1954-02-23 யாழ்ப்பாணம் திருநெல்வேலி என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உடற் கூற்றியல்துறைத் தலைவராகப் பணியாற்றிய இவர் மிகுந்த மனிதநேயப் பணியாளருமாவார். “இறைவனுக்கு அடுத்தவன் வைத்தியன்” என்ற உயர் பதவியினைத்தனதாக்கி பற்பல இன மக்களுக்கு சேவை பலபுரிந்து தான் பெற்ற பெருவரமாகிய நுண்ணறிவினைக் கொண்டு தான் அறிந்து தெரிந்தவற்றினை ஒளிவு மறைவின்றி வைத்திய மாணவர்க்கு தாயன்புடன் பெருமைகளின்றி சகலரும் மதிக்கக்கூடிய வகையில் புனித சேவையாற்றியவர். தனது சேவைக்கப்பால் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்ற அமைப்பினை நிறுவி எமது சமூகத்தில் எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றனவோ அதற்கெல்லாம் குரல் கொடுத்து அத்துமீறல்களை இச்சங்கத்தினூடாக தட்டிக்கேட்டவர்.1987 ஒக்ரோபர் கால நிகழ்வுகளின் அடிப்படையில் இவருடன் மேலும் மூன்று விரிவுரையாளர்களும் இணைந்து வெளியிட்ட நூலான முறிந்தபனை முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 1989-09-21 ஆம் நாள் அகால மரணமடைந்து நிலையுலகம் சென்றார்.