1872.10.20 ஆம் நாள் தெல்லிப்பளையில் சைவசமயியாகப் பிறந்தவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்றபோது கிறிஸ்தவராகிப் பின்னர் 1910 ஆம் ஆண்டு மீண்டும் சைவசமயியானவர். யூனியன் கல்லூரியில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றிய பின்னர் 1910 ஆம் ஆண்டு மகாஜனா என்ற உயர்நிலைப்பள்ளியை நிறுவி அதன் வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்தவர். இசை நாடகம், படைப்பிலக்கியம், சொல்லாடல், கவிதை ஆகிய துறைகளில் ஆற்றலுடையவர் பாவலரவர்கள் ஈழம் பெற்றெடுத்த புதுமைக் கவிஞர்களுள் ஒருவர். அவரது புகழை எமது நாடு இன்னமும் அறியவில்லை. அறியும்போது தேசியக்கவிஞர் வரிசையில் முதலிடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை என 1970-06-24 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தமை மனங்கொள்ளத்தக்கது. கலாநிதி செ.வேலாயுதபிள்ளையவ ர்கள் தனது ஒப்பியல் ஆய்வில் பாரதி தமிழ் நாடு தந்த செல்வம். அந்தப் பாரதியைப் போலவே கவிதை உள்ளம் படைத்த ஒருவர் ஈழநாட்டிலே – யாழ்ப்பாணத்திலே ஏறத்தாழ ஒரே காலப்பகுதியில் விளங்கினார். அவர் தான் பாவலர் துரையப்பாபிள்ளை. இற்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னே பிள்ளையவர்களின் பதங்களும், கீர்த்தனைகளும், கும்மிகளும், பிற பாடல்களும் யாழ்ப்பாணத்திலே பிரசித்தி பெற்றிருந்தன. அவரது கன்னிப்படைப்பான இதோபதேச கீதரச மஞ்சரி என்னும் நூல் 1901 ஆம் ஆண்டில் வெளிவந்தது.பாரதியாரின் முதற்கவிதையாகிய தனிமை இரக்கம் 1903-4 இல் வெளிவந்தது. இதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே துரையப்பா பிள்ளையின் கீதரசமஞ்சரி வெளிவந்துவிட்டது என 1972 இல் மகாஜனக் கல்லூரியால் வெளியிடப்பட்ட பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழாமலர் பக்கம் 65 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. பாவலர் சிவமணிமாலை, யாழ்ப்பாண சுதேசக்கும்மி, எங்கள் தேசநிலை என்பவற்றுடன் பல தனிப்பாடல் களையும் பாடியுள்ளார். 1960 ஆம் ஆண்டு மேற்கூறிய அனைத்தினதும் தொகுப்பாக சிந்தனைச்சோலை என்றபெயரில் மகாஜனக் கல்லூரியின் பொன்விழா நினைவாக வெளியிடப்பட்ட மலரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நாடக ஆசிரியராகவும் திகழ்ந்திருக்கின்றார். இவரால் எழுதப்பெற்ற சகலகுணசம்பன்னன் என்ற நாடகம் குறிப்பிடத்தக்கது. இவரால் நிறுவப்பெற்ற மகாஜனக் கல்லூரி இப்பிரதேசத்திற்கு எண்ணில்லா அறிஞர்களைத்தந்து தலைநிமிர்ந்து நிற்கின்றது எனக்கூறின் அதுமிகையாகாது. இவருடைய கனவை நினைவாக்கும் வண்ணம் தந்தை மகற்காற்றும் உதவி அவயத்து முந்தியிருப்பச் செயல் என்ற குறளின் வழியாக மகாஜனக் கல்லூரியை இன்றைய நிலைக்கு உயர்த்திய பெருமை அவரது மகன் மகாஜன சிற்பி தெ.து. ஜெயரத்தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1924-06-24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து இறைவனடி சேர்ந்தார்.