1904-03-19 ஆம் நாள் ஊர்காவற்றுறை – கரம்பொன் என்ற இடத்தில் பிறந்து, யாழ்ப்பாணம்- சுண்டிக்குழி என்ற இடத்தில் வாழ்ந்தவர். பாட்டிற்குப் பாரதிபோல் நாட்டுக் கூத்திற்குப் பூந்தான் ஜோசேப்பு என்றால் அதுமிகையாகாது. அத்தகைய இதய சுத்தியோடு நாட்டுக்கூத்தினை நேசித்தவர். நாட்டுக் கூத்தென்றால் கீழ்மட்டக் கலைஞர்களின் கேலிக்கூத்து என்ற தவறான கருத்தை முறியடித்து அதற்கான சமூக அந்தஸ்தினை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். அவர் நடிப்பில் அழகு மிளிரும் பாட்டில் இனிமை சுரக்கும். ஆட்டத்தில் தாளம் நர்த்தனமாடும். இவரால் உருவாக்கப்பட்ட கலைஞர்கள் ஏராளம். தனக்குத் தெரிந்தவற்றை தன் சீடர்களுக்கு ஒளிவு மறைவின்றிக் கற்பித்த பரந்த மனப்பான்மையாளன். இவருடைய பதின்நான்கு பதினைந்து வயதுக் காலத்தில் நாவாந்துறைப் பகுதியில் இதே வயதுடைய இளைஞர்களால் “இமானுவேல்” நாட்டுக்கூத்து அரங்கேற்றப்பட்டது. இக்கூத்தில் நடித்த இளைஞர்களது நடிப்பால் கவரப்பட்ட ஜோசேப் தானும் அவர்களைப் போல் நடிக்கவேண்டும் என்ற பேரவாவினால் உந்தப்பெற்றார். இக்கலையுலகின் உந்துதலே நாட்டுக்கூத்துக் கலையுலகில் சக்கரவர்த்தியாக திகழ்வதற்கு மூலகாரணமாகியது. 1925-08-29 ஆம் திகதி யாழ்ப்பாணம் சுண்டிக்குழி அர்ச்யுவானியார் தேவாலாய முன்றலில் அரங்கேற்றப்பட்ட “சஞ்சுவாம்” நாட்டுக்கூத்தில் ஏரோது அரசன் பாத்திரமேற்று நடித்ததுவே இவரது முதலாவது அரங்கேற்றமாகும். மத்தேசுமவுறம்மா, 1938ஆம் ஆண்டு இளவாலை கிராமத்தில் வாழ்ந்த இந்து, கத்தோலிக்க ஒருங்கிணைந்த வேண்டுகோளுக்கிணங்க அக்கிராமத்து பழைய- புதிய கலைஞர்களை ஒன்றிணைத்து தேவசகாயம்பிள்ளை என்ற நாட்டுக்கூத்தினை தாமாகவே நெறிப்படுத்தி அரங்கேற்றியதன் மூலம் அண்ணாவியார் என்ற ஸ்தானத்தினைப் பெற்று கலையுலகில் உயர்ந்து கொண்டார். இணுவிலைச் சேர்ந்த வேல்நாயர் நாகலிங்கம், பபூன் செல்லையா, நெல்லியடி சுபத்திரை ஆழ்வார் போன்ற முதுபெரும் கலைஞர்களுடன் இணைந்து ஞானசௌந்தரி என்னும் பார்ஷிநாடக முறையிலும் தன் ஆளுமையை வெளிப்படுத்தினார். சஞ்சுவாம், தொன்நீக்கிளார், மத்தேசுமவுறம்மா, தேவசகாயம்பிள்ளை, ஞானசௌந்தரி, மரியதாசன், எஸ்தாக்கியர், கருங்குயில் குன்றத்துக் கொலை, சங்கலியன், பிலோமினா, விஜயமனோகரன், திருஞானதீபன், புனிதவதி, கற்பலங்காரி, ஊசோன்பாலந்தை, மனம்போல் மாங்கலயம், செனகப்பு போன்ற பல நாட்டுக் கூத்துக்களை மேடையேற்றியவர். 1965 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கலாமன்றத்தினரால் அரங்கேற்றப்பட்ட இலங்கேஸ்வரன் என்ற சரித்திர நாடகத்தில் இராவணனாக நடித்தார். இந் நாடகவிழாவிற்கு தலைமை வகித்த சைவப் பெரியாரும் அப்போதைய மாவட்ட நீதிபதி யாகியவருமான அமரர்செ.தனபாலசிங்கம் அவர்கள் பூந்தான் ஜோசேப்பினது அரை நூற்றாண்டுகால நாடகசேவையைப்பாராட்டி “நாட்டுக்கூத்துக்கலாநிதி” என்ற உயர் விருதொன்றினை வழங்கினார். ஏறக்குறைய ஆயிரத்திற்கும் அதிகமான நாட்டுக்கூத்துக்களில் நடித்தும், ஐநூறு நாட்டுக் கூத்துக்களை நெறிப்படுத்தி மேடையேற்றியும் தமக்குத் தொழில் நாட்டுக்கூத்து என்று வாழ்ந்த கலைஞன். 1961 இல் நாடக சிரோன்மணி,1965 நாட்டுக்கூத்துச் சக்கரவர்த்தி, 1969 நாட்டுக்கூத்துப்பேரொளி, 1973 கலைவேந்தன், கலைஞானபூபதி, இசைப் புலவர், நாடகமாமன்னன், கலைக்காவலன் போன்ற பல்வேறு கௌரவ விருதுகள் வழங்கப்பெற்ற மூத்த கலைஞனான இவர் 1996ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.