அளவெட்டி மேற்கு நாகேஸ்வரம் என்னும் இடத்தில் காணப்படுகின்ற இவ்வாலயம் ஈழத்தில் காணப்படுகின்ற விஸ்ணு ஆலயங்களில் முக்கியத்துவமுடைய ஆலயங்களில் ஒன்றாகும். 200 வருடங்களுக்கு முன்னர் இவ்வாலயம் அமைந்திருக்கும் இடமானது பல்வேறு மரங்களாலும் நிறைந்த பற்றைக்காடாக, பாம்புப்புற்றுகளும் கொண்ட இடமாகக் காணப்பட்டது. இப்பாதையால் மக்கள் கீரிமலை,மாவிட்டபுரம் போன்ற இடங்களுக்குச் சென்று வருவது வழக்கம். ஒருமுறை தனது தந்தையாருடன் கீரிமலைக்குச் சென்ற ஒன்பது வயதுச்சிறுவன் தந்தையாரைத் தவறவிட்டுவிட்டான்.பின்னர் ஒரு பெரியவர் வந்து அச்சிறுவனை ஆறுதல்படுத்தி தந்தையாரிடம் அழைத்துச்சென்று ஒப்படைத்து மறைந்துவிட்டார். பெரியவர் சிறுவனுக்கு அவலும் தண்ணீரும் கொடுத்து ஆறுதல்படுத்திய இடத்தில் இரண்டு பாம்புகள் படமெடுத்தாடின. அதிசயத்திலாழ்ந்த மக்கள் இவ்விடம் நாகதம்பிரான் இடமென வணங்கி நின்றனர். காலக்கதியில் இவ்விடம் சிறிய ஆலயமாக மாறியது. இவ்வாலயத்திற்கு ஆவணிமாத ரோகிணி நட்சத்திரத்தில் பொங்கல் செய்து வழிபட்டு வந்தனர். இவ்வாலயத்திற்கு அரைமைல் தூரத்தில் அருட்கவி விநாசித்தம்பி அவர்கள் பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.அவர் தனது பிள்ளைகளுக்காக தனிக்குடித்தனம் போக எண்ணி தென்கிழக்கில் இருந்த வீட்டை வாங்குவதற்கு முற்பணம் கொடுத்துவிட்டு வந்து தனது வீட்டாரிடம் கூற அவர்கள் எதிர்த்தனர். அவர் எதுவும் பேசாமல் நித்திரையிலாழ்ந்து விட்டார். அன்று இரவு அவரது கனவில் ஓர் அழகிய சிறுவனும் சிறுமியும் தோன்றி இவர் எனது அண்ணன் நீ பயப்படாதே, என்னை நீ ஆதரித்தால் உன்னை நான் ஆதரிப்பேன் என்று கூறி மறைந்தனர். கண்விழித்து தாயாரிடம் கனவைக்கூற அவர்களும் மகிழ்ச்சி கொண்டு முற்பணம் கொடுத்த வீட்டினை வாங்கி குடிபுகுமாறு தெரிவித்தனர். 1953இல் வீட்டினை வாங்கி குடிபுகுந்தார். அன்று சுவாமி அறையில் பெரிய பாம்பு நிமிர்ந்து நின்று பின் மறைந்துவிட்டது. வீட்டிற்கும் கோவிலிற்கும் பொங்கினார். கோயிலைக்கட்டியதோடு கோவில் இருந்த காணியினையும் விலைக்கு வாங்கினார். பதினாறடி நீளத்தில் 1969 இல் கோவிலைக் கட்டினார். 1979 இல் தூபியுடன்கூடிய கோவிலானது. 1986 இல் தேர் உற்சவம் செய்தார். சோதிடப் பணியில் பிரகாசமானார். இவ்வாலயத்தினை ஸ்தாபித்தவரான விநாசித்தம்பி அவர்கள் ஆலயப்பொறுப்பில் தனது சந்ததியினர் இருந்து நிர்வகிக்கவேண்டுமென்பதற் காக பொறுப்புரிமை பரிபாலன சபை ஒன்றினை எற்படுத்தியுள்ளார். ஒவ்வொரு வருடத்திலும் ஆவணி மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.