Saturday, April 5

பெஞ்சமின், சாமுவேல்

0

1915-08-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் என்ற இடத்தில் கலைநுட்பம் கைதேர்ந்த கலைக்குடும்பத்தில் பிறந்து யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் தனது இளமைப்பருவத்தில் சித்திரக்கலையில் மிகவும் ஆர்வமுடையவராகத் திகழ்ந்தார். இவருடைய குடும்ப உறவினர்களில் ஒருவரான மாமனார் அ.பிலிப்ஸ் என்பவரது ஒப்பனைகளைத் தொழிலில் இணைந்து பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றி தொழில் ரீதியாக நுணுக்கங்கள் பலவற்றினையும் கற்று 1939 ஆம் ஆண்டு தனது கன்னிமுயற்சியாக நெடுந்தீவில் அரங்கேற்றப்பட்ட கண்டி அரசன் நாடகத்திற்கான மேடை அலங்காரம், ஒப்பனை ஆகியவற்றினை வெற்றிகரமாக மேற்கொண்டு ஒப்பனைத்தொழிலில் தானே தனி நிறுவனமாகச் செயற்படத் தொடங்கினார்.1939ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார், மட்டக்களப்பு, கொழும்பு வரை மேடை அலங்கார , ஒப்பனைக்கலையினை தொடர்ந்தவர். ஒவ்வொரு ஆண்டிலும் சராசரி 80 நாடகங் களுக்குமேல் ஒப்பனை செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் கடந்த 50 ஆண்டுகளிலும் 4000 நாடகங்களுக்கு மேல் ஒப்பனை செய்திருப்பதாக கணக்கிட்டு மகிழ்ந்தவர். வட்டக் களரிகளிலும், கொட்டகைகளிலும் நடைபெற்று வந்த நாட்டுக்கூத்து, இசைநாடகம், நாடகம் முதலான பலவகை நாடகப் பரிமாணங்க;டாகவும் இவரது ஒப்பனை மேற்கிளம்பியிருக்கின்றது. இந்திய நாடக சபாக்கள் மற்றும் யாழ்ப்பாணத்து நாடகக்குழுக்களினாலும் அரங்கேற்றப்பட்ட நாடகங்களுக்கு ஒப்பனை செய்த பெருமைக்குரியவர். கலையரசு சொர்ணலிங்கம்,நடிகமணி வைரமுத்து, குழந்தை ம.சண்முகலிங்கம், தாசீஸியஸ், பாலேந்திரா, நிர்மலா நித்தியானந்தன் போன்றவர் களுடைய நாடகங்களுக்கு ஒப்பனை செய்தவர். இவரது புதல்வர்களில் இம்மானுவேல் அன்ரனி,டன்சன்சாள்ஸ் என்பவர்களும் ஒப்பனைக்கலையில் மட்டுமன்றி நாடகக்கலை யிலும் சிறந்து விளங்குவதுடன் தனது கலைத் தொடர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளார். இவருடைய இப்பணிகளுக்காக மகவம் கௌரவ விருது, யாழ்ப்பாண கலாசாரப் பேரவையின் யாழ்ரத்னா, வடக்கு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் விருது போன்ற விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பெற்ற இவர் 2011-10-29 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!