அத்துடன் தேவலோகத்தில் வியாழபகவானின் சாபத்தால் யானையாகிக் கதிர்காமத்தில் சிகண்டி முனிவரால் சாபவிமோசனம் பெற்ற ஐராவதம் கதிர்காமக் கந்தனின் கட்டளைப்படி வல்லியாற்றங் கரையில் தவம் இருந்து சமாதியடைந்து இவ்விடத்தில் அமைக்கப்பட்ட இக் கோயிலே பலநூறு வருடங்களாகப் புகழ்பெற்ற வணக்கத்தலமாக இருந்து வந்திருக்கின்றது. ஆயினும் 16ஆம் நூற்றாண்டளவில் போர்த்துக்கேயரால் இவ் ஆலயம் அழிக்கப்பட்டுவிட டச்சுக்காரரின் ஆட்சியின் பிற்பகுதியில் முருகப்பெருமானின் வேண்டுகோளிற்கு இணங்க மருதர் கதிர்காமர் என்ற முருகபக்தர் ஒருவரினால் அமைக்கப்பட்ட ஆலயமே இன்று “செல்வச்சந்நிதி” என்று எல்லோராலும் பக்திப்பரவசத்துடன் போற்றப்படுகின்றது. இம் முருகபக்தரான மருதர் கதிர்காமருக்கு தொண்டமானாற்றங்கரையில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து வீரபாகுதேவர் பூவரச மரநிழலில் வேல் ஒன்றை வைத்து வணங்கிய இடத்தையும் சுட்டிக்காட்டி இவ்விடத்தில் ஆலயம் அமைத்து 65 ஆலம் இலைகளில் அமுது படைத்துத் தன்னை வழிபட்டு தன்னைவழிபடவரும் அடியவர்களுக்கு அவ் அமுதை வழங்குமாறும் பணித்தார். இதைக் கேட்டுப்பதைபதைத்து தனக்குப் பூசை முறைகளோ மந்திரங்களோ தெரியாது என வணங்கி நின்ற பொழுது கணப்பொழுதில் கதிர்காமம் அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் மௌன பூசை முறைகளைக் காட்டினார். அத்துடன் அவர்வழிபட வேல் ஒன்றினையும் கொடுத்து மறைந்தருளினார். சின்னக்கதிர்காமம் என்று அழைக்கப்படும் இவ் ஆலயத்தில் மூலவராக வேல் உருவில் முருகன் வீற்றிருக்கின்றார். இதன் தலவிருட்சம் பூவரசு மரமாகும். செல்வச்சந்நிதிஆலயத்தினைச் சுற்றி ஆற்றங்கரையும் அடர்ந்த நிழல் மரங்களும் அன்னதான மடங்களும் குளங்களும் கிணறுகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இம்முருகனுக்கு அன்னதானக் கந்தன் என்றும் பெயர் உண்டு. ஆற்றங்கரையான் என மனமுருக வழிபடும் சந்நிதியானுக்கு ஆவணிமாதப் பூரணையில் தீர்த்தம் நடைபெறும். அதற்கு முன்வரும் அமாவாசை அற்றுப்போகும் தினத்தில் வள்ளிக்கொடியை கோயில் கிணற்றடிக்கருகாமையில் நாட்டிக் கோயில் முகப்பில் சேவற் கொடியை பறக்கவிட்டு வருடாந்த மகோற்சவத்தினை ஆரம்பிப்பார்கள். முதல் நான்கு நாட்களும் மாலைநேரத்தில் மாத்திரம் விழாவும் 5 ஆம் நாளிலிருந்து காலை, மாலை என இரு நேரத் திருவிழாவுமாக 16 நாள் மஹோற்சவம் நடைபெறும். ஆற்றங்கரையான்,இத்திமரத்தான், கல்லோடைக்கந்தன், சந்நிதியான் என்ற பெயர்களால் போற்றப்பட்ட இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே கொண்டமைந்த சிறப்புடையது.