அறிமுகம்
‘சிவபூமி” என்று திருமூலரால் சிறப்பிக்கப்பெறும் தொன்றுதொட்டு இன்றுவரை சைவசமய நெறிப்பட்ட ஆன்மீக நெறி நிலவி வருகின்றது. சமுதாயத்தை ஆன்மீக வழியில் வழிப்படுத்தும் நோக்கில் சான்றோர்களாகிய யோகிகளும், ஞானிகளும், காலந்தோறும் ஆன்மீகச் சித்தர்களும் ஈழத்தில் தோன்றியுள்ளனர். இவர்களில் பலர் சித்தர்களாகவும் சிலர் யோகிகள் அல்லது ஞானிகளாகவும் விளங்கக் காணலாம். இவ்வான்மீகப் பெருமக்கள் வரிசையில் பெண்ணில் நல்லாளாக விளங்கிய சடையம்மா அவர்களை ஒரு “யோகி” என்று குறிப்பிடுவதே பொருத்தமாகத் தெரிகின்றது. தியான யோகவாழ்க்கை நெறிக்கு யோகி சடையம்மா ஓர் உதாரண புருஷராக விளங்கினார்.
சடையம்மாவின் வரலாறு
யோகி சடையம்மா அவர்கள் திருநெல்வேலி கிழக்கில் மிக்க சிறப்புற விளங்கும் முருகனை முழுமுதற் பொருளாக வணங்கும் செங்குந்தர் மரபில் சைவாசாரத்து டன் வாழ்ந்த வீரகத்திப் பிள்ளைக்கும் சின்னாச்சிப்பிள்ளைக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக 19-08-1865இல் ரோகினி நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் திரு அவதாரம் செய்தார். முத்துப்பிள்ளை என்பது இவரின் பிள்ளைத் திருநாமமாகும். முத்துப்பிள்ளை கதிரேசு என்பவரை திருமணம் செய்து இரு பெண்குழந்தைகளுக் கும் அன்னையானார். அவர் இல்லறத்தில் இருந்த போதும் அவரின் சொல் செயல் எண்ணம் யாவும் இறை எண்ணமாகவே விளங்கியது. இறையுணர்வு மேன்மேலும் அதிகரிக்க அதிகரிக்க அன்புக்கணவரையும் பெற்ற பெண் பிள்ளைகள் இருவரையும் மற்றும் உற்றார், உறவினர் அனைவரையும் நீங்கி ‘தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்ற அப்பரடிகளின் ஆன்மீக வழித்தடத்தில் நடந்து சென்று நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் சரியை நெறியில் வாழ்ந்து வந்தார். இவரின் வாழ்க்கை வரலாற்றைச் சரவணை ஸ்ரீமான் ஆ.தில்லைநாதபிள்ளை என்பவர் அறுபது பாக்களின் சிறப்புற அமைத்துள்ளார். இப்பாக்கள் 1957ஆம் ஆண்டில் சோ.சபாபதிப்பிள்ளை அவர்களின் முகவுரையுடனும், திருச்செந்தூர் ஆர்.நெல்லை வடிவேற்பிள்ளை அவர்களின் அணிந்துரையுடனும் ஒரு சிறு நூலாக ஸ்ரீமதி சடையம்மா அவர்களின் ஆன்மீகப் படத்துடன் வெளிவந்துள்ளது.
சடையம்மா என்ற பெயர்
அன்னை முத்துப்பிள்ளையின் தலைமுடி நீளமாக வளர்ந்து முற்றி முறுகி யோகிகளின் சடைமுடி போன்று விளங்கியதால் அவரை சடையம்மா என அழைத்து வணங்கினர்.
ஈழத்து ஆன்மீக செல்வர்கள்
அனுபூதிமான்கள் வழிபட்ட ஈழத்தில் ஆன்மிக அருள்நெறி பண்டு தொட்டு இன்று வரை விளங்கி வருகின்ற போதும் இந் நெறியை வளர்த்தெடுத்த ஆன்மிகச் செல்வர்களின் வரலாறு பற்றி அறிய முடியாத நிலையே நீடிக்கின்றது. சுமார் முந்நூறு ஆண்டு கால இடைவெளிக்குள் வாழ்ந்த ஆன்மீகச் செல்வர்களின் வரலாறு பற்றி ஓர் அளவு அறிய முடிகின்றது.
திருநெல்வேலி ஞானப்பிரகாசமுனிவர், கடையிற்சுவாமிகள், பரமகுருயோகர் சுவாமிகள், நவநாதசித்தர், சுவாமிகள், அருளம்பல சுவாமிகள், பெரியானைக் குட்டி சித்தர், சித்தானைக் குட்டி சித்தர், சடைவரத சுவாமிகள், ஆனந்தசடாட்சர குரு, தரணையாளன் சுவாமிகள், மகாதேவ சுவாமிகள், நவநாத சித்தர், நயினைதீவுச் சுவாமிகள், செல்லாச்சி அம்மையார், யோகி சடையம்மா என்போர் குறிப்பிடத்தக்க ஈழத்து ஆன்மீக செல்வர்கள் ஆவர்.
