1896.02.24 ஆம் நாள் யாழ்ப்பாணம்- புத்தூர் என்ற ஊரில் பிறந்தவர். இவர் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் சக்கடத்தார் எனப்படுகின்ற செயலாளர் பதவியில் பணியாற்றியவர். அக்காலத்தில் கந்தர்மடத்தில் முன்னேற்றத்து முதல் நூற்றுவர் கழகம் ஒன்றினை நிறுவி அக்கழகத்து இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய பெரியார். பின்னர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள “லங்காஹோம்” என்ற மனையில் வாழ்ந்துவரும் காலத்தில் “யாழ்ப்பாணத்துக்கு ஒரு மத்திய இலவச தமிழ் வாசிகசாலையும் நூற்கழகமும்” என்ற பெயருடைய நூல்நிலையம் ஒன்றினை அமைப்பது தொடர்பாக தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சிட்ட விண்ணப்பப் படிவங்களை யாழ்ப்பாண மக்கள் மத்தியில் வெளியிட்டு இன்றைய யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையத்திற்கான அடிக்கல்லை ஆரம்பித்து வைத்தார். இதன் வளர்ச்சி நிலைக்காக வாசிப்பின் அருமை பெருமையை விளக்கி; பொதுமக்களிடமிருந்து சேகரிப்பதற்காக அச்சடித்த விண்ணப்பப்படிவங்களில் தமது விடுதி மற்றும் உத்தியோக விலாசத்தினையும் தெளிவாகக்குறிப்பிட்டு தனது கையொப்பத்துடன் இந்துசாதனம் சஞ்சிகையிலும் மற்றும் சிலோன் பிறீபிறெஸ் என்ற பத்திரிகையிலும் விளம்பரம் செய்தார். அவர் யாழ்ப்பாணத்துக்கு அப்பால் கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களிலெல்லாம் வாழ்கின்ற தமிழர்களிடம் மதவேறுபாடின்றி தங்களாலியன்றளவு நிதியினை ஐந்தோ, பத்தோ, இரண்டோ, இன்னும் குறையவோ, கூடவோ, உடனடியாகவோ அல்லது தவணைப் பணமாகவோ வழங்கி உதவுமாறு உருக்கமாக வேண்டி நின்றார். இவரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளினையேற்ற யாழ்ப்பாண சமூகம் 1934-06-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் ஒன்றுகூடி நூலகச் சபை ஆரம்பித்தலுக்கான செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறலாயிற்று. தலைவராக அன்றைய மாவட்ட நீதவான் சி.குமாரசுவாமி அவர்களும் உப தலைவராக வணக்கத்திற்குரிய கலாநிதி ஐசாக் தம்பையா அவர்களும் இணைச்செயலாளர்களாக அப்புக்காத்தர் சி.பொன்னம்பலம், சக்கடத்தார் க.மு.செல்லப்பா ஆகியவர்களும் தனாதிகாரிகளாக முதலியார் வேலுப்பிள்ளை, தபாலதிபர் முத்தையா ஆகியவர்களும் தெரிவுசெய்யப்பட்டு சிறந்ததொரு செயற்குழுவை கொண்டமைந்து யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையத்தினை உருவாக்கி அதனை அப்போதைய நகரசபையினரிடம் ஒப்படைத்து யாழ்ப்பாணத்தில் வாசிப்புப் பழக்கம் மற்றும் அறிவுப்பேரொளியை சுடர்விட்டெரியச் செய்த மகான் 1958.04.24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.