யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டர் அமைந்துள்ள சந்தியிலிருந்து வடக்குப் பக்கமாக செல்லும் பாதையில் மேற்குப் பக்கமாக அமைந்துள்ள இவ்வாலயத்திற்குச் சொந்தமான பத்மாசலிச் செட்டிமார்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் அமைந்துள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் நல்லூர் இராசதானியின் வாரிசான குணசிங்கை ஆரியன் செகராசசேகரனின் காலத்தில் சிறிய உருவில் பத்மசாலி செட்டிகளால் தமது வைணவ சமய சம்பிரதாயத்தையும் தமது சமூகத்தினரின் கடவுள் வழிபாட்டினை வளர்க்கும் நோக்குடனும் இவ்வைசிய குலத்தவர்களால் உருவாக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் சிலா விக்கிரகமாக ஸ்தாபிக்கப்பட்டிருந்தார். பதினெட்டாம் நூற்றாண்டில் தென் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஸ்ரீதேவி பூமாதேவியுடன் கூடிய ஸ்ரீவராராஜப்பெருமாள் சிலா விக்கிரகங்கள் கருவறையில் அமைக்கப்பட்டன. 1810 இல் மூன்று காலப்பூசைகள் நடைபெற்று வந்துள்ளன. இதன் பின்னர் பத்மசாலிச் செட்டிமார்கள் ஒன்று சேர்ந்து இக் கோவிலை விஸ்தரிக்கத் தொடங்கினார்கள். யாகசாலை, களஞ்சிய அறை என்பன ஸ்தாபிக்கப்பட்டு 1826 இல் கும்பாபிN~கம் நடைபெற்றது. 1835 இல் பல காணிகளை தர்மசாசனம் கொடுத்துதவினார்கள். தமது இல்லங்களில் நெசவு செய்துவரும் வருமானத்தில் ஒரு பகுதியை ஆலய வளர்ச்சிக்காக வழங்கினார்கள்.இவ்வைசியர் குலத்தோரால் அறங்காவலர் சபை உருவாக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டளவில் “வண்ணை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் ஆதீன மகா சபை யாழ்ப்பாணம்” என்ற பெயரில் ஒரு மகா சபையை உருவாக்கி தேவஸ்தான செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்புக்களை ஒப்படைத்தனர். இச்சபையினது கண்காணிப்பினாலும் ஒத்துழைப்பினாலும் ஆலயம் இன்றைய வளர்ச்சி நிலையினை அடைந்ததெனலாம். ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புடைய விஸ்ணு ஆலயங்களில் ஒன்றான இவ்வாலயத்தில் ஒவ்வொரு வருடத்திலும்; புரட்டாதி மாதத்தில் வரும் சுக்கிலபட்சத் திதியில் வரும் அத்தம் அல்லது சித்திரை நட்சத்திரத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி ஒன்பதாவது தினம் உத்தராட நட்சத்திரத்தில் தேரும், திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவமும் நடைபெறும். தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது என்றாலும் ஆஞ்சநேயர் பொங்கலுடன் சேர்த்த பதின்னான்கு நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.