பண்டிதர் க. ஈஸ்வரநாதபிள்ளை அவர்கள் ஈழத்து மரபுவழிக் கல்விப் பாரம்பரியத்தின் இறுதி வாரிசுகளில் ஒருவராக இருப்பவர். ஆசிரியப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் மிக நீண்ட மாணவர் பரம்பரைக்குச் சொந்தக்காரனாக விளங்குகின்றார். ஆங்கிலம், தமிழ் எனும் இரு மொழிகளிலும் புலமை கொண்ட இவர் இவ்விரு மொழிகளையும் மாணவர்களுக்குக் கற்பித்து வந்திருக்கின்றார்.
தமிழ்க் கல்வி
இவர் தமிழிலும் சைவ இலக்கியங்கள், தத்துவங்களிலும் ஆழ்ந்த புலமை உடையவர். தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் பண்டிதர்கள் வித்துவான்கள் முதலானோரிடம் முறைப்படி கற்றுணர்ந்தவர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, வித்துவான் வேந்தனார், வித்துவான் ந. சுப்பiயாபிள்ளை என்பவர்கள் இவரின் ஆளுமை வளர்;ச்சியில் கணிசமான பங்களிப்பினைச் செய்துள்ளனர். பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்களுடன் உடனுறைந்து இலக்கியங்களைக் கற்பதிலும் இரசிப்பதிலும் தனது ஆளுமையை வளர்த்துக் கொண்டுள்ளார். அதேபோல வித்துவான் க. வேந்தனாரிடம் சிலப்பதிகார காவியத்தினை ஐயந்திரிபற எழுத்தெண்ணிக் கற்றுள்ளார். இவரின் இலக்கண அறிவு வித்துவான் ந. சுப்பiயாபிள்ளை அவர்களால் பட்டை தீட்டப்பட்டிருந்தது. தமிழறிஞர் ஆ. சபாரத்தினம் அவர்கள் இவரின் கல்வியறிவினை நெறிப்படுத்தியோரில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒருவராவார். அவர் இவரது மாமனாருங் கூட.
குடும்பமும் தொழிலும்
பண்டிதர் க. ஈஸ்வரநாதபிள்ளை நாரந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதியின் சிரேஷ்ட புத்திரனாக 1937 ஆம் நாள் இவர் பிறந்தார். ஆரம்பக் கல்வியை நாரந்தனை கணேசா வித்தியாசாலையிலும் உயர் கல்வியினை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார். ஆங்கில மொழி வழியாகப் பயின்றதனால் அம்மொழியில் சரளமான புலமை அவருக்குண்டு. அதனாலே தான் ஆங்கில ஆசிரியராக அவர் நியமனம் பெற்றார். காரைநகர், வட்டுக்கோட்டைப் பாடசாலைகள் பலவற்றில் அவர் கற்பித்து வந்துள்ளார். பாடசாலையில் ஆங்கிலத்தினைப் போதித்து வந்தாலும் வீட்டில் மாணவர்களுக்கு தமிழைக் கற்பிப்பதிலும் அது தொடர்பான ஆர்வத்தினை வளர்த்தெடுப்பதிலும் ஆர்வங்காட்டி வந்தார்.
தனது வாரிசாகத் தமது மகனான குமரனை உருவாக்கிய பண்டிதர் க. ஈஸ்வரநாதபிள்ளை அவர்கள் மகனுக்குத் தேவையான தமிழறிவையும் தானே கற்பித்துள்ளார். அவரது மகன் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையிலே சிரேஷ்ட விரிவுரையாகவுள்ளார்.
விழாப் பேச்சுக்கள்:
பண்டிதர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர். 80கள் 90 களில் பல இலக்கிய மேடைகளில் அவரது குரல் ஒலித்திருக்கின்றது. குறிப்பாகக் கம்பன் கழகத்துடன் இணைந்து அவர் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவ்வேளையில் கம்பன் கழக விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று தனது ஆளுமையினை எடுத்துக்காட்டி வந்திருக்கின்றார். இதனை விட கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களுடன் இணைந்து குடாநாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்ற பட்டிமன்றங்கள், சுழலும் சொற்போர்கள், வழக்காடு மன்றங்கள், விவாத அரங்குகள் என்பற்றில் அவர் பங்கேற்று வந்துள்ளதைக் காணலாம். இவ்வாறான நிகழ்வுகள் கம்பராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம், சிலப்பதிகாரம் முதலான இலக்கியத் தலைப்புக்களின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இவ்விலக்கியங்களில் அவருக்கிருந்த அறிவும் ஆர்வமுமே இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் கருத்துக்களை வழங்கவும் உள்ளுரத்தினைத் தந்துள்ளன. நிகழ்வுகளில் மக்களின் இரசனை குன்றாது பேசுவதிலும் அவர்களின் இரசனை உணர்வுக்கு விருந்தளிப்பதிலும் அவர் பின்னிற்கவில்லை. ஏறத்தாழ இக்காலப்பகுதியில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு விழாக்கள் பலவற்றில் இவர் கலந்து கொண்டு வெளியீட்டுரைகளையும் மதிப்பீட்டுரைகளையும் ஆற்றியிருக்கின்றார்.
