யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. தெல்லிப்பளையில் நெடுஞ்சாலையைப் பார்த்தவாறு கிழக்கு வாசல் கொண்டு எழுந்தருளி இருப்பது துர்க்காதேவி தேவஸ்தானம். யாழ்ப்பாணத்து தெல்லிப்பளை கொண்டுள்ள பிரிவுகளில் உழவுத் தொழிலைக் கைக்கொண்டு வரும் குடிமக்கள் வாழ்ந்திருந்தனர். இவர்களில ;உழுகுடைப்பதி வவுணாவத்தையில் சைவமரபில் வந்த சைவப்பெரியார் கதிர்காமர். இவரது காலம் 18ஆம் நூற்றாண்டு. இவர் 1750இல்இந்தியாவிற்கு தலயாத்திரைக்காகப் புறப்பட்டு காங்கேசன்துறையில் கப்பல் ஏறி வேதாரணியத்தை வந்தடைந்தார். அவர் அங்கிருந்து பாதயாத்திரையாக தல வழிபாடு செய்துகொண்டு காசியை அடைந்தார்.அங்கு அவருக்கு ஒரு ஞானகுரு வாய்க்கப் பெற்றார். அக் குரு தேவிஉபாசகர். இக்காலத்தில் இவர் தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்றுத் தேறி குருவின் வழியைப் பின்பற்றி இவரும் ஒரு துர்;க்கை உபாசகராக மாறிவிட்டார். இந்தியாவிலுள்ள அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் கீர்த்தி பெற்றது சொப்பனேஸ்வரி ஆலயம், அங்கு துர்க்காதேவி சகல கலைகளுடனும் பொழிவுற்றுத் திகழ்கின்றாள். இங்கு வழிபடும் அடியார்கள் தாம்பாளங்களில் ஸ்ரீ சக்கரம் வைத்து பூஜை செய்தல் இவ் ஆலயத்திற்கான சிறப்பு அம்சமாகும். இக்கோயிலைத் தரிசிக்கும் பொருட்டு கதிர்காமரும் வேதாரணியத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு அவ்வாலய மரபிற்கமைய ஸ்ரீசக்கரம் அமைத்து பூஜை செய்து வந்தார்.இவ்வாறாக பத்து ஆண்டுகள் கழிந்த பின்அவர் தாம் தேவி பூசை செய்த ஸ்ரீ சக்கரத்தையும் அப்பூசையிற் பயன்படுத்திய வெண்கலத்தினாலான தீர்த்தக் கெண்டியையும் எடுத்துக்கொண்டு 1760ஆம் ஆண்டு இலங்கைக்கு கடல் வழியாக வந்து காங்கேசன்துறையில் இறங்கினார். கதிர்காமர் பின்னர் கீரிமலைக்குச் சென்று தீர்த்தமாடி அப்புண்ணிய தலத்தில் தான் கொண்டுவந்த ஸ்ரீசக்கரத்திற்குப் பூஜை செய்தார்.இதுவே இலங்கையில் செய்த முதலாவது ஸ்ரீசக்கர பூஜை என அறிஞர் பெருமக்கள் கூறுவர்.பின்னர் கால்நடையாக உழுகுடைப் பதியை அடைந்தார். இப்பகுதி கீரிமலையிலிருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் உள்ளது. வெய்யிலும் உடல் தளர்ச்சியும் இவரை ஆட்கொள்ள இப்பகுதியில் இலுப்பைக் காட்டுக்குள் ஒரு இலுப்பை மரத்தடியில் படுத்து உறங்கினார். வேதாரணியத்திலிருந்து கால்நடையாக காசிவரை பாதயாத்திரை செய்த கதிர்காமருக்கு மூன்று மைல் தூரம் நடந்து வர சோர்வு வந்தது திருவருளே. கதிர்காமர் இலுப்பை மரத்தடியில் படுத்துறங்கும் போது துர்க்காதேவி கனவிலே காட்சிகொடுத்து இந்தியாவிலிருந்து கொண்டு வந்த சக்கரத்தை அங்கேயே ஸ்தாபித்து வழிபடுமாறு கூறி மறைந்தருளினார். அம்மனின் திருவருட்காட்சியைப் பெற்ற மகிழ்ச்சியில் கதிர்காமரும் அவ்வாறே செய்தார். இலுப்பைக் காட்டில் நாக சர்ப்பங்கள் வருவதுண்டு. அவை பூஜை முடிந்தவுடன் மறைந்துவிடும். ஸ்ரீ சக்கரம் ஸ்தாபித்த இடமே தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயம். இவ்வாலயம் கதிர்காமரால் பராமரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.ஆரம்பத்தில் சிறு கோவிலாக இருந்த இவ்வாலயம் 1820இல் வெள்ளைக்கல் திருப்பணிசெய்யப்பட்டு புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாழ். கச்சேரி பதிவின் பிரகாரம் 1820இல் துர்க்காதேவி ஆலயம் கற்கோவில்என்று பதியப்பட்ட செய்தி சான்றாக உள்ளது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுடன்நெருங்கிய தொடர்புடைய இக்கோயிலானது திருநாகநாதர் என்பவரால் தனி முகாமையாளராக நிர்வகிக்கப்பட்டு பின்னர் 1949 இல் தர்மகர்த்தாசபையினை உருவாக்கினார். துர்க்கா துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களது நிர்வாகத்தில் இக்கோயிலானது அதி உன்னத வளர்ச்சி நிலையினை அடைந்ததெனலாம். 1968 இல் முதன்முதலாக மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டது.அன்றிலிருந்து வருடந்தோறும் ஆவணி திருவோண திதியினை தீர்த்தோற்சவமாகக் கொண்டு மகோற்சவம் நடைபெற்று வருவது வழக்கம். தற்பொழுது திருவாளர் ஆறுதிருமுருகன் அவர்களது தலைமையில் கோயில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.