1926.07.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் பிறந்தவர். வண்டிச்சவாரிக்கலை முன்னோடிகளில் இவரும் ஒருவர். சவாரிக்கலையின் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமைக் குரியவர். 1960இல் அப்போதைய பிரதமரான அமரர் சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள் தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற அலங்காரப்பவனியில் சவாரி வண்டியை அலங்கரிக்கப்பட்ட மாடுகளுடன் பங்கு கொண்டு யாழ்ப்பாண மண்ணின் பெருமையை உலகறியச் செய்தவர். 1948 ஆம் ஆண்டிலிருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவ வீதியுலா ஊர்வலத்தினை அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டி மூலம் கீரிமலையிலிருந்து மாவிட்டபுரம் வரை அழைத்துச்செல்லும் செயற்பாட்டினை இறக்கும் வரை செயற்படுத்தி வந்த பெருமைக்குரியவர். வலிகாமம் வடக்கு கலாசாரப்பேரவை கலைச்சுடர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 2007-08-10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
