1789-06-27 ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் வாழ்ந்து கல்வி;ப்பணியாற்றியவர். இவர் அமெரிக்காவில் உள்ள டாத்மத் (Dartmouth) கல்லூரியில் கற்றவர் 1823ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய அமெரிக்க மிஷனரிமார் தமிழ் மக்களுக்கு ஒரு பல்கலைக்கழக கல்லூரியை அமைக்க வேண்டு மென்று முடிவு செய்தனர். இந்த கல்லூரி அமைவதற்கு சிறந்த இடம் வட்டுக்கோட்டையே என்றும் அவர்கள் கருதினார்கள். அதன் முதல் அதிபராக டானியல் பூவர் நியமிக்கப்பட்டார். டானியேல் பூவர் மிகச் சிறந்த கனவுகளுடன் இக்கல்லூரியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார், ஆனால் அவர் எதிர்பார்த்த வண்ணம் நிதி உதவியோ, ஆளணியோ கிடைக்கவில்லை. அதுமட்டுமன்றி இலங்கையை அப்போது ஆட்சிசெய்த பிரித்தானிய அரசு பட்டங்களை வழங்கக்கூடிய ஒரு நிறுவனத்துக்கான சாசனத்தினை வழங்க மறுத்தது. ஆனால் கலாநிதி டானியேல் பூவர் சோர்ந்து போகவில்லை. பட்டம் வழங்கக்கூடிய கல்லூரி என்ற அந்தஸ்தைப் பெற முடியாதபோது அவர் செமினரி என்ற பெயருடன் இந்த நிறுவனத்தினை நடத்தினார். பேராசிரியர்கள் அமெரிக்காவில் இருந்து வருவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார்.ஆனால் ஒருவருமே வந்து சேரவில்லை. எனவே டானியல் பூவர் அவர்களே கல்லூரி அதிபர் பணியுடன் இயற்கைத்தத்துவம் (விஞ்ஞானம்), கணிதம், கிறிஸ்தவம் ஆகிய துறைகளின் தலைவராகவும் விளங்கினார்.இந்த செமினரி 1823ஆம் ஆண்டு தொடக்கம் 1855வரை நடைபெற்றது இந்த நிறுவனத்தில் ஏறத்தாழ 700பேர் கற்று செமினரிப் பட்டதாரிகள் ஆகினர். 1841 ஆம் ஆண்டு உதயதாரகைப் பத்திரிகை ஆரம்பமாகியது. 1848இல் அவர் அமெரிக்கா சென்று ஆசிய மக்களின் ஆவிக்குரிய நிலைபற்றிச் சொற்பொழிவு ஆற்றினார் 1851இல் யாழ்ப்பாணம் திரும்பி மானிப்பாயினைத் தமது பணிக்களமாகத் தெரிந்து கொண்டார். 1855இல் கொலரா(வாந்திபேதி) நோய் அவரைப் பிடித்துக் கொண்டது. உயிர் பிரியும் நேரத்தில் ஆனந்தம் ஆனந்தம் என்று தமிழில் கூறியபடியே இவ்வுலகை நீத்தார். இவருடைய பூதவுடல் தெல்லிப்பளை மிஷன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 1855ஆம் ஆண்டு பொஸ்டனில் இருந்து அமெரிக்க மிஷன் தாய்ச்சங்கம் செமினரியின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டு அதனைப்பற்றி விசாரிக்க ஒரு குழுவினை அனுப்பினார்கள். இதற்கு றூபஸ் அண்டர்சன் என்பவர் தலைவராக இருந்தார் அவர் ஏற்கனவே செமினரியை மூடிவிடவேண்டும் என்ற கொள்கையுடையவராக இருந்தார். அவர் பம்பாய்க்கு வந்துவிட்டார் என்றும் விரைவிலே யாழ்ப்பாணத்திற்கு வரப்போகின்றார் என்றும் அறிந்தபோது டானியேல் பூவர் கதி கலங்கினார்.அவர் இங்கு வருகின்றபோது நான் இங்கு இல்லாதிருப்பதே நன்று. உண்மை ஒருநாள் வெளியாகும். இதனையே நான் டாக்டர் அன்டர்சனுக்கு கூற விரும்புகின்றேன் என்று எழுதி வைத்தார். அவர் எதிர் விரும்பியவாறே ரூபஸ் அன்டர்சன் விசாரணைக் குழுவினர் வரமுன்னரேயே அவர் தம் வாழ்வினை முடித்து 1855-02-03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.