Sunday, May 31

கந்தசுவாமி கோயில் நல்லூர்

0

நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கியது. இக்கோயில் யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக அறியப்படுகிறது.
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகபாகு என்பவரால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.
ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டை சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட புவனேகபாகு அல்லது புவனேகபாகு எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, செண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:
“ சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சிவகோத்திரோற்பவ இரகுநாதமாப்பாணர் சமுக ”
‘திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர் களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு’ என்பது இதன் பொருள்.
முன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம்.
உண்மையில் நல்லூர் இப்போது உள்ள அமைப்பானது முன்றாவது கோயில் கட்டுமானம் ஆகும். இந்த 3 வது கோயிலின் அமைப்பில் அது வரை இருந்த பழைய ஆலயத்தின் எந்த கட்டுமானங்களும் சம்பந்தப்படாது புதிய கட்டுமானம் தான் இப்போதுள்ள நல்லூர்கந்தன் ஆலயம் அகும்.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658–1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.

மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாத்திர விதிக்கமைந்த கட்டட முறைக்கும் மாற்றியமைத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவர வித்திட்டவர் ஆறுமுக நாவலர் ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.
இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிலாவிக்கிருகத்திற்குப் பதிலாக வேல் அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி பிள்ளையார் முதலான பரிவாரத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாலயம் கிழக்கிலும், தெற்கிலும் வாசல்களைக் கொண்டுள்ளது. இவற்றின் மேல் பெருங்கோபுரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆலயத்தின் தெற்குப் புறத்தில் உள்ள தீர்த்தக்கேணி நன்கு திட்டமிடப்பட்டு, படிக்கட்டுகளும் மண்டபங்களும் கொண்டதாய் அமைக்கப் பட்டுள்ளது. முருகனின் மூர்த்தங்களில் ஒன்றான தண்டாயுதபாணிக்கு அங்கு சிறு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன. இவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன.
தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜை இடம்பெறுகின்ற மையும், மாலையில் பள்ளியறைப் பூஜை இடம்பெறுகின்ற மையும் இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். திருவிழா காலங்களில் மட்டுமல்லாமல் தினமும் மாலையில் முருகப் பெருமானை ஊஞ்சற் பாட்டுப்பாடி, அழகிய சிறு மஞ்சத்தில் ஏற்றி பள்ளியறையில் துயில்கொள்ளச் செய்வதும், மறு நாள் அதிகாலையில் திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி பாடி, முருகனைத் துயிலெழுப்பி அதே சிறு மஞ்சத்தில் அழைத்து வந்து மூலஸ்தானத்தில் அமர்த்துவதும் சிறப்பான மரபாகும்.
இங்கு, ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆடி அமாவாசையின் ஆறாம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிறது. மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடியாட்டம்|காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.

விசேட நிகழ்வுகள்

புதிதெடுத்தல், கொடிச்சீலை வழங்குதல், கந்தசஷ்டி விரதம், சூரன்போர், குமாராலயதீபம், கார்த்திகைத்திருவிழா என்பன இவ்வாலயத்தின் மரபு சார்ந்த திருவிழாக்களாகவும், தொன்று தொட்டு மரப பேணி செய்யப்பட்டு வருகின்ற முக்கிய அமிசங்களாகவும் விளங்கி நல்லூரானின் அடையாளமாக திகழ்கின்றன.

அருளாளர்கள்

இவ்வாலயத்தின் தேரடியில் செல்லப்பா சுவாமிகள் தொடக்கம் யோகர்சுவாமி என பல அருளாளர்கள் வாழ்ந்து முருகனின் அருள்பெற்று பக்த அடியார்களை ஆட்கொண்டவர்கள். இவர்கள் தேரடிச் சித்தர்கள் எனப்போற்றப்படுவதும் நாம் அறிந்த விடயமாகும்.

ஆலயம் பற்றிய நூல்கள்

  • கூழங்கைத் தம்பிரான் பாடிய நல்லைக் கலிவெண்பா.
  • இருபாலைச் சேனாதிராச முதலியாரின் நல்லை வெண்பா.
  • நல்லையந்தாதி.
  • நல்லைக் குறவஞ்சி.
  • நல்லை நகர்க் கந்தன் பேரில் திருவூஞ்சல்.
  • திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி
  • உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் நல்லை கந்தசுவாமி விஞ்சதி.
  • நல்லை சரவணமுத்துப் புலவரின் நல்லை வேலவருலா‘.

விசேட சேர்க்கை

நல்லூர் நகரம் (யாழ்ப்பாணம்)

யாழ்ப்பாண அரசர் காலத்தில் (1215 தொடக்கம் 1619 வரை) நல்லூர் ராஜதானியாக விளங்கி வந்தது. தொடக்கத்தில் இந்த நகர் ‘சிங்கை நகர்’ என்று அறியப்பட்டது அதன் அரசன் ‘சிங்கை ஆரியன்’ என்றும் அழைக்கப்பட்டான். காலப்போக்கில், யாழ்ப்பாண அரசின் கடைசி காலத்தில் இது நல்லூர் என்று பெயர் பெற்றது. கோட்டை மன்னனிடம் யாழ்ப்பாண அரசை தோற்று விட்டு, 14 ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் கைப்பற்றிய கனகசூரிய மன்னனின் மகன் பரராஜசேகரன் சிங்கை ஆரியன் (1478–1519) ‘சிங்கை ஆரியன்’ எனும் பட்டப் பெயரை சூட்டிக் கொண்ட கடைசி மன்னாவான். ஆகையால் இக்காலத்தில் தான் சிங்கை நகர் நல்லூராய் மாறியது என்று கொள்ளலாம். அக்காலத்தில் எழுதப்பட்ட கைலாய மாலை எனும் நூல் ‘நல்லூர்’ என்ற பெயராலே தமிழரின் தலைநகரை குறிப்பிடுகிறது.
யாழ்ப்பாண அரசைப் போர்த்துக்கீசர் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக இருந்து வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப் படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தன ரென்றும், 15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், 13 ஆம் நூற்றாண்டளவில் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியான கூழங்கைச் சக்கரவர்த்தியே இந்நகரைக் கட்டுவித்தவன் என்பதும், சிங்கைநகர், நல்லூரின் இன்னொரு பெயர் என்பதுவும், பெரும்பான்மை ஆய்வாளர்களுடைய கருத்து.
1620 இல், போர்த்துக்கீசப் படைகள், ஒலிவேரா என்பவன் தலைமையில் நல்லூரைக் கைப்பற்றின. அவன் சிறிதுகாலம் நல்லூரிலிருந்து நிர்வாகத்தை நடத்திவந்தா னாயினும், இக்காலப்பகுதியில் நடைபெற்ற பல தாக்குதல்களைக் கருத்திற் கொண்டு, பாதுகாப்பின் நிமித்தம், நிர்வாகம், நல்லூரையண்டிக் கடற்கரையோர மாக இருந்த யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது போர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை.
அக்காலத்துக் கட்டடங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் இன்றுவரை நிலைக்க வில