Thursday, January 2

கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் (சோ.ப)

0

 ஈழத்துக் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் (சோ.ப) அவர்கள்; யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில்;  14.09.1939 ஆம் நாள் பிறந்து தற்போது பொற்பதி வீதி, கொக்குவிலில் வாழ்ந்து வருகிறார்.  கவிஞர் சோ.ப அவர்கள் சோமசுந்தரம்பிள்ளை மாணிக்கம்  தம்பதியரின் மூன்றாவது புதல்வனாவார். மனைவி சிவசோதி பிள்ளைகள் என மகிழ்வாக வாழ்ந்து இலக்கியப்பணி புரிந்து வருகின்றார். தனது கல்விப் பாரம்பரியத்தினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் வித்துவான் கார்த்திகேசு, ‘கொம்யூனிஸ்ற்’ கார்த்திகேசன் முதலியோரிடமும் ஆசிரியப் பயிற்சிக் காலத்தில் கலாநிதி கு.சிவப்பிரகாசத்திடமும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பியிடமும் பட்டப்பின் படிப்பில்  Frank Palmer, David Crystal ஆகியோரிடமும் கற்க வாய்த்தமையைப் பெரும் பேறாகக் கருதுகின்றார் சோ.பத்மநாதன் அவர்கள். சிறப்புக் கலைமாணி, டிப்ளோமா கல்வி, (Jaffna) Dip.in.Gen & App.Linguistics, (U.K)) ஆகிய பட்டங்களைப் பெற்றவர், சிறப்புப் பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியராக 18 வருடங்களும், ஆங்கில விரிவுரையாளராக 13 வருடங்களும், பலாலி ஆசிரிய கலாசாலை அதிபராக 03 வருடங்களும் கல்விப்பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கல்விப்புலமையாளனாக தன்னை அடையாளப்படுத்திய போதிலும் அவருக்கிருந்த கவிதையின் மீதான அதீத ஈடுபாடு அவரை ஒரு மாபெரும் ஈழத்துக் கவிஞனாக அடையாளப்படுத்தியது. இவர் கவிதையின் மீது கொண்டிருந்த விருப்பமும் கவிதை புனைவதிலும் அதை அளிக்கை செய்வதிலும்; அவருக்கிருந்த லாவகமும் பின்வரும் தொகுப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் செய்ய வழி வகுத்தமை கண்கூடு.  குறிப்பாக 1998 இல் வடக்கிருத்தல் (கவிதைகள்) 2005 இல் நினைவுச்சுவடுகள் (கவிதைகள்) 2010 இல் சுவட்டெச்சம் (கவிதைகள்) ஆகிய சுய ஆக்கப்படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

பிறமொழி படைப்புகளின் மொழிபெயர்ப்புகளாக 2001 இல் ‘ஆபிரிக்கக் கவிதைகள்’ 2003 இல் ‘தென்னிலங்கைக் கவிதை’  2011 இல் ‘பர்மியபிக்கு சொன்ன கதைகள்’ 2017 இல் ‘தென்னாசியக் கவிதைகள்’ வெளிவந்தன.

சோ.ப. அவர்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த படைப்புகளாக 2013 இல் Tamil Short Stories from Sri Lanka , 2007 இல் Shanmugalingam : Plays,  2014 இல் Sri Lankan Tamil Poetry, 2021 இல் Shanmugalingam : Heaven with Hell   ஆகியனவும் வெளிவந்தன. சோ.பவின் கவிதைகள் 2021 இல் Athirthikalkkappuram என்ற நூலாக மலையாள மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இவரது  கவிதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு 2022 இல் வெளிவந்துள்ளது. வ்ருத்தோபநிஷத் என்னும் முதுமை பற்றிய தெலுங்குக்கவிதைகளின் தமிழாக்கம் 2022 இல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டு  வெளியான நோக்கு  (ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு) A Sopa Miscellany (Papers)  ஆகிய நூல்கள் சோ.ப அவர்களை ஓர் ஆய்வாளனாக நிறுத்தியுள்ளதனை கவனத்திற்கொள்ளலாம்.

ஈழத்துக்கவிஞனாக தன்னை அடையாளப்படுத்தி அவர் பங்குபற்றிய மாநாடுகள்  ஏராளம். அவற்றில் 2013 தொடக்கம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்ற சார்க் இலக்கிய மாநாட்டிலும் (தில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர்) 2017ஆம் ஆண்டு ஜேர்மன் கலாசார மையத்தின் ஏற்பாட்டில் ப்ராங்ஃபோட், கார்ல்ஸ்றூ, மும்பாய், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற “கவிதையை மொழிபெயர்க்கும் கவிஞர்கள்” அமர்வுகளிலும் 2010 இல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு,  2016 இலும் 2017 இலும்  யாழ்.பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அனைத்துலக இந்துமாநாடு, 2019 இல் பாரிஸில் நடைபெற்ற நாலாவது ஐரோப்பிய தமிழாராய்ச்சி மாநாடு, இந்து கலாசார திணைக்களம் ஆண்டு தோறும் நடாத்தும் மாநாடுகள்  ஆகியவற்றில் பங்குகொண்டு தமிழின் பெருமையை கவிதைகளினாலும் கட்டுரைகளினாலும் இனிய பேச்சினாலும் வெளிப்படுத்தியுள்ளார் சோ.ப.

சைவ வித்தியாவிருத்திச் சங்கத் தலைவராகவும்,  யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஆய்வுப் பரிசீலனைக்குழு (ERC) உறுப்பினராகவும், ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் பரீட்சைச் செயலாளராகவும், இளங்கலைஞர் மன்றத்தின் காப்பாளராகவும் சமூகப்பணியாற்றிவரும் இவரது அயராத பணிகளுக்காக இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷண விருதும், வடக்கு கிழக்கு மாகாணம் ஆளுநர் விருதும் வழங்கின. படைப்புகளுக்கான அரச சாகித்திய மற்றும் மாகாண இலக்கிய விருதுகளையும் பெற்றதுடன் 2020இல் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சைவசமய விவகாரக் குழுவினரின் யாழ் விருதினையும், அதே ஆண்டில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் சிவத்தமிழ் விருதினையும், 2021 ஆம் ஆண்டில் யாழப்பாண மாவட்ட கலை, கலசாரப் பேரவையின் யாழ்முத்து விருதினையும் பெற்று சோ.ப அவர்கள்  இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!