1933-06-13 ஆம் நாள் பிறந்தவர். ஈழத்தின் புகழ்பெற்ற சிறுகதையாசிரியர். சண்முகநாதன் நாகலிங்கம் என்பது இவரது இயற்பெயர். யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகத்தில், நகர மண்டபக் காப்பாளராகக் கடமையாற்றினார். யாழ்வாணன், முருகேசு நாகலிங்கம் – செல்லையா லட்சுமி ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக அனுராதபுரத்தில் பிறந்தார். இவர் மனைவி பெயர் தபோநிதி; மகன்கள்,யாழ் சுதாகர், சுரதா யாழ்வாணன், சுரேஷ் யாழ்வாணன் மற்றும் கண்ணதாசன் யாழ்வாணன் மகள், யாழினி. ஈழத்து இலக்கிய உலகில் யாழ்வாணன் என்ற பெயர் நன்கு புகழ்பெற்றது. நகர மண்டபக் காப்பாளராக அவர் கடமையாற்றும் யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகத்தில்கூட நா.சண்முகநாதனிலும் பார்க்க யாழ்வாணனே முக்கியமானவர். யாழ். இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் யாழ். வாணனும் ஒருவர். தொடக்க காலத்திலிருந்தே அதன் செயலாளராகப் பணிபுரிந்தார். யாழ். இலக்கிய வட்டத்தின் வளர்ச்சிக்கான காரணங்களுள் அவரது அயராத அடக்கமான உழைப்பு மிகவும் முக்கியமானதொன்று. யாழ்வாணன் அவர்கள் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட சுகாதார ஒலி என்ற பத்திரிகையின் ஆசிரியர். 1968ஆம் ஆண்டு நடைபெற்ற சுகாதார – குடிநல வார விழாக்குழுவின் செயலாளராகக் கடமையாற்றியதுடன், எழில்மிகு யாழ்ப்பாணம் என்ற வாடா மலரையும் வெளியிட்டு அறிஞர் பெருமக்களின் பாராட்டுதல் களையும் அவர் பெற்றுள்ளார். அண்ணா அஞ்சலி அவரது மற்றுமோர் தொகுப்பு நூலாகும். கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இலக்கிய விழாக்கள், நாடக – நடன விழாக்கள், பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றை செம்மையாக ஒழுங்குசெய்து சிறப்பாக நடத்தி முடிக்கும் யாழ்.வாணனின் மந்திர சக்தியையும் பலர் அறிவர். சிறந்த சிறுகதையாசிரியராக யாழ்வாணன் பல பரிசுகளைப் பெற்ற எழுத்தாளர். பரந்த சமூக சேவையாளரான யாழ்வாணன் நிறைந்த நல்லியல்புகளைக் கொண்ட பண்பாளர். 1987ஆம் ஆண்டு அவர் தனது பணியில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். அக்டோபர் 5, 1996 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.