Thursday, October 3

வேலுப்பிள்ளை (ஆசுகவி, கல்லடி)

0

1860.03.07 ஆம் நாள் வசாவிளானில் பிறந்தவர். அஞ்சாமைக்கு இலக்கணமானவர். “கண்டனங்கீறக்கல்லடியான்” என்ற சிறப்புப் பட்டமும் பெற்றவர். எடுத்த எடுப்பில் கவிபாடக்கூடியவர். ஆதலால் ஆசுகவி எனப் போற்றப்பட்டவர். கல்லடிவேலன் என்றால் கடந்த நூற்றாண்டில் தெரியாதார் இல்லை. உயர்ந்த ஆன்மீகக் கவிதைகள், கண்டனக் கவிதைகள், நகைச்சுவைக் கவிதைகள் முதலாகப் பண்டிதரையும், பாமரரையும் ஒருங்கே கவரவல்ல பாடல்களைப் பாடியவர். பாமரமக்கள் இவரை விகடகவி என்று அழைத்தனர். இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரனும் தென் இந்திய திரைப்பட நடிகருமான சிலோன் விஜயேந்திரன் கல்லடி வேலுப்பிள்ளை வாழ்க்கை வரலாறு என்னும் நூல் மூலம் உலகறியச் செய்தவர். கவிதை, கண்டனம், கட்டுரை, விமர்சனம், வரலாற்றாய்வு என்பன இவரது சிறப்புக்கள். 1902 முதல் 1944 வரை சுதேசிய நாட்டியம் என்னும் வீராவேசமும் சுதந்திர உணர்வும் இலக்கியத்திறன்மிக்க பத்திரிகையை நடத்தியவர். இவர் எழுதிய நூல்களிலே மிகப்புகழ் பெற்றது யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்னும் யாழ்ப்பாண வரலாற்றுப் பெருமை கூறும் நூலாகும். போலிப் புலவர்களைச் சாடி யதார்த்தவாதி வெகுசன விரோதி என முழக்கமிட்ட “சுதேசநாட்டியம்” என்ற பத்திரிகையை நடத்தி எதிரிகளைக் கதிகலங்கடித்தவர். நினைத்தவுடன் கவிபாடும் தெய்வீக சக்திமிக வாய்க்கப் பெற்றவர். ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர்களிலே கவிதை, உரைநடை, பத்திரிகை, கண்டனம், கட்டுரை, வரலாறு, ஆராய்ச்சி முதலிய பலதுறைகளில் முன்னணியில் வைத்துக்கணிக் கப்பட வேண்டியவர். இவரால் எழுதப்பெற்ற அழகம்மா திருமண அலங்கோலக்கும்மி என்ற கவிதைத் தொகுப்பு குறித்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்துப் பண்பாட்டு நிலைகளை ஆவணப்படுத்தியிருப்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். ‘அச்சமென்பது இருப்பினும் இல்லாமை சொல்லேன், அதிகநிதி வழங்கினும் இல்லாமை சொல்லேன், பாசத்துக்காயும் நானிலாமை சொல்லேன், பரிகசிப் பவரைத் துணிந்து பரிகசிப்பேன்” என்று தலை நிமிர்ந்து இறுமாப்போடு பாடுங்கவிஞர். வலிந்து கேட்போரைத் தாக்கும்படி நகைச்சுவையுடன் விடை கூறுவதிலும், அப்படியான பாடல்களைப் பாடுவதிலும் அவருக்கு நிகர் அவரே. அவரைப்பற்றிய கதைகள் கிளை விட்டுப் பரந்து கற்பனைகளோடு சேர்த்துக் கிராமங் கிராமமாகப் பலவாறு பேசப்படுகின்றன. பிற்காலத் தில், ‘உன் சித்தாத்தமென்ன’ ‘கதிரை வேலவர் பதிகம்’ என அவர் பாடியுள்ள பாக்கள் மனதை உருக்கக்கூடியன. இத்தகைய இயல்புகளுடைய ஆசுகவி, அவர்கள் 1944 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!