1941.07.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்தவர். வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் பல காலம் அதிபராகக் கடமையாற்றியவர். படைப் பிலக்கியம், சொல்லாடல் ,கிராமியக் கலைகள், நாடகம் எனப்பல்துறை ஆற்றலுடைய வர். தனது தந்தையாரான சின்னத்துரை அண்ணாவியாரிடம் நாடகக் கலையைப் பயின்றவர். பண்டத்தரிப்பு மகளிர் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் இவரால் தயாரிக்கப்பட்ட மேலும் கீழும் என்ற தாளலய நாடகத்தில் நடித்தது மட்டுமல்லாமல், 51 தடவைகள் மேடையேற்றியவர். மேலும் அக்கரைப் பச்சை, எனக்கென்னபயம், போன்ற நாடகங்களை மேடையேற்றியதுடன் பாடசாலை தமிழ்த்தினப் போட்டிகளில் இவரால் தயாரிக்கப்பட்ட இசை நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்களான திருப்பாற்கடல், தர்ம யுத்தம், சீதாபரணம், தாருகாவனம், வள்ளி திருமணம், அன்னப் பறவை, வண்ணக்கிளிகள் ஆகிய படைப்புக்கள் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குரும்பசிட்டியின் ஆக்கமும் அழிவும், சிறுவர் சிந்தனைக் கதைகள் ஆகிய நூல்களையும் ஆக்கியவர். குரும்பசிட்டி நுண்கலை மன்றம் என்பதனை உருவாக்கி நாடக, நடன, இசைத்துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவருடைய பணிகளைக் கௌரவிக்கும் வகையில் வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினர் கலைச்சுடர் விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. 2011.11.22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
