அறிமுகம்
ஈழத்திருநாடு கலைகளால் உயர்ந்து, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழில் கோலோச்சி நிற்கும் ஒரு தேசம். இங்கே அவ்வப்பொழுது கலையாளுமைகளுடன் கலைஞர்கள் பிறந்து வளர்ந்து தங்கள் கலைப்பங்களிப்பை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வழங்கி மக்கள் மனங்களில் நிரந்தரமாகவே வாழ்ந்துவருகிறார்கள். ஆடல், பாடல், நடிப்பு எனக் கலைக்காகத் தக்களை அர்ப்பணித்து வாழும் கலைஞர்கள், வாழ்ந்த கலைஞர்கள் எவரையும் நாம் மறந்துவிட முடியாது. அவ்வாறு மறக்கப்படக்கூடியவர்களும் அல்ல நம் தேசத்துக்கலைஞர்கள். வானொலி, மேடை, திரைப்படம், தொலைக்காட்சி என யாவற்றிலும் கலைப்பணியாற்றி பல்லாயிரக்கணக்கான இரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர், இன்றும் அந்த இரசிக நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் ‘அண்ணை ரைட்’ கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்.
1944-07-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வடமராட்சி கரவெட்டியில் பிறந்தவர். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வரிஉத்தியோகத்தராகப் பணியாற்றினார். 20 ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். 1965இல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய “புரோக்கர் பொன்னம்பலம்” என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து இதிகாசம், சமூக, நவீனம், நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையானமேடை நாடகங்களிலும் நடித்தவர்.
கலைஞனாக கே.எஸ்.பாலச்சந்திரன்
1973ல் இலங்கை வானொலி நிலைய சிற்றுண்டிச்சாலையில் இருந்து குறிப்பிட்ட சில மணித்துளிகளுக்குள் எழுதி நடித்த தனி நடிப்பு அவர் பெயருடன் இணைந்து கொண்டது. அது தான் ‘அண்ணை ரைட்’ தனி நடிப்பு. இலங்கை வானொலியில் ஒலிபரப்பானதன் பின்னர், 1974ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டிலும் அரங்கேறியது. தொடர்ந்து ஈழத்திருநாட்டின் பட்டிதொட்டிகள் எங்கும் ‘அண்ணை ரைட்’ தனி நடிப்பு சக்கை போடு போட்டது.
கலைவிழா மேடைகள் மாத்திரமல்ல ஆலயத்திருவிழா மேடைகளையும் ‘அண்ணை ரைட்’ அலங்கரித்தது. நாள்தோறும் மக்கள் பயணிக்கும் பஸ் வண்டிதான் கருப்பொருள். அதற்குள் நிகழும் உரையாடல்கள், பயணிகள் ஒவ்வொருவரது குணாம்சங்கள் ‘அண்ணை ரைட்’ தனி நடிப்பில் பிரதிபலித்ததால் அது மக்கள் மனம் கவர்ந்தது.
அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இயங்கிய விக்ரர் அன்ட் சன்ஸ், நியூ விக்ரேஸ் ஒலிப்பதிவுக்கூடங்களுக்கு கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை அழைத்து ஒலிப்பதிவு செய்து, அதனை உலகெங்கும் பரப்பினார்கள்.
அன்றைய காலகட்டத்தில் மணிக்கூட்டு வீதி, யாழ் பொது மருத்துவமனை பின்புறத்தில் அமைந்திருந்த நியூ விக்ரேஸ் நிறுவனத்துக்கு முன்பாக பாடல்களை உயர்தர ஒலியமைப்பில் கேட்பதற்கென ஒரு கூட்டம் மாலை வேளைகளில் கூடும். அந்த நேரத்திலும் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் ‘அண்ணை ரைட்’ அங்கே ஒலிபரப்பாகும்.
