Saturday, April 5

சண்முகலிங்கன் ஐயாத்துரை (குப்பிழான் ஐ.சண்முகன்)

0

.அழகியலும்; சமூகப்பார்வையும் இணைந்து கைகோர்க்கும் பல தனித்துவமான படைப்புகளின் சொந்தக்காரர் குப்பிழான் ஐ.சண்முகன் என்னும் புனைபெரருடையவர். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கிய  கலை இலக்கிய அமைப்புகளின்; செயற்பாட்டாளர். சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்தி என்ற பல்வேறு வடிவங்களில் இயங்குபவர். பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் எனத் தனது  ஊடகங்களை விரித்துக்கொண்டவர்.  நல்லதொரு பேச்சாளர் என்பதையும் சமய, இலக்கிய நிகழ்வுகளில் நிரூபித்து வருபவர். நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர்.  ஆளுமையும் இலக்கிய ஆர்வமும் மிக்க இளைஞர் அணியொன்றின் உருவாக்கத்தின் பின்புலமாக ஆர்ப்பாட்டமின்றி இயங்கி வருபவர்.

குப்பிழானில் ஐயாத்துரை இரத்தினம்மா தம்பதியினரின் மூத்த மகனாக 1.8.1946 இல் பிறந்தவர்தான் சண்முகலிங்கம் அவர்கள். தனது ஊர்ப்பற்றின் விளைவால் குப்பிழான் ஐ.சண்முகன் என்று எழுதிவருகின்றார். குப்பிழான் விக்னேஸ்வராக் கல்லூரி, புன்னாலைக் கட்டுவன் மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலை, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றவர். 1966 ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று  பொருளியல், தமிழ், ஐரோப்பிய வரலாறு ஆகிய பாடங்களைக் கற்றுத் தேறியவர். பல்கலைக்கழகத்தில் கற்கின்ற காலத்திலேயே எழுதுவினைஞராக நியமனம் பெற்றார். 1968 செப்ரெம்பர் முதல் 1984 மார்ச் வரைக்கும் பரீட்சைத்திணைக்களத்திலும், யாழ்ப்பாணம், கல்முனை கல்வித்திணைக்களங்களிலும் பணிபுரிந்தார். மிக மென்மையானவராக இருந்த போதிலும் 1980 இல் இடம்பெற்ற பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஒன்றரை வருடகாலம் தொழிலின்றி இருந்தார். எழுத்தாளர்களான சட்டநாதன், ஆனந்தமயில் ஆகியோரும் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தார்கள்.  தனது பதினான்கு வருட எழுதுவினைஞர் வேலையைத் துறந்து 1984 ஆம் ஆண்டு ஆசிரியப்பணிக்கு வந்து சேர்ந்தார். நெல்லியடி மத்திய கல்லூரியில் நியமிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு ஓய்வுபெறும்வரை அப்பாடசாலையிலேயே தனது பணியைக் காத்திரமாக வழங்கியவர். 2001 ஆம் ஆண்டில் இருந்து 2003 ஆம் ஆண்டு வரை அவரிடம் கற்கும் பேறு எனக்குக் கிடைத்தது. 1975 ஆம் ஆண்டு மயில்வாகனம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மகளான புனிதவதி அவர்களைத் தனது வாழ்க்கைத் துணை ஆக்கிக்கொண்டார். இலக்கிய ஈடுபாடும் எழுத்து ஆர்வமும் மிக்க அவரைத் தனது எழுத்துக்களின் முதல் வாசகியாகவும் ஆலோசகராகவும் பெறும் கொடுப்பினைக்குரிய வரானார்.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கற்கின்ற காலத்திலேயே (1965) அக்கல்லூரி இதழிலே ‘இலக்கியத் திறனாய்வு’ என்ற தனது முதலாவது கட்டுரையை எழுதி இலக்கிய உலகிற்குள் நுழைந்துகொண்டார். 1966 ஆம் ஆண்டு ராதா என்ற இதழில் பசி என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதினார். தொடர்ந்து இன்றுவரை சுதந்திரன், விவேகி, வீரகேசரி, கற்பகம், மல்லிகை, மங்கை, அலை, ஏகலைவன், கலைமுகம், திருவுடையாள், ஈழநாடு, நுட்பம், இளம்பிறை, எழில், ஆகவே, தளவாசல், தீபம் ஆகியவற்றில் எழுதியவர், எழுதிவருகின்றார். கற்பகம் சிறுகதைகள் என்ற தொகுதியிலும் கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ சங்கம் வெளியிட்ட உயிர்ப்புகள் தொகுதியிலும் இவரது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளளன. ஆயினும்  சுதந்திரன் சிறுகதைகள், மல்லிகை சிறுகதைகள், ஈழநாடு சிறுகதைகள் ஆகிய தொகுதிகளில் இவரது சிறுகதைகள் ஏதோ ஒரு வகையில் புறக்கணிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

