1916 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை வசாவிளான் தெற்கு குட்டியப்புலம் என்னும் இடத்தில் பிறந்தவர். தனது 19 ஆவது வயதில் நடிகமணி வைரமுத்துவினது வசந்த கான சபாவில் இணைந்து சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் இயமன் பாத்திரமேற்று நடித்தவர். இப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் நாடக உலகில் இயமன் மார்க்கண்டு என அழைக்கப்படலானார். அல்லி அருச்சுனா, சத்தியவான் சாவித்திரி, வள்ளிதிருமணம்,பூதத்தம்பி, ஞானசௌந்தரி, கோவலன் கண்ணகி, பவளக்கொடி ,மார்க்கண்டேயர், அரிச்சந்திரமயான காண்டம் போன்ற பல இசை நாடகங்க ளில் முக்கிய பாத்திரங்களேற்று நடித்தவர். இலங்கை வானொலியிலும், ரூபவாஹினி தொலைக் காட்சிச்சேவையிலும் இவரால் நடிக்கப் பெற்ற நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பப்பட்டன. பண்ணிசை மற்றும் கர்நாடக சங்கீதம், காவடி ஆகிய கலைகளிலும் ஆற்றல் பெற்றவர். மிகச்சிறந்த நவீன நாடகக் கலைஞனான வீ.எம். குகராஜா இவரது புதல்வன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1994 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.