கனவுகளும் தீவுகளும், தலைமுறைகள், குரங்கு கைத் தலையணைப் பஞ்சுகளாய், காரோட்டம், கலாட்டாக்காரர்கள் முதலான 20 இற்கு மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றியுள்ளார். தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகை களில் ‘மலர் மணாளன்’ என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் பல ‘சிறுகதைகளை எழுதியுள்ளார். தினகரன், ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளில் திரைப்படம், விளையாட்டுத்துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதினார். இவர் தாகம், வாழ்வு எனும் வட்டம் (சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது), உனக்கு ஒரு நீதி (சிறந்த இசைக்கான விருது பெற்றது) ஆகிய குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.இலங்கை வானொலியில், ‘கலைக்கோலம்’ சஞ்சிகை நிகழ்ச்சியையும், ‘விவேகச்சக்கரம்’ என்ற பொது அறிவுப்போட்டி நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கியிருக்கிறார். 1973இல் இலங்கை வானொலி நிலையத்தில் ரசிகர்கள் முன் ஒலிப்பதிவாகி, 1974இல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரங்கேறி, 33 ஆண்டுகளாக உலகின் பல நகரங்களில் மேடையேறிய ‘அண்ணைறைற்’ இவரது புகழ்பெற்ற தனிநடிப்பு நிகழ்ச்சியாகும். ‘அண்ணை ரைட்’ போன்று ‘ஓடலி ராசையா’ இது வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், வைத்தியர்களுடன் சம்பந்தப்பட்ட நகைச்சுவை, ‘தியேட்டருக்கு வாறீங்களா’ திரையரங்கில் நடைபெறும் விடயங்களை உள்ளடக்கிய நகைச்சுவை. இவற்றையும் அவர் வழங்கியுள்ளார்.
‘அண்ணை ரைட்’ தனி நடிப்புக்காகவே 1989ல் இலங்கைக்கலையகத்தால் பிரான்ஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்டு மாண்பேற்றப்பட்டார். பரிஸ் நகரிலும், சுவிற்சர்லாந்திலும் பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகளில் இவர் பங்கு பற்றி மக்கள் வரவேற்பைப் பெற்றார். ஈழத்தில் தனிநடிப்புக்கலையில் தனி முத்திரை பதித்தவர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்.
இவர் எழுதி நடித்த அதிகளவான நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. ‘தான்தோன்றிக்கவிராயர்’ சில்லையூர் செல்வராஜன் எழுதிய ‘தணியாத தாகம்’ என்ற தொடரில் கமலினி அவர்களுக்கு அண்ணனாக ‘சோமு’ பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப்பாத்திரமும் இவருக்குப் பெரும்புகழைத் தேடிக்கொடுத்தது.
இவரது எழுத்தில் உருவாகி பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் தயாரித்தளித்த ‘கிராமத்துக்கனவுகள்’ என்ற தொடர் நாடகத்தின் மூலமும் புகழ் பெற்றார். ‘கிராமத்துக்கனவுகள்’ ஒலி நாடாவாகவும் வெளிவந்தது.
இவரது ‘வாத்தியார் வீட்டில்’ என்ற நாடகமும் புகழ் பெற்றது. இந்த நாடகத்தின் ஒலிப்பதிவு நாடாதான் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் அவர்கள் கரங்களில் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களால் வழங்கப்பட்டது. இதனைக்கேட்டே கமல்ஹாசன் அவர்கள் ‘தெனாலி’ திரைப்படத்தில் நடிக்கத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார், நடித்தார். இந்த விடயத்தை கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் கனடாவில் வாழ்ந்த காலத்தில் கமல்ஹாசன் அவர்களுடன் ஏற்பட்ட நேரடிச்சந்திப்பில் கமல்ஹாசன் அவர்களே நேரில் தெரிவித்து எமது கலைஞரை வாழ்த்தி, நன்றி கூறிப்பாராட்டியிருந்தார்.