குருஉபதேசமும் குருதரிசனமும்
யோகி சடையம்மா அவர்களுக்கு கடையிற் சுவாமிகளின் ஆன்மீக தரிசனமும், உபதேசமும் அவரது இல்லறவாழ்வின் போதே கிடைத்துவிட்டது. பின் துறவியாக வாழ்ந்த காலத்தில் பால் குடிபாபாவின் ஆன்மீக தரிசனமும் உபதேசமும் கிடைத்தது. இவ்விரு குரு உபதேச வழியில் இவரின் ஆன்மீகப் பயணம் தொடர்ந்தது.
தலயாத்திரை
யோகி சடையம்மா அவர்கள் திருத்தல யாத்திரையின் மூலம் தனது ஆன்மீக விழுமியங்களை பெறும் பேறுபெற்றார். இவர் ஈழத்திலுள்ள நல்லூர், கதிர்காமம், மாவிட்டபுரம், நயினாதீவு போன்ற புனித இடங்களுக்கும் தமிழகத்தில் காசி முதல் இராமேஸ்வரம் உள்ள புனிதத் திருத்தலங்களுக்கும் மேற்கொண்டவர். இந்தியாவிலுள்ள தலயாத்திரை கங்கை, காவேரி, இராமேஸ்வரம் போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய ஆன்மீகச் செல்வராக விளங்கினார். இவ்வகையில் மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாக செய்தார்க்கு வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்ற தாயுமானவரின் வாக்குக்கு அமைய இவரின் தல யாத்திரை விளங்கியது.
அன்னதானப்பணியும் ஆன்மீகப்பணியும்
ஆன்மிக வாழ்வில் தன்னை முற்றுமுழுதாக ஈடுபடுத்தி வாழ்ந்த யோகி சமூகநலநோக்கு உடையவராகவும் சடையம்மா அவர்கள் குரு விளங்கினார். நல்லூரில் ஓரு மடத்தைத் ஸ்தாபித்து அங்கு ஆன்மீகப் பணியுடன் அன்னமிடும் ஆன்மீகப்பணியை தவறாது செய்து வந்தார். இவர் தனது முன்னெடுத்துச் செல்வதற்காக கதிர்காமம், கீரிமலை ஆகிய இடங்களிலும் மடங்களை ஏற்படுத்திப் பணிபுரிந்தார். இவரால் ஏற்படுத்தப்பட்ட நல்லூர் பூஜைமடம், கதிர்காம சடையம்மாமடம், கீரிமலை சடையம்மாமடம், திருச்செந்தூர் சடையம்மாமடம் என்பவற்றைச் செவ்வனே நடத்த பெறாமகன் ந.குருநாதர் என்பாரையும், ஒரு காரியக் கமிட்டியையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது. நல்லூர் சடையம்மா குருபூஜைமடம் மென்மேலும் பணிபுரிய நல்லூர்க் கந்தனருள் கிடைக்கவேண்டும். இவரது ஆன்மீகப் பணிகளை வளர்த்தெடுக்கும் பொருட்டு திருநெல்வேலி கிழக்கில் உள்ள வெள்ளைப் பிள்ளையாரில் 63 அடி நீளமான ஆன்மீக மடம் அமைந்துள்ளது.
நல்லூர் சடையம்மா குருபூஜைமடம்
சைவசமயம் மேம்பாடுபெற தமிழகத்தில் அவதரித்த அறுபத்திமூன்று நாயன்மார்களது குருபூசை நாட்களை சிறப்புறச் செய்து அக்குருபூசை நாட்களில் அடியவர்களுக்கு சிறப்புற அன்னதானமும் வழங்குவதற்கும் நல்லூர்க் கந்தனை வழிபட வரும் உள்ளுர் வெளியூர் அன்பர்கள் தங்கியிருப்பதற்கு வசதியாகவும் இம் மடம் நல்லூரம்மை சடையம்மாவால் அமைக்கப்பட்டது. இம்மடம் மட்டுமன்றி இவ்வம்மையார் கதிர்காம சடையம்மாமடம், கீரிமலை சடையம்மாமடம், திருச்செந்தூர் சடையம்மாமடம் என்பவற்றையும் ஏற்படுத்தி சைவதருமப் பணிகளை செவ்வனே செய்து வந்த பெருமைக்குரியவராக விளங்கினார்.
