Saturday, April 5

ஞானப்பிரகாசர் (O.M.I) (வண.பிதா)

0

1875-08-30 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் என்னும் இடத்தில் பிறந்தவர். சுவாமிநாதபிள்ளை வைத்தியலிங்கம் என்னும் இயற்பெயருடைய இவர் சைவராகப் பிறந்து கத்தோலிக்கராக மதம் மாறியமையினால் ஞானப்பிரகாசர் எனப் பெயர் மாற்றம் பெற்றார். தேவஊழியரான ஞானப்பிரகாசர் எழுத்தாளர், வரலாற்றாசிரியர், பன்மொழிப்புலவர், மொழி நிபுணர் என பன்முக வகிபாகமுடையவ ராயினும் சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இத்தாலி, பிரெஞ்சு, கிரேக்கம், போர்த்துக்கீஸ், டச்சு, ஜேர்மன், சிங்களம், பாளி, திபெத் முதலாம் எழுபது மொழிகளில் எழுதவும் வாசிக்கவும் பேசவும் ஆற்றல் பெற்றிருந்தவர். அவருடைய இத்தகைய ஆற்றலை அவரால் ஆக்கித்தந்த சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.ஜேர்மன் அரசாங்கத்தினால் முத்திரை வெளியிடப் பெற்ற யாழ்ப்பாணத்தவர் என்ற பெருமைக்குரியவராவார். 1901-12-01 ஆம் நாள் சுவாமி ஞானப்பிரகாசர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.1898-02-17 ஆம் நாள் தன்னை சமயப் பணிக்காக அர்ப்பணித்து தனது முதலாவதுபணியை அச்சுவேலியில் ஆரம்பித்தார். தொடர்ந்து ஊர்காவற்றுறை மிஷனரி,நல்லூர் சென்பெனடிக்ற் தேவாலயம், கோப்பாய் தெற்கு தேவாலயம், நீர்வேலி தேவாலயம்,மட்டுவில் சென்ஜோசப் தேவாலயம், நாவற்குழி சென்ற் அன்ரனிஸ் தேவாலயம், சாவகச்சேரி சென்அல்போன்சா தேவாலயம், திருநெல்வேலி சென்பிரான்சிஸ் தேவாலயம் போன்றவற்றில் பொறுப்பானவாக விருந்து மறைப்பணியாற்றியதுடன் யாழ்ப்பாணத்தில் முப்பத்தேழு தேவாலயங்களை சமூகவலுக்குன்றிய மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் உருவாக்கி னார். சமயரீதியாகவும், மொழிரீதியாகவும்,கல்வி ரீதியாகவும் சமூகத்திற்குப் பல்வேறு பணிகளை யாற்றிய சுவாமிகள் பணம் படைத்தவர்களினது உதவிகளைப் பெற்று ஏழை எளியவர் எல்லோருக்கும் கல்வி,உணவு, உடை, உறையுள் அமைதியான வாழ்வு என்பனவற்றினை பெற்றுக் கொடுத்த சமதர்மக் கொள்கையுடையவர். நீர்வேலி அச்செழுப்பகுதியில் தன் பணிகளுக்கு உறுதுணை புரிந்த யூலன் ஆயரின் நினைவாக யூலனூர் என்ற குடியேற்றத்தட்டத்தினை உருவாக்கியதுடன் ஹென்றியரசர் என்ற பெயரிலும் உரும்பிராயில் புனித மிக்கேல் பெயரிலும் நீர்வேலியில் பரலோகமாதா பெயரிலும் தேவாலயங்களை ஸ்தாபித்துள்ளார். சமய சமூகப் பணிகளு டன் வரலாறு, மொழியியல், அகராதி, இடப்பெயர்ஆய்வு, தர்க்கவியல் ஆகிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்டு சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி , தமிழின் பூர்வசரித்திரமும் சமயமும், யாழ்ப்பாண சரித்திர ஆராய்ச்சி, யாழ்ப்பாண வைபவ விமர்சனம் போன்ற பல நூல்களை யாத்தது மட்டுமல்லாமல் தமிழைப்பற்றிய வரலாறு,தருக்கம், துறவுஞானம், கிறிஸ்துநாதன் சரித்திர ஆராய்ச்சி, கத்தோலிக்கத்திருச்சபையும் அதன் போதங்களும், தேவஆராதனைமுறை, ஆண்டவர் சரித்திரம் ஆகிய நூல்களை வெளியிட்டும், யாழ்ப்பாண அரசர், பண்டைய இந்திய சரிதையும் ஆண்டு சரிதையும், தமிழரின் சாதி உற்பத்தி ஆகிய நூல்களை ஆங்கிலத்திலும் வெளியிட்டு தமிழிற்குப் பெருமை சேர்த்தவர்.இலக்கியங்களுடன் தொல்லியலையும் பயன்படுத்தி தமிழர் வரலாற்றினை ஆராய்வதற்கான களம் அமைத்தமை, தனது மொழிப்புலமையால் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் கால வரலாற்றினை ஆராய்ந்து நவீனகால வரலாற்றினை தமிழ் அறிஞர்கள் ஆராய்வதற்கு களம் அமைத்தமை என்கின்ற இரண்டு தளங்களினாலும் பல்கலைக்கழக மட்டத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இன்றும் நிலைத்து நிற்கும் சுவாமியவர்கள் 1947-01-22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!