‘ரூபவாஹினி’ தொலைக்காட்சியிலும் பல நாடகங்களை எழுதி நடித்துள்ளார். வானொலி – தொலைக்காட்சி என மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலம் கலைப்பணி புரிந்தார். நூற்றுக்கணக்கான நாடகங்களை வானொலிக்காக, தொலைக்காட்சிக்காக எழுதியுள்ளார். கலைக்கோலம், விவேகச்சக்கரம் போன்ற நிகழ்ச்சிகளை வானொலிக்காகத் தயாரித்தளித்துள்ளார். துடுப்பெடுத்தாட்டப்போட்டி வர்ணனையாளராகத் திகழ்ந்தார். மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இதில் ஏ.ரகுநாதன் அவர்கள் இயக்கிய ‘தேரோட்டிமகன்’ நாடகம் இவருக்குப் புகழ் சேர்த்தது.
இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ‘கரையைத்தேடும் கட்டுமரங்கள்’ இது அமுதன் அடிகள் இலக்கிய விருது பெற்றது. ‘நேற்றுப்போல இருக்கிறது’ இலங்கை சாகித்ய விருது, இலங்கை இலக்கியப் பேரவை, யாழ்.இலக்கிய வட்டம் விருதுகள் பெற்றன.
‘வாடைக்காற்று’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்துக்கொண்டார். இதில் உதவி இயக்குநராகவும் பணி செய்தார். அவள் ஒரு ஜீவநதி, நாடுபோற்ற வாழ்க, ஷர்மிளாவின் இதயராகம், Blending (ஆங்கிலப்படம்), அஞ்சனா (சிங்களம்), கனடா நாட்டில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள், மென்மையான வைரங்கள், சகா, என் கண் முன்னாலே, 1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.
தாகம், வாழ்வு, உனக்கு ஒரு நீதி என்கின்ற குறும்படங்களையும் இயக்கியுள்ளார். கனடாவில் வாழ்ந்து வந்த காலத்தில் அங்கே இயங்கி வருகின்ற CMR வானொலி, TVI தொலைக்காட்சி என்பனவற்றில் பல நாடகங்களை எழுதித் தயாரித்தளித்துவந்தார்.
இவரது ‘Wonderful Y.T.Lingam’ நிகழ்ச்சி 125 வாரங்களாக TVI தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இது கனடாவில் மாத்திரமல்ல ஐரோப்பா, ஒஸ்ரேலியா வாழ் ஈழத்தமிழ் மக்களையும் கவர்ந்து கொண்டது. தமிழ் நகைச்சுவைக் களத்துக்கு ஒரு புதிய வடிவம்.
இதற்கு முன்னர் தமிழில் இந்த வடிவத்தை யாரும் கையாண்டிருக்கவில்லை. கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் இந்த வடிவத்தை மிகச்சிறப்பாகக் கையாண்டுவந்தார்.
கலைஞர்கள், கனடா நாட்டுக்கு விஜயம் செய்கின்றவேளைகளில் அவர்களையும் இந்த ‘Wonderful Y.T.Lingam’ நிகழ்ச்சியில் பங்குபெற வைத்து அவர்களிடமிருக்கும் நகைச்சுவை அம்சங்களையும் வெளிக்கொணர்ந்து சிறப்பித்தவர்.
இதில் அவரது சமகால கலைத்துறை நண்பரான பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களை அந்த நிகழ்ச்சியில் வரவேற்றவிதமும், அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட விடயங்களும் வித்தியாசமாக அமைந்தன. மிகவும் சுவாரசியமாக இருந்தது. ‘Wonderful Y.T.Lingam’ என YouTubeல் இப்பொழுதும் விரும்புபவர்கள் பார்த்துரசிக்கலாம்.
கலைஞனாக கலைக்கும் தமிழுக்கும் ‘அண்ணை ரைட்’ கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஆற்றிய பணி காலந்தோறும் நிலைபெற்றிருக்கும். 2014 பெப்ருவரி 26ஆம் நாள் கனடாவில் அவரது 69வது வயதில் காலமானார்.
தகவல் எஸ்.கே.ராஜென் அவர்களது முகநூல் பதிவிலிருந்தும், விக்கிபீடியாவிலிருந்தும் பெறப்பட்டவை.இவற்றுக்கு யாழ்ப்பாணப் பெட்டகத்தின் மனமார்ந்த நன்றி தெரிவிக்கின்றது.