தனக்குப்பின்னர் இத் தருமப் பணிகளைக் கவனிப்பதற்கு சமய, விசேட, நிர்வாண எனும் மூவகைத் தீட்சைகளும் பெற்று நைட்டீயப் பிரம்மசரிய ஒழுக்கநெறியில் நின்ற பெறாமகன் ந.குருநாதர் அவர்களை நியமித்ததுடன் இத்தரும பரிபாலனம் செவ்வனே தொடர ஒரு செயற் குழுவையும் (காரியக் கமிட்டி) அமைத்துச் செயற்பட்டார்
பக்தியோகி
பக்தியோக ஆன்மிக சாதனைகள் மூலம் யோகி சடையம்மா தன் வாழ்வை முற்றாகவே மாற்ற முனைந்தார். உருவ வழிபாட்டையும் பக்தரின் உள்ளத்தில் இறைவன் பால் ஊறும் அன்பினையும் அடிப்படையாகக் கொண்டது பக்தியோகமாகும். ஏன்? எதற்கு? என்ற ஆய்வு வினாவுக்கோ அல்லது சரியா? தவறா? என்ற ஐயவினாவுக்கோ இடந்தராமல் இறைவன்பால் பக்தர் கொள்ளும் ஆழ்ந்த அன்பும் உறுதியான நம்பிக்கையும் பக்தியோகத்தின் படிகளாகும். தன்னை மறப்பதாலும் எங்கும் எதிலும் எப்போதும் இறைவனை எண்ணிக் கொண்டு இருப்பதாலும் பக்தியோகம் பயில்வோரின் சிந்தனையில் இறைவனைத் தவிர வேறு ஏதும் இடம் பெறுவதில்லை. ‘இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்ற மாணிக்கவாசகரின் வாக்கு இதற்குச் சான்றாகின்றது.
இறைவன்மேல் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவது” பக்தியோகத்தின் இயல்பாகும். யோகி சடையம்மா அவர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் வாழ்ந்த வாழ்க்கை பக்தியோகத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பக்தியோகம் பயில்வதற்கு அன்பு என்ற உயர்வைத் தவிர வேறு தகுதி ஒரு போதும் தேவையில்லை இறைவன்மேல் கொள்ளும் அன்பு முதிர முதிர பக்தியோகம் பயில்வோர் தம்மை இழக்கின்றனர். யோகி சடையம்மா இந்த நிலையில் வாழ்ந்த பக்தியோகி ஆவார்.
ஞானயோகியாக
பதி ஞானம் எனும் இறையறிவு, பசு ஞானம் எனும் ஆன்ம அறிவு, பாச ஞானம் எனும் ஆன்ம அறிவு, என ஞானம் மூவகைப்படும் என்பது சைவசமயக் கோட்பாடாகும். ஆழ்ந்தகன்ற ஆன்மீக அறிவும் கூரிய சிந்தனைகளையும் உடையவர்களே ஞானயோகம் பயிலுதற்கு உரியவர்களாவர். இத்தகுதி வாய்க்கப் பெற்றவராக விளங்கிய யோகியே சடையம்மா.
அட்டாங்க யோகியாக
யோகநெறிகள் பலவற்றிற்கும் பொருந்துவதாகவும் பொதுவானதாகவும் இருப்பது ஆன்மீக மரபுவழி வந்த “அட்டாங்கயோகம்” இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என எண்வகை உறுப்புக்களை உடையதென்பதால் இதனை அட்டாங்கயோகம் என அழைப்பர். இவற்றுள் பிரணாயாமம், தியானம், சமாதி என்பன கைவரப் பெற்றவராக யோகி சடையம்மா அவர்கள் விளங்கினார். ஸ்ரீP இராமகிருஷ்ண பரமகம்ஸர் போல அடிக்கடி தியானத்தில் மூழ்குவதும் சமாதிநிலையடைவதும் இவரின் ஆன்மீக வாழ்வாக அமைந்து விளங்கியது.
யோகப் பயிற்சியில் வல்லவர்கள் அண்டத்திலுள்ள அனைத்தையும் பிண்டத்தில் காண்பவர். பேரண்டத்தை இயக்கும் சக்திகளின் உருவமாக யோகிகள் தம் உடலிலேயே தெய்வங்களை காண்பர். நெற்றியில் சதாசிவத்தையும், கழுத்தில் மகேசுவரரையும், நெஞ்சிலே உருத்திரனையும், உந்தியில் விஷ்ணுவையும், மூலத்தில் பிரம்மனையும் காணும் ஆற்றல் மிக்கவராக யோகி சடையம்மாவின் ஆன்மீக வாழ்வு அமைந்திருந்தது. வாலையம்மனின் அருட்பார்வையால் உபதேசம் புரிந்தால் இத்தகைய யோக நிலை இவருக்குக் கைவரப் பெற்றது. வாலை எனும் குண்டலி யோகப் பயிற்சியால் தத்தம் உடலில் இருக்கும் தெய்வங்களைக் காணாமல் மனிதர்கள் சாகின்றனரே என்று கொங்கணர் வருந்துவது இங்கு நினைவு கூறத்தக்கது.
