யாழ்ப்பாணம், நவாலி என்னுமிடத்தில் களையோடை என்னுமிடத்திலுள்ள குறிச்சியில் இவ்அம்மன் ஆலயம் காணப்படுகின்றது. இவ்வாலய வரலாறானது கர்ணபரம்பரைக் கதையொன்றின் மூலமே அறியமுடிகின்றது. 200 வருடங்களுக்கு முன்னர் இவ்வயலப் பகுதிக்குச் சென்ற ஒருவர் மண்மேடொன்றில் கையில் தடியுடன் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்டார். அம்மூதாட ;டி அவரை தன்னருகே அழைத்து “மகனே எனக்குத்தாகமாக இருக்கின்றது தண்ணீர் கொஞ்சம் தருவாயா” என்று கேட்க அவர் இவ்விடம் தண்ணீர் இல்லை எனது வீட்டிற்குப் போக வேண்டும் என்று கூறி, அம் மூதாட்டியை அழைத்துச் சென்றார். பாதி வழியில் எனக்கு களைப்பாக இருக்கின்றது நான் இங்கேயே இருக்கிறேன் நீ போய்த் தண்ணீர் கொண்டு வா எனக்கூற அவரும் தனது வீட்டிற்குப்போக முயன்ற வேளையில் மகனே கொஞ்சம் நில் என்று மூதாட்டி கூறி தனது கைத்தடியை நிலத்தில் ஊன்றினார். நீர் அவ்விடத்தில் பீறிட்டுப் பறந்தது. அதனை மூதாட்டி கைகளில் ஏந்திப் பருகினார். பின்னர் அம்மனிதனை மூதாட்டி தான் இருந்தமேட்டிற்கு அழைத்துச் சென்று தனது தலையில் இருக்கும் பேனை எடுத்து விடும்படி கேட்டார். அம்மனிதன் தனது மடியில் மூதாட்டியின் தலையை வைத்து கோதும்போது தலை முழுவதும் கண்களாக இருப்பதைக்கண்டு மூர்ச்சையானார். அவர் மூர்ச்சை தெளிந்து விழித்துப் பார்த்தபோது மூதாட்டியைக் காணவில்லை. அன்று இரவு கனவில் தோன்றி மூதாட்டியாக வந்தது கண்ணகை அம்மனே என்று கூறி தான் தண்ணீர் பருகிய இடத்தில்கோயிலமைத்து வழிபடுமாறு கூறியருளினார்.இதனாலேயே இவ்விடத்தில் ஆலயம் எழுந்தது. இரண்டு முழமேயான இக்கிணற்றில் நன்னீரே காணப்படுகின்றது. ஆனால் சுற்றுவட்டாரங்களில் உவர்நீரே காணப்படுவது கண்ணகி அம்மனின் புதுமையல்லவா?