Tuesday, April 30

நடராசா,செல்லையா (கா.செ)

0

1930-03-21 ஆம் நாள் இணுவில் என்னுமிடத்தில் செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளின் செல்வப்புதல்வனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை பெரிய தந்தையாராகிய சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் இணுவில் சைவ மகாயனா வித்தியாசாலையில் தனது கல்வியைத் தொடர்ந்தார். தனது தந்தையாரின் சுருட்டுக்கொட்டிலுக்குச் செல்கின்ற வேளையில் அங்கு மகாபாரதம், இராமாயணம் ஆகியவை பற்றிய பூரண அறிவினைப்பெற்றுக்கொண்டார். தனது மாமனாராகிய வடிவேல் சுவாமிகளிடம் வேதாந்தம், உபநிடதம், கைவல்யம், தமிழ்க்காவியங்கள், நளவெண்பா, திருக்குறள் ஆகியவற்றை கற்றார்.சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். இக்காலத்தில் இணுவில் மக்களிடம் தானும் தனது நண்பர்களுடன் இணைந்து பிடியரிசி மூலம் சேகரித்த வருமானத்தினைக் கொண்டு பரமானந்தா என்ற பெயரில் வாசிகசாலையொன்றினை ஆரம்பித்தார். 1952 இல் ஆசிரியப்பணியினை ஏற்றுக்கொண்ட இவர் கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். 1990 இல் வள்ளுவரும் பிரபஞ்சமும் என்ற நூல் 1-4 வரையான திருக்குறளுக்கு எழுதிய புதிய உரையுடன் வெளிவந்தது. இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இந்து கலைக்களஞ்சியம் பாகம் இரண்டு பாகம் மூன்று ஆகிய தொகுதிகளில் இடம்பெற்றுள்ளது. 1992 இல் தெட்சணகைலாய புராணம் பாகம் ஒன்று,பாகம் இரண்டு ஆகியவற்றிற்கு எழுதிய உரையினை இந்துகலாசாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்து கலாசார அமைச்சு நடத்திய இரண்டாவது உலக இந்து மாநாட்டில் பெண் தெய்வ வழிபாடு என்ற ஆய்வுக்கட்டுரையினை சமர்ப்பித்தார். இணுவையூரின் அறிகைப் பண்பாட்டை விஸ்தாரமாக ஆராய்ந்து அதன் அழகியற் பரிமாணங்களை இளம் சந்ததியினருக்கு ஆதாரபூர்வமாகக் கையளித் தவர். இசைமரபு, இலக்கியமரபு, கூத்துமரபு, ஞானமரபு முதலாம் மரபுகளுக்கு வலுவும் உரமும் கொடுத்த ஆக்க நிலைத் திறனாய்வாளனாக விளங்கிய இவர் 2006-06-27 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!