1966 – 1975 ஆண்டு காலப்பகுதியில் இலங்கை வானொலியில் இளைஞர் மன்றம், கலைக்கோலம் ஆகிய நிகழ்ச்சிகளில் தனது படைப்புகள் மூலம் கவனம் பெற்றவராகவும் இவர் விளங்கியிருந்தார். வ.இராசையா அவர்களால் வானொலியில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தனது விஞ்ஞான ஆசிரியரான அம்பி, கு.குருசாமி,  பேராசிரியர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோருடன் பல நிகழ்ச்சிகளில் இணைந்திருக்கின்றார். வ.இராசையா அவர்கள் இவருடன் நேர்காணல் ஒன்றை நிகழ்த்தியிருக்கின்றார். மேலும் இளம் எழுத்தாளர் என்று இவரையும் இளம் விமர்சகர் என்று ஸ்ரீபதி அவர்களையும் பேராசிரியர் சிவத்தம்பி நேர்கண்டு ஒலிபரப்பியதை இன்று நினைவு கூறுகின்றார்.  தொடர்ச்சியாக தினக்குரல், சரிநிகர், மூன்றாவது மனிதன், புதிய தரிசனம் ஆகிய இதழ்களிலும் டாண் தொலைக்காட்சி, யாழ் பண்பலை மற்றும் நூலக நிறுவனத்தின் ஆவணககாப்பகத்திலும் இவரது விரிவான நேர்காணல்கள் பதிவாகியுள்ளன.

ஈழத்து எழுத்தாளர்களுடனும் தமிழகத்து எழுத்தாளர்களுடனும் இவர் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்திருக்கின்றார். அசோகமித்திரன், தஞ்சைப் பிரகாஸ் போன்றவர்கள் எழுதிய கடிதத்தை இன்றும் பாதுகாத்து வருகின்றார்.

‘கோடுகளும் கோலங்களும் நானும் படித்தேன். என் குடும்பத்தாரும் படித்தார்கள்;.  இன்ப வேதனைகளின் இழையொன்று எல்லாக்கதைகளிலும் தென்படுகின்றது.  …தங்களுக்கு இயல்பாகவே சிறுகதை உருவம் அழகாக அமைந்துவிடுகின்றது. தங்களுடைய நடை, கதைகளின் தொடக்கமும் விரிவடைதலும், தாங்கள் கதை சொல்லத் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் இவையெல்லாம் குறையற்றே காணப்படுகின்றன. ( ஜூன் 27, 1977)

என்று அசோகமித்திரன் இவருக்கு எழுதிய விரிவான கடிதத்தில் எழுதியுள்ளார். பாலம் இதழின் ஆசிரியராக விளங்கிய தஞ்சைப் பிரகாஸ் தான் நடாத்திய பாலம் இதழ், ஈழத்து இலக்கியம்,  சண்முகனின் கோடுகளும் கோலங்களும் தொகுதி பற்றியும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். யோகேஸ்வரி சிவப்பிகாசம் அ.யேசுராசா, நட்சத்திரன் செவ்விந்தியன், இமையவன்,  ரஞ்சகுமார் என்று  ஈழத்தின் முக்கியமான பல எழுத்தாளர்களுடனான கடிதங்களைப் பாதுகாத்து வருகின்றார். அவற்றை ஒரு நூலாக்கும் திட்டமும் உள்ளது. உண்மையில் அது நூலாக வெளிவந்தால் ஒரு காலம் பற்றிய ஆவணமாகவும் சிந்திப்பாகவும் அமையும்.

