மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இவர் சிறந்த தமிழறிஞர். செய்யுள்யாப்பதில் வல்லவர். 1892 ஆம் ஆண்டு மட்டுவிலில் பிறந்தவர். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அக்காலத்தில் விழா மலர்களிலும், பாராட்டு விழாக்களிலும் இவரது பாடல்கள் சிறப்பாக இடம்பெற்றன. குருகவி என அழைக்கப்பட்ட இவர் கற்பனைச்சுரங்கம் எனவும் போற்றப்பட்டவர். தமிழகத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது சைவப்பிரகாச வித்தியாசாலையில் அதிபராகவும், ஈழத்தமிழர்களின் வரலாறு கூறும் ஈழ மண்டல சதகம் என்னும் நூலின் ஆசிரியருமான மட்டுவில் ம.க.வேற்பிள்ளை அவர்களின் புதல்வனுமாவார் “இருடி கருப்பத்திற்கு இனி என்ற வார்த்தை யில்லை. மகாலிங்கசிவத்திற்கு பிறகு என்ற பேச்சில்லை”என்று இலக்கிய கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளையவர்கள் குறிப்பிடுகின்றமையிலிருந்து இவரது இலக்கிய ஆற்றல் கவிப்புலமை களை நாம் உணரக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 1941 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.