1901 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோப்பாய் என்ற இடத்தில் பிறந்தவர். ஓவிய வித்தியாதிகாரியான சீ.எவ்.வின்ஸர் என்பவரின் தூண்டுதலினால் ஓவியக்கலையை வாழ்வாதார தொழிலாக அமைத்து 1938 ஆம் ஆண்டு கோப்பாயில் வின்ஸர் சித்திரக்கழகம் என்ற ஓவியப் பயிற்சிக்கழகத்தினை ஆரம்பித்து 1954 ஆம் ஆண்டு வரை நடத்தியவர். யாழ்ப்பாண ஓவியக்கலை வரலாற்றில் வின்ஸர் ஆரட் கிளப் இயங்கிய காலம் ஓவியக்கலையின் மலர்ச்சிக்காலம் என வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஓவியக்கலையை தன்னுயர் ஒப்பற்ற கலையாக மிளிரச் செய்த பெருமை இவருக்குரியதாகும்.பல்வேறு இடங்களிலும் சித்திர நுண்கலைச் சங்கம் என்ற பெயர்களில் ஓவியக்கலைச் சங்கங்களை உருவாக்கி இக்கலையில் ஆர்வமுடையவர் களை இணைத்து ஊக்கப்படுத்திப் பாடசாலைகள் தோறும் சித்திரக் கல்விக்குப் புத்துயிர் கொடுத்த பெருமை இவருக்குரியது. இவரது வழிகாட்டலில் இ.இராசையா, எம்.எஸ்.கந்தையா, கே.கனகசபாபதி, ஐ.நடராஜா, க.இராசரத்தினம், சானா. சண்முகநாதன் போன்றவர்கள் பயிற்சி பெற்று யாழ்ப்பாணத்து சிறந்த ஓவியர்களாகப் பரிணமித்துள்ளனர்.1917-1919 காலப்பகுதிகளில் ஓவிய ஆசிரியராக மானிப்பாய் இந்துக்கல்லூரியில் பணியாற்றிப் பின்னர் சென்னை ஓவியக்கல்லூரியில் பயிற்சி பெற்றார்.1921 இல் நாடு திரும்பிய இவரை சேர்.பொன் இராமநாதனவர்களால் பரமேஸ்வராக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.1927 ஆம் ஆண்டிலிருந்து வடக்கு கிழக்கு மாகாண ஓவியக்கல்விப் பரிசோதகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நிகழ்ச்சி சித்தரிப்பு ஓவியங்களை படைத்த இக்கலைஞன் 1964 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.