இவருடைய படைப்புகள் கோடுகளும் கோலங்களும் (சிறுகதை -1976) சாதாரணங்களும் அசாதாரணங்களும் (சிறுகதை – 1982), அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புகள் (பத்தி எழுத்துகள் – 2003), உதிரிகளும்…(சிறுகதை – 2006), ஒரு பாதையின் கதை (சிறுகதை – 2012), பிரபஞ்ச சுருதி(கவிதை -2014)  என்கின்ற ஆறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. கோடுகளும் கோலங்களும் தொகுதிக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்த போதிலும் அக்காலத்தில் எழுந்த கோரிக்கையை ஏற்று பரிசை நிராகரித்தவர். விருதுகளுக்கும் பரிசில்களுக்கும் மண்டியிடாத எழுத்தாளர் என்பதைச் செயல்களால் அமைதியாக நிரூபித்தவர். இன்றை இளம் எழுத்தாளர்கள் இவரிடம் கற்க வேண்டிய பாலபாடங்களில் இதுவும் ஒன்று.

கிராமம், நகரம் என்ற இரு முரண்களிலும் வாழக்கிடைத்த சண்முகன் வாழ்வின் கொண்டாட்டத்தையும் வலியையும் தன் படைப்புகளால் மனதில் பரவவிடுவதில் வல்லவர்;. அழகான பேச்சுமொழிப்பதிவும் இவரின் பலமாக உள்ளது. கடிதமாய் பேச்சாய் உரையாடலாய், ஒரு கவிதையின் தெறிப்பாய் இவரின் சிறுகதைகள் தமது களங்களை விரித்துக்கொள் கின்றன. இயற்கை ஈடுபாடும், காட்சி விவரிப்பும், பெண்ணின் அழகு மீதான ஈர்ப்பும், வாழ்வின் மீதான வசியமும் இவரை ஒரு குழந்தை போல கதைவெளியெங்கும் ஆசையொடு நடத்திச் செல்வதை இரசிக்க முடியும்.  கோபமும், தவிப்பும், வலியும், இரசிப்பும், புரட்சியும் மௌனமாயும் இறுக்கமாயும் மறைமுகமாயும் வெளிப்படையாகவும் தேவைக்கேற்றவாறு கலந்து பயணிக்கின்றன. மொழியின் கவித்துவம், அதைப் பின்னிச் செல்லும் இலாவகம், கதையின் முடிவில் தெறிக்கும் புதுக்கதைத் தொடக்கம் இவரின் பலங்கள் என்று துணிந்து சொல்லலாம்.  இவரின் நெஞ்சுக்கு நெருக்கமான எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் இராகவன் இவரது சிறுகதைகளைப் பற்றி கூறுவது முக்கியமானது.

‘ வாய்ப்பாட்டு ரீதியிலான (Formula) கதைகளை சண்முகனிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. மாறாக சண்முகனின் கதைகளில் அலாதியான புனைகதைப் பெருவெளியினை அவதானிக்கக் கூடியதாக இருப்பதும், ஆழ்ந்த வாசிப்பில் அப்பெருவெளிக்குள் பிரவேசித்து அலைவதனூடாகப் பரவசமெய்த முடிகின்றது என்பதும் முக்கியமானது’

