1922-10-22 ஆம் நாள் கரவெட்டி கிழக்கில் பிறந்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர். கவீ என்ற புனைபெயரில் மரபுக் கவிதைகள் எழுதியவர். அவர் வெளியிட்ட தங்கக் கடையல் என்பது அவருடைய முதலாவது கவிதை நூல். கணியன் பூங்குன்றனார் செப்பிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற ஓர் உலகத்தினை, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் ‘ஓருலகம்’ (ழுநெ றுழசடன ஆழஎநஅநவெ) என்ற இயக்கத்தினை நடத்தியவர். தனது வாணி கலைக் கழகம் என்ற கல்விச்சாலை ஊடாக ஏராளமான மாணவர்க்கு, தமிழ் இலக்கியமும், இலக்கணமும் போதித்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா இவரது மாணாக்கராவார், 1968இல் திருநெல்வேலி சைவ சித்தாந்த கழகம் நடத்திய திருவள்ளுவர் தினப்போட்டியில் “பாரி உரையில் இலக்கணக் குறிப்புகள்” எனும் இவரது கட்டுரை பரிசு பெற்றது. இவர் எழுதிய நூல்கள் கதிரைமலைப்பள்ளு நாடகம் (நாடகம், 1962) கண்ணிற் காக்கும் காவலன் (கவிதைகள், 1965) செழுங்கமலச் சிலம்பொலி (சமயப் பாடல்கள், 1970) ஆகியன வாணி கலைக்கழகம் கரவெட்டியினூடாகவும், கருகம்பனை அருள்மிகு நாக இராஜராஜேஸ்வரி சதகம் – காந்தளகம் வெளியீடாகவும் (1988), இலக்கண விதி மூலகங்களும் விதிகளும் – திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த கழக வெளியீடாகவும் (1984), இலக்கணவிளக்கம் -(1968), கடலும் படகும் – இலங்கை வானொலியில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு (1971) – இலங்கை பண்டிதர் கழக வெளியீடாகவும், தங்கக் கடையல் ‘குழந்தைப்பாடல்கள் (இரண்டாவது பதிப்பு) எம்.டி.குணசேன நிறுவன வெளியீடாகவும் (1971) வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. 1996-10-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.