மாமரத்தில் இணைந்த பெயர் பெற்ற கோயிலாக விளங்கும் இவ்வாலயம் இற்றைக்கு200 வருடங்களுக்கு முன்னர் முறிகண்டி விநாயகரில் பற்றுக்கொண்டு சாவகச்சேரி தெற்குப் பகுதியில் வாழ்ந்த சுப்பு உடையார் என்பவரது பெற்றோர் தமது காணியில் விநாயகர் கோயிலை ஓலைக்கொட்டிலால் அமைத்து வழிபட்டு வந்தனர். இவர் ஒரு நாள் தமது கோயிலில் வழிபடச் சென்றவேளை கோயில் அமைந்துள்ள மாமரத்திலிருந்து அழகிய மாம்பழம்ஒன்று ஆலய முகப்பில் வீழ்ந்து கிடக்கக்கண்டார். அம்மாங்கனி விநாயகரின் அருள் என நினைத்த உடையார் அதனை விநாயகருக்கு வைத்து வழிபட்ட பின்னர் அப்பழத்தை வெட்டிச் சுவைத்துப் பார்த்தார். பழமானது தேன்சுவை மிகுந்ததாகவும், நிறைந்த சதைப்பிடிப்பானதாகவும், விதை சிறிய சப்பைவடிவிலும் அமைந்திருந்ததனாலும் ஆலயத்திற்கு சப்பச்சி மாவடிப்பிள்ளையார் என்ற பெயர் உருவானது. கோவில் ஆரம்பிக்கப்பட்ட நாள் எனக் கருதப்படும் தை மாத ரேவதி நட்சத்திரத்தில் நடைபெற்றுவந்த அலங்காரத்திருவிழாவானது 1995 ஆம் ஆண்டிலிருந்து வைகாசி மாத பூரணை தினத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் பத்து நாட்கள் மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுவருவது வழக்கம்.