இன்றைய சிறுகதைகளில் துருத்திக்கொண்டு கட்டுரைத்தனமாக நிற்கும் குறியீட்டுப் போக்கு எதுவுமற்று சாதாரண சிறுகதைத் தோற்றத்திற்குள் ஆழ்ந்த கதைக்கிறுக்கத்தை, பன்முக வாசிப்பிற்குரிய தொனியை இவரது சிறுகதைகள் பல பொதிந்துள்ளன. காலத்தைத் தாண்டிய வாசிப்பை அவை தூண்டி நிற்கின்றன. நாற்பதைத் தாண்டும் சிறுகதைகளையே இன்று வரை எழுதியுள்ள போதிலும் கலைத்துவமிக்க ஈழத்துச் சிறுகதைகளில் இவருக்கு ஒரு இடம் இருக்கவே செய்கின்றது. ஒரு றெயில் பயணம், அரியரத்தினக்கா  முதலிய சிறுகதைகள் இவருக்கு மிகப்பிடித்த சிறுகதைகள் என்று கூறுகின்றார். செ.யோகநாதன் அவர்கள் இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் என்று தொகுத்த ஒரு கூடைக்கொழுந்து, வெள்ளிப்பாதசரம் ஆகிய தொகுதிகளில் இவரது சிறுகதைகள் புறக்கணிக்கப்பட்டமை கவலைக்குரியதாகும்.  எனினும் புறக்கணிப்புகள் நடுவே தனது அமைதியான இலக்கிய ஊழியத்தையே இவர் நேசிக்கின்றார் என்பதும் மிக ஆறுதலான விடயமாகும்.

இவர் பற்றிய சித்திரத்தை உருவாக்கும் வல்லபம் மிக்க விமர்சனங்கள் எழவில்லை என்பதும் ஒரு குறைபாடாக உள்ளது. எனினும் தெளிவத்தை ஜோசப்,கே.எஸ்.சிவவகுமாரன், மு.புஸ்பராஜன், முல்லைமணி, எம்.கே.முருகானந்தன், இராகவன், அருண்மொழி வர்மன், அனோஜன் பாலகிருஷ்ணன் முதலியோர் இவரது சிறுகதைகளைப் பற்றி எழுதியுள்ளனர்;. பல்கலைக்கழக இளமாணி முதுமாணி ஆய்வுத் தேவைகளுக்காக நான்கு மாணவர்கள் இவரது சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்திருக்கின்றார்கள். சுனிதா இராஜேஸ்கண்ணன், செல்வமோகன் ஆகியோரைத் தனது ஞாபகத்தில் இருந்து பதிவு செய்துள்ளார். இவரது கோடுகளும் கோலங்களும் தொகுதியின் அட்டைவடிவமைப்பும் கவனத்திற்குரியது. முகப்பு ஓவியத்தை வரைந்தவர் ரமணி. இதுவே நவீன ஓவியத்துடன் வெளிவந்த முதற்தொகுதி என்று ரமணி அவர்கள் கூறியதாக நினைவு கூறுகின்றார்.

சிறுகதை மட்டுமல்ல குறுநாவல் முயற்சியிலும் இவர் ஈடுபட்டிருக்கின்றார்;. மத்தாப்பு, சதுரங்கம் போன்ற நாவல் கூட்டுமுயற்சி போலத் தொடங்கிய செவ்வானம் என்ற குறுநாவலை இவரை இறுதியில் எழுதி முடித்தார். இந்தக் கூட்டுமுயற்சியில் சிலோன் விஜேந்திரன், பூ.செல்லத்துரை, மகாதேவன், மாவை நித்தியானந்தன் ஆகியோர் ஈடுபடுவதாக இருந்தது என்று தனது ஞாபகத்தில் இருந்து குறிப்பிடுகின்றார். முதல் வருடம் தானே ஆசிரியராக இருந்த ‘இலக்கிய இன்பம்’ என்ற கையெழுத்துச் சஞ்சிகையில் இந்தக் குறுநாவல் தொடர்ச்சியாக வெளிவந்தது. இன்னொரு கையெழுத்துச் சஞ்சிகைக்காக கொண்டு செல்லப்பட்ட குறுநாவல் அப்படியே தொலைந்து போய்விட்டதை இன்றும் கவலையோடு குறிப்பிடுகின்றார்.

