Saturday, April 5

சின்னையனார், சின்னத்தம்பி

0

கச்சாயூர் செந்தமிழ்ப்புலவர் என அழைக்கப்பட்டுவரும் புலவரவர்கள் 1895-03-02 ஆம் நாள் தில்லையம்பல முதலியாரின் பரம்பரையில் பிறந்தவர். மீசாலை வித்துவான் ஏகாம்பரநாத பண்டிதரவர்களிடம் இலக்கிய, இலக்கண அறிவினைப் பெற்றுக் கொண்டார். புராண இதிகாசங்களை கற்றுத் தெளிவு பெற்றிருந்த புலவரவர்கள் ஆலயங்களிற்குச் சென்று புராணக்கதைகளைக் கேட்டுத் தனக்குள் புராணங்களுக்குப் பயன் சொல்லும் திறமையை வளர்த்துக்கொண்டார். ஆலயங்களில் புராணங்களுக்குப் பயன் சொல்வதற்கு சின்னையனார்தான் வரவேண்டுமென்ற நிலை தென்மராட்சி ஆலயங்களில் ஒரு காலத்தில் உருவாகுமளவிற்கு இவரது பயன் சொல்லும் நுட்பம் அமைந்திருந் தது. தமது காலத்தில் தமிழிற்கும் சைவத்திற்கும் தம்மை அர்ப்பணித்த இவரது தமிழ்நூல் முயற்சிகளாக 1945 இல் கதிர்காம யாத்திரைப் பாராயணப் பிரபந்தம், 1955 இல் கதிர்காம யாத்திரைப் பாராயணப் பிரபந்தத்தின் அநுபந்தம்,1957 இல் திருமலை யாத்திரை,எங்கள் கதிர்காமம்,1963 இல் மலைக்கோவை, 1967 இல் தமிழ்மொழி ஆராய்ச்சி இலக்கியம்.1970 இல் குடும்ப வாழ்வியல் அத்துவிதம் (உரைநூல்) ஆகிய நூல்களை வெளியிட்டார். கொடிகாமம் திருநாவுக்கரசு மடாலயம், கச்சாய் தமிழ் இலக்கிய மன்றம், மீசாலை தமிழ் இசை மன்றம், மகாஜன சபை, தென்மராட்சி முத்தமிழ் மன்றம் ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர். பண்டிதர் சச்சிதானந்தன், பொன் முத்துக்குமாரன், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, இரசிகமணி கனக செந்திநாதன், செந்தமிழ் கரலமாமணி க.பொ.இரத்தினம் ஆகிய பெரியார்களின் பாராட்டுக்களையும் அன்பையும் பெற்றவர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!