1882.09.22ஆம் நாள் அளவெட்டி பெருமாக்கடவையில் பிறந்தவர். அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் கற்றவர். கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் டீ.யு பரீட்சையில் சித்தியெய்தி பின்னர் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியரானார். மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். 1910ஆம் ஆண்டளவில் ஆங்கில இலக்கண புத்தகம் ஒன்றினை எழுதி வெளியிட்டவர். பின்னர் கல்விப் பரிசோதகராகவும் பணியாற்றியவர். மாவட்டக் கல்வி அதிகாரியாக வட,கீழ் மாகாணங்களில் சிறந்த கல்விச்சேவையாற்றியவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தவர். மதுரை தமிழ்ச்சங்கம் போல் யாழ்ப்பாணத்திலும் ஆரிய திராவிடபா~hபிவிருத்திச் சங்கத்தினை நிறுவியது மட்டுமல்லாது, அதன் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியவர். சங்கத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றித் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இருமொழிகளிலும் பிரவேச பண்டித, பாலபண்டித, பண்டித வகுப்புப்பரீட்சைகளை ஒவ்வொரு வருடமும் ஒழுங்காக நடத்தி பல பண்டிதர்களை உருவாக்கியவர். இரு மொழிகளினதும் வளர்ச்சிக்காக சுன்னாகத்தில் பிராசின பாடசாலையை நிறுவி தமிழையும், வடமொழியையும் முறையாகப் பயிலவைத்தவர். இப்பாடசாலையில் வித்துவான் கணேசையர் தலைமையில் தமிழும், வியாகரண சிரோன்மணி சீத்தாராம சாஸ்திரிகள் தலைமையில் சமஸ்கிருதமும் படித்த பலர் பண்டிதரானார்கள். காளிதாசன் சமஸ்கிருதத்தில் பாடிய மேகதூதம், இருசங்காரம் ஆகிய காவியங்களை தமிழில் பாடியவர். சங்கமிருந்து தமிழாராய்ந்த மதுரையம்பதியிலே பெருமக்கள் பலர் நான்காம் சங்கமாக மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவித் தமிழிற் பரீட்சைகள் நடத்தி வருவதைக் கண்ணுற்ற, இவ் ஈழ மண்டலத்திலும் அப்படி ஒரு சங்கத்தை நிறுவினாலென்ன என்று யோசித்து, முனைந்து, முயற்சி செய்து வெற்றியும் கண்டவர் தான் சதாசிவஐயரவர்கள். ஊருக்கொரு பண்டிதரும் மேடைக்குப் பல பேச்சாளர்களுமாக நிரம்பியிருக்கும் இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை ஐயரவர்களையே சேர்ந்தது. கரவை வேலன்கோவை, ஐங்குறுநூறு, வசந்தன் கவித்திரட்டு ஆகிய நூல்களை அவர் அரிதில் முயன்று வெளியிடவும் செய்தார். பகுதி வித்தியாதரிசகராக இருந்த ஐயரவர்கள், இளம் மாணவர்களது இடர்ப்பாட்டை நீக்கத் தமிழ்மொழிப் பயிற்சியும் தேர்ச்சியும் என்ற அரியநூலை வெளியிட்டு உதவினார். தேவிதோத்திர மஞ்சரி, இருது சங்காரகாவியம் இவற்றைக் கவிதை உருவத்திலே ஆக்கினார்.1950.11.27 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.