விமர்சனத்துறையிலும் இவருடைய பங்களிப்பு முக்கியமானது. அறிமுகங்கள், விமர்சனங்கள், குறி;ப்புகள் என்ற நூல் இதற்குச் சாட்சியாக விளங்குகின்றது. ஈழத்தின் மிக முக்கியமான இதழாக விளங்கிய ‘அலை’ இதழின் முதல் பன்னிரண்டு இதழ்களுக்கும் ஆசிரியர் குழுவில் ஒருவராக இவர் செயற்பட்டு இருக்கின்றார். திரைப்படம், ஓவியம், இசை போன்ற பல்வேறு கலைகளிலும் ஈடுபாடு கொண்டவராக இலயித்திருக்கின்றார். கொழும்பு இலக்கிய நண்பர்கள் கழகத்தின் ஒரு செயற்பாட்டாளராய் இருந்திருக்கின்றார். திரைப்படப் பிரியராய் இருந்ததால் கொழும்பு லயனெல்வெனிற் அங்கத்தவராக இருந்து உலகின் தலைசிறந்த திரைப்படங்களைப் பாhர்த்து இரசித்திருக்கின்றார்.  நல்ல புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்கும் சேகரிக்கும் தேர்ந்த வாசகராக விளங்கியிருந்திருக்கின்றார். இந்த அடிப்படைகளி லேயே படைப்பாளியாகவும் இருந்து கொண்டு சவாலான விமர்சனத் துறையிலும் தனது பெயரினை நிலைநாட்ட முயற்சி செய்துள்ளார். நாசூக்கான கேலி இவரது எழுத்துகளில் கசிவதை அவதானிக்கலாம். இது அவரது மென்மையின் இயல்பாயும் எழுத்து வன்மையின் இயல்பாயும் அமைந்துள்ளது.

இவர் கவியரங்குகளிலும் வானொலியிலும் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் கவிதைகளை வெளிப்படுத்தியிருக்கின்றார். மரபார்ந்த சந்தம் இயைந்த அழகான கவிதைகளுக்கு இவர் சொந்தக்காரராக விளங்குகின்றார். முல்;லைமணியுடன் 1984 இல் செய்த கவியரங்கம் ஒன்றை இன்றும் சிலாகித்துக் கூறுகின்றார். 1965 – 1975 காலப்பகுதியில் எழுதப்பட்ட கவிதைகள். இவர் கொஞ்சமும் எதிர்பாராத வேளையில் 2014 இல் சித்தம் அழகியார் வெளியீடாக ‘பிரபஞ்ச சுருதி’ என்ற கவிதைத்தொகுதி வெளிவந்தது. கூத்து போன்ற தத்துவம் பொதிந்த அரிய கவிதைகளும் மனஎழுச்சிக் கவிதைகளும் இத்தொகுதி முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. மரபும் நவீனமும் சேர்ந்து பின்னப்பட்ட படைப்பாளி என்பதற்கு கவிதைத்தொகுதி சான்றாக அமைகின்றது,

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல இலக்கியக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குபவராய், மதிப்புரை செய்பவராய், வெளியீட்டுரை நிகழ்த்துபவராய் விளங்குகின்றார். சந்நிதியான் ஆச்சிரமத்தில் இருபது வருடங்களாக வருடந்தோறும்  ‘குருட்டு ஆத்மிகம் இல்லாத’ இலக்கியப் பின்னணியுடனாக சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்திவருகின்றார். இலக்கியக் கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பித்து வருகின்றார்.

தான் ஆசிரியராக பணி செய்ததை நினைத்து இன்றும் மகிழ்வடைகின்றார். உயிருள்ள மனிதர்களுடன் பிள்ளைகளுடன் பழகும் வாய்ப்பும் அவர்களை முன்னேற்றும் சந்தர்ப்பமும் வரம் என்றெ நம்பிச் செயற்பட்டவர். தன்னிடம் கற்ற மாணவர்களின் விசாரிப்புகளில் இன்றும் குழந்தையாகிவிடுகின்றார்.தனது சிந்தனைகளை உயிர்ப்பிக்கும் மையங்களாக மாணவர்களைக் கருதினார். பொருளியல், தமிழ் ஆகிய பாடங்களை உயர்தர வகுப்புக்கும் சைவசமயத்தை இடைநிலை வகுப்புகளுக்கும் கற்பித்தவர். அவரிடம் கற்கக் கிடைத்த வாய்ப்பே என்னையும் இலக்கியக்காரன் ஆக்கியது என்பதைப் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றேன். அவருடைய முதல் வகுப்பு ரஞ்சகுமாரின் கோசலை கதையுடன்தான் ஆரம்பமாகியது. கதையைப் பற்றி விமர்சனமும் எழுதிவரச் செய்தார். மாணவர்களிற்குள் வாசகனையும் விமர்சகனையும் படைப்பாளியையும் உயிர்ப்பிக்கும்; ஆளுமையான ஆசிரியராக இவர் விளங்கினார். படிக்கின்ற காலத்திலே இராஜேஸ்குமாரின் நாவல்களைப் பற்றி கேட்பேன். அமைதியாகச் சிரித்து நான் அவரது நாவல்களைப் படிப்பதில்லை என்பார். எதுகை மோனைகளுடன் துள்ளி விளையாடும் எனது கட்டுரைகளை வகுப்பில் வாசித்துக்காட்டி ஊக்குவிப்பார். ஒருவனுக்குள் இருக்கும் ஆர்வத்தை உடனே கருக்கி விடாது சரியான பாதையில் வழிநடத்தும் ஆசிரியத்துவத்தின் உயர்ந்த இலட்சியம் இவரிடம் சுவறி இருந்தது.

இவரின் படைப்பாற்றலைக் கௌரவித்து கலாபூஷணம், வடக்கு மாகாண ஆளுநர் விருது, வடமராட்சி வலயக் கல்வித்திணைக்களத்தின் கலைவாரிதி விருது, கரவெட்டிப் பிரதேச செயலகத்தின் கலைஞான வாரிதி விருது, குப்பிழான் விக்னேஸ்வரா மன்றத்தினரின் செம்மண் சுடர், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் சங்கச் சான்றோன் முதலிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது.

தொடர்ந்து வாசிக்கவேண்டும், நல்ல திரைப்படங்களைப் பார்க்கவேண்டும், இலக்கியக் கூட்டங்களுக்கு செல்ல வேண்டும், மனதுக்கினிய நண்பர்களுடன் மெய்மறந்து உரையாடவேண்டும் என்ற எண்ணங்களுடன் மனதால் இளமை பெற்றுள்ளார்.

ஈழத்துப் படைப்பாளிகளின் பெயர்களை வரிசைப்படுத்தும் ஆய்வுமரபும், மேலெழுந்த வாரியான விமர்சனப்போக்கும் தொடர்கதையாகி வருகின்றது. ஆளுமைகளின் படைப்புகள் குறித்த தனியான விமர்சன அரங்குகள் நடாத்தப்படும் போதுதான் படைப்பின் கூர்மைகள் வெளிப்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கின்றது. குப்பிழான் ஐ.சண்முகன் என்ற ஆளுமையின் படைப்புகள் குறித்த ஆழமான ஆய்வுகள் இடம்பெறுவதே நாம் அவருக்கு வழங்கும் கௌரவமாகும்.  அவரது இலக்கியப்பணி தொடரவும் வாழ்வு இன்னும் சிறக்கவும் வாழ்த்துவோமாக.

கட்டுரையாளருக்கு நன்றி – த.அஜந்தகுமார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!