Sunday, May 5

துரைராசா, அழகையா (பேராசிரியர்)

0

1934-11-10 அம் நாள் உடுப்பிட்டி இமையாணன் என்னும் கிராமத்தில் அழகையா செல்லம்மா தம்பதிகளின் இரண்டாவது புத்திரனாகப் பிறந்தார். உடுப்பிட்டி  அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் தனது பாடசாலைக்கல்வியை முடித்துக்கொண்டு 1953 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு பொறியியல் மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டார். 1957 ஆம் ஆண்டு குடிசார் பொறியியல் பரீட்சையில் முதலாந்தர சிறப்புத்தேர்ச்சியுடன் சித்தி பெற்றார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியல் துறையில் போதனாசிரியராகப் பணியாற்றினார். 1958 ஆம் ஆண்டு இலங்கை பொதுவேலைத் திணைக்களத்தில் உதவிப் பொறியி யலாளராக சேர்ந்து கொண்டார். இவரது பிரத்தியேகமான திறமைகளை இனம்கண்டு கொண்ட கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மண்பொறியியற்துறைப் பேராசிரியர் கே.கே.றொஸ்கோ அவர்கள் திரு துரைராசாவை தனது ஆய்வு மாணவனாக இலங்கைப் பல்கலைக்கழகம் வழங்கிய புலமைப் பரிசிலின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக்கொண்டார். கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் பேராசிரியர் றொஸ்கோவுடன் மண்ணின் தன்மைகள் பற்றி 1958 டிசெம்பரிலிருந்து 1961 டிசெம்பர் வரை மேற்கொண்ட ஆய்வு கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது மட்டுமன்றி சர்வதேச மட்டத்தில் புகழையும் பெற்றுக்கொடுத்தது. அவரால் வடிவமைக் கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட Cam CLAY MODEL என்னும் உபகரணம் எதிர்காலத்தில் மண் பற்றிய ஆய்வுகளுக்கு உந்துவிசையாக அமைந்ததோடு புவிசார் தொழி;ல்நுட்ப பொறியியல் உபகரணம் ஒன்றின் மைல் கல்லாகவும் கருதப்படுகின்றது. கனடாவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக ஒரு வருடமும் 1977-1978 காலப்பகுதியில் கனடா விலுள்ள பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அதிதிப் பேராசிரியராகவும் கடமையாற்றி னார். 1975-1977 காலப்பகுதியிலும் 1982-1985 காலப்பகுதியிலும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தின் பீடாதிபதியாகவும் கடமையாற்றினார். 1987-1988 வரை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பொறியியற்றுறைப் பீடாதிபதியாகவும் கடமையாற்றினார். பல்கலைக்கழக மட்டத்தில் தொழில்சார் கற்கை நெறியினை அறிமுகப்படுத்தி தேவையான தலைமைத்துவத்தினை வழங்கியதோடு பல்கலைக்கழகம் சமூகத்தின் ஓர் அங்கம் என்னும் எண்ணக்கருவிற்கு உரமூட்டினார்.

1998 ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக போர் நடைபெற்ற காலத்தில் பொறுப்பேற்று தனது இல்லத்திலிருந்து கடமைக்காக தினமும் முப்பது மைல்கள் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து யாழ்.பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தை மிகவும் நேர்த்தியான முறையில் செயற்படுத்திப் பல்வேறு முன்னேற்றகரமான திட்டங்களை முன்னெடுத்து பல்கலைக் கழகத்தின் தரத்தினை உயர்த்தினார். துணைவேந்தர் துணைநிதியத்தினை உருவாக்கி வறிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தினார். மாங்குளத்தில் பொறியியல் துறையி னையும்,முல்லைத்தீவில் மீன்பிடித்துறையையும், நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதுடன் 1990 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறை யினையும் நிறுவினார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தினைப் போன்று யாழ்.பல்கலைக் கழகத்திலும் தொழிலாளர் கல்வி நடைமுறைத் திட்டத்தினை உருவாக்கினார். 1977 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா தேசிய விஞ்ஞான கழகத்தின் அங்கத்தவராகவும், 1979 இல் சிறிலங்கா பொறியியலாளர் நிறுவனத்தின் அங்கத்தவராகவும், 1985 இல் லண்டன் குடிசார் பொறியியல் நிறுவனத்தின் அங்கத்தவராகவும் இருந்து பல பணிகளை ஆற்றினார். இவரது திறமைகளையும் ஆய்வுச் சாதனைகளையும் கௌரவிக்கும் வகையில் அவரது மரணத்தின் பின்னர் தேகாந்த நிலையில் கௌரவ கலாநிதிப் பட்டத்தினையும், திறந்த பல்கலைக்கழகம் விஞ்ஞான மேதை பட்டத்தினையும் மண்ணை நேசித்த மாமனிதர் என்ற கௌரவங்களையும் பெற்றவர். யாழ்ப்பாண மக்களின் பணிக்காக அவரால் 1981 இல் ஊற்று என்னும் ஆய்வு நிறுவனமும், 1992 இல் உருவாகிய யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் என்பன இவருடைய சிந்தனையில் உருவாகிய நிறுவனங்களாகும். அவருடைய ஆய்வு நுட்பமும் திட்பமும் “துரையின் கோட்பாடு” என்று அறிவியல் உலகம் அங்கீகரிக்குமளவிற்கு மேன்மைபெற்றுள்ளது. இக்கோட்பாடு மேலைத்தேயப் பல்கலைக் கழகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு போதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1983 இல் தடைசெய்யப்பட்டிருந்த மாணவர் அமைப்பினை 1988 இல் சனாதிபதி அவர்களின் அநுமதி பெற்று உருவாக்கியதோடு, ஒவ்வொரு பீடத்திற்கும் தனித்தனி மாணவர் அமைப்படன் பல்கலைக்கழகத்திற்கு தனித்துவமான பொது மாணவர் அமைப்பினையும் உருவாக்கி மாணவர் நலன்களில் அதிக அக்கறை செலுத்தினார். இவர் மெய் வருத்தம் பாராது பசிநோக்காது கண் துஞ்சாது கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்னும் கீதா உபதேசத்திற்கமைவாக இவரின் செயற்றிறன் இலக்கணமானது. 44 ஆராய்ச்சிக் கட்டுரைகளை நூலாக்கம் செய்து விஞ்ஞான பொறியியல் துறைக்கு பெரும்பணியாற்றிய இப் பெரியார் 1994-06-11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!