தியானயோகி
ஆன்மீக சாதனையில் ஏதேனும் ஓர் உறுப்பில் மனத்தை ஒருமுகப்படுத்துவது தாரணை எனப்படும். தாரணையின் முதிர்ந்த நிலை தியானம் எனப்படும். தியானநிலையில் இருக்கும் போது அனைத்து உணர்வுகளும் ஆன்மீகமயமாய் விளங்கும் சகுணதியானம் நிர்குணதியானம் எனத் தியானம் இரு வகைப்படும். சகுண தியான நிலையில் இறைவன் திருவுருவைக் கண்டு மனம் இன்புறும் அருவத்தியானம் சமாதி நிலைக்கு வழி செய்யும். இந்த அருவத் தியானம் கைவரப் பெற்றவராக யோகிசடையம்மா விளங்கினார். அருவத் தியானம் மிக ஆழ்ந்த நிலையில் மனத்தை ஒரு முகப்படுத்த முடிந்த யோகியர்களுக்கே கிட்டும் என்பது குறிப்பிடத் தக்கதாகும். யோகி சடையம்மா யோக சமாதியில் இருக்கும் போது அவரது தலைவீங்கு வதையும் பின் யோக மடங்கும் போது தலை வீக்கம் குறைவதையும் காணமுடியும். இவ்வகையில் யோகி சடையம்மாவை ஒரு தியான யோகியாக கருத முடிகின்றது.
சமாதிக் கோயில்
மன ஒருமைப்பாட்டின் இறுதி நிலை சமாதி எனப்படும். பக்குவப்பட்ட ஆன்மா பூரணத்தில் கலந்து ஒன்றாகிவிடும் நிலையைச் சமாதி எனலாம். யோகி சடையம்மா தனது இறுதிக்கால சமாதிச்சாதனை செய்வதற்குரிய இடமாக கடலலையும் ஆன்மீக அலையும் பாயும் கீரிமலை என்ற புனித இடத்தினைத் தேர்ந்தெடுத்தார். அவ்விடத்தில் தியான யோக சாதனை புரிவதற்காகவும், பிதிர்க் கடன்களை ஆற்றுவதற்காகவும் ஒரு மடத்தை அமைத்து அதில் தியான யோகம் நாளாந்தம் செய்து அடிக்கடி சமாதி நிலையடையும் யோகியராக விளங்கினார்.
இவ்வாறு தியான யோக சாதனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட யோகி சடையம்மா முன்கூட்டியே அவர் கூறியபடி 05-08-1936ஆம் ஆண்டு சுக்கிரவாரமும் அனு~நட்சத்திரமும் கூடிய குலச்சிறை நாயனாரின் குருபூசை தினத்தில் மகாசமாதியானார். இவரின் சமாதி வைபவத்தை தவத்திரு சிவயோக சுவாமிகள் சைவாசாரப்படி முன்னின்று நிகழ்த்திவைத் தார்கள். இச் சமாதிக் கோயிலில் அம்பாளின் திருவுருவம் வடக்கு நோக்கியதாகவும், சிவபெருமானின் சிவலிங்கத்திருவுருவம் கிழக்குநோக்கியதாகவும், பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுகின்றது. இவரின் சமாதிக்கோயிலுக்கு அண்மையில் குழந்தைவேற்சுவாமிகளின் சமாதிக்கோயிலும் அமைந்து விளங்கக் காணலாம். இவ்வாறு தவத்தின் மிக்க ஆண்சித்தர் ஒருவருக்கும் பெண்யோகி ஒருவருக்கும் சமாதி ஆலயங்கள் ஒருங்கே அமைந்து விளங்கும் புனித இடம் கீரிமலை என்பதால் அவ்விடம் மேலும் சிறப்பு பெற்றுள்ளது. யோகி சடையம்மாவின் புனிதச்சடையின் சில பகுதிகள் ‘ஈழத்துச் திருச்செந்தூர்” எனப்படும் கதிர்காமத்திலும், தமிழகத்துத் திருச்செந்தூரிலும் சமாதிவைக்கப் பட்டுள்ளமை அவரது ஆன்மீக ஆற்றலை மேலும் வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு ஈழத்து ஆன்மிக மரபில் உதித்த யோகி சடையம்மா அவர்கள் போற்றுதலுக்கும் வழிபாட்டிற்கும் உரிய பெண்யோகியாக விளங்கக் காணலாம்.
நன்றி பேராசிரியர் டாக்டர் மா.வேதநாதன் எம்.ஏ.பிஏச்.டி. மேனாள் தலைவர். இந்தநாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.