சமயச் சொற்பொழிவுகள்
பண்டிதர் அவர்கள் சிறந்த சமயச் சொற்பொழிவாளர். சைவத்தையும் தமிழையும் இரு கண்களாக நேசித்த அவர் ஆலயங்களில் மிக நீண்டகாலமாக சமயச் சொற்பொழிவாற்றி வந்திருக்கின்றார். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம், தீவுப்பகுதிகளில் இருந்த ஆலயங்களில் இவர் சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளன. சமய உண்மைகள், வாழ்வியல் நெறிமுறைகள், தத்துவங்கள் முதலானவற்றைத் தொனிப் பொருள்களாக இச் சொற்பொழிவுகள்; கொண்டிருந்தன. பொதுவாக திருவிழாக்காலங்களிலும் விசேட வைபவ தினங்களிலும், குருபூசை நாட்களிலும்; சொற்பொழிவுகள் நடைபெற்று வந்துள்ளதைக் காணலாம். சில ஆலயங்களில் புராண, இதிகாசக் கதைகளையும் அவை வெளிப்படுத்தும் தத்துவங்களையும் இவர் தொடர் சொற்பொழிவாகச் செய்ததுண்டு. மகாபாரதம், இராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்தொடர் சொற்பொழிவுகள் அமைந்தன. எடுத்துக் கொண்ட தொனிப்பொருளை மிக இலகுவாகவும், மக்கள் மனங்கொள்ளுமாறும் இவர் பேசி வந்துள்ளார். இனிய கம்பீரமான இவரது குரல் எல்லோரையும் கவர்வதாக அமைந்திருந்தது.
படைப்புகள்
பண்டிதர் அவர்கள் பல பக்தி இலக்கியங்களைச் செய்துள்ளார். அவை சிறு சிறு நூல்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவர் பிறந்த ஊரிலும் வாழும் ஊரிலும் உள்ள ஆலயங்கள் பலவற்றின் மீதும் இவை பாடப்பட்டுள்ளதைக் காணலாம். குறிப்பாக இவரது பிறந்த ஊரில் இருந்த தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்மன் மீது பல படைப்புக்களைச் செய்துள்ளார். சிறுவயது தொட்டு அம்மனின் மீது கொண்டிருந்த பக்தியும் பற்றும் ஆராக் காதலும் இப் படைப்புக்களுக்கு உந்து சக்தியாக இருந்து வந்துள்ளது. இற்றைவரை இறை பக்தியில் ஊறித் திளைத்த அவரின் இதயக் கமலத்தில் இருந்து வெளிவந்த உண்மையான பக்தியின் வெளிப்பாடாகவே இச் செய்யுள்கள் அமைந்துள்ளன.
யாப்பியல் மரபுகளை செவ்வையாக உள்வாங்கி இவை பாடப்பட்டுள்ளதைக் காணலாம். வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் மிகச் சிரமமான யாப்புக்களிலும்; அவர் செய்யுள்களை இயற்றியுள்ளார். இம்மியளவு பிசகினாலும் பொலிவிழந்து போகக் கூடிய இவ் யாப்புக்களை அவர் கையாண்டுள்ள இலாவகம் போற்றுதற்குரியது. விருத்தம், ஆசிரியப்பா என்பனவற்றில் அமைந்த பாடல்கள் பலவற்றையும் இவரது படைப்புக்களில் காணமுடியும்.
பல்வேறு சிற்றிலக்கிய வடிவங்களிலும் இவர் கவிபாடியமை குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதொன்று. அந்தாதி, நவரத்தினமாலை, இரட்டைமணிமாலை, ஊஞ்சல், பதிகம் (போற்றிப் பத்து, அடைக்கலப் பத்து), திருப்பள்ளியெழுச்சி, கும்மி என்பன இந்தவகையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. மேற்குறிப்பிட்ட சிற்றிலக்கிய வடிவங்கள் பற்றிய தெளிவும் அவற்றுள் பலவற்றைப் படித்த அனுபவமும், கருத்தூன்றி இரசித்த ஆர்வமும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு இலக்கியங்களைப் படைக்க உந்து சக்தியைக் கொடுத்துள்ளது.