Friday, April 19

கமலினி. செல்வராஜன்

0

இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென் புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாக 1953 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம், தென்புலோலியில் பிறந்தவர். கமலினி இலங்கைத் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகையுமாவார். இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற ‘கோமாளிகள்’ திரைப் படத்தில் கதாநாயகியாக நடித்தார். ‘ஆதரகதாவ’ என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். வானொலி,தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்பாளருமான இவர் சுமார் 30 வருடங்கள் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக கடமையாற்றினார். கமலினி கொள்ளுப்பிட்டி சென்.அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென்.கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். களனிப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தந்தை மு. கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வரா சனைக் காதலித்துத் திருமணம் புரிந்துகொண்டார். சில்லையூர் செல்வராசன் எழுதிய ‘தணியாத தாகம்’ வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக ‘கமலி’ பாத்திரத்தில் நடித்தார். இலங்கை வானொலியில் ‘கலைக்கோலம்’ முதலான சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற் றைத் தயாரித்து வழங்கியிருக்கிறார். ரூபவாஹினியில் ஒளிபரப்பான அருணா செல்லத் துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய ‘திருப்பங்கள்’, எஸ். ராம்தாசின் ‘எதிர்பாராதது’, எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய ‘சமூகசேவகி’ போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றார். ரூபவாஹினியிலும், ஐ.ரி.என் தொலைக்காட்சியிலும் நிகழ்ச் சிகளைத் தயாரித்து வழங்கி வந்தார்.இவர் நாட்டுக்கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக கலாசார அமைச்சின் விருது 1995ஆம் ஆண்டும், கொழும்பு றோயல் கல்லூரி நாடகத்துறைக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கொழும்பு றோயல் கல்லூரியின் விருது 2008 ஆம் ஆண்டும், நோர்வே கலை மன்றம் நாட்டுக்கூத்து பாரம்பரியத்தைப் பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கௌரவ விருது 2010 ஆம் ஆண்டும், 35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் இளைஞர் நற்பணி மன்றம் கௌரவ விருது வழங்கியும் இவரைக் கௌரவித் தனர். 2015-04-07 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!