நவாலி வடக்கு கிராமத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் நவாலியின் பெரியார்களில் ஒருவரான வீரசிங்கம் உடையார் குடும்ப உறவில் வாழ்ந்த வாரிநாசகம் என்பவரது காணி அட்டகிரி என்றபெயரில் வயல் ஓரம் அமைந்திருந்தது. இக்காணியில் வீரசிங்கம் பெரியாரின் முன்னோர்களால் மடமும், நீண்ட சிவபூசை அறையும், வெளிவிறாந்தையும் அமைத்து இந்த சமயக்கிரியைகள் இந்தியாவிலிருந்து வந்த சைவக்குருக்கள்மாரால் நடத்தப்பட்டு வந்தது. 1850 ஆம் ஆண்டளவில் இக்கிராமத்தில் வாழ்ந்த கதிரமலை என்னும் பெண்ணொருவர் கதிர்காம முருகன் மீது பெரும் பக்தி கொண்டிருந்தமையினால் அவரது பக்தியின் பயனாக யாத்திரிகர் ஒருவர் மூலம் கதிர்காமத்தில் இருந்து கொண்டுவந்த வேல் ஒன்று கிடைத்தது. அவ்வேலை வீட்டில் வைத்து வணங்க விரும்பாத அம்மையார் அட்டகிரி வளவில் அமைந்த குருக்கள் மடத்தின் சிவபூசை அறையில் வைத்து அனைவரும் வழிபடும் வகையில் வழிசெய்தார். அம்மடத்தில் தங்கியிருந்த குருக்கள் அவ்வேலுக்கு பூசை செய்து வந்தார். இக்குருக்கள் மடம் 1969 இல் அழிக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. முருகனின் மகத்துவமும் கீர்த்தியும் பரவ மெய்யடியார்களின் கூட்டம் பெருகியது. இதனால் குருக்கள் மடத்திற்கு வடக்கே அமைந்திருந்த சுப்பிரமணியம் முதலியாரின் அட்டகிரி என்ற பெயருடைய காணியில் வள்ளி,தேவயானை சமேத முருகப்பெருமான் செங்கல் கொண்டு அமைந்த கருவறையும் அர்த்த மண்டபமும் அமைந்த ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டார்.அட்டகிரியில் உள்ள குருக்கள் மடம் முருகனின் கோவிலாக மாற்றப்பட்டமையால் குருக்கள் கோவில் என்று பெயர் பெற்றதோடு, அட்டகிரி முருகன் கோயில் என்றபெயருடன் இன்றுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1921 இல் செங்கட்டிகள் மாற்றப்பட்டு வெள்ளை வைரக்கற்களால் கர்ப்பக்கிருகம் மாற்றியமைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடத்திலும் ஆனி மாத பூரணையைத் தீர்த்தமாகக்கொண்டு கொடியேற்றத்துடன் பதினொரு தினங்கள் மகோற்சவம் நடைபெற்று வருவது வழக்கம். நவாலியூர் சோமசுந்தரப்புலவரால் அட்டகிரிப்பதிகம் என்னும் பதினொரு பதிகமும், திருவூஞ்சல் பதிகமாக பதினொரு பாடல்களும் அட்டகிரி முருகன்மேல் பாடியுள்ளார். இவ்வாறு இலங்கையின் தலைசிறந்த புலவரால் பாடல்பாடப்பெற்ற தலமாக இத்தலம் விங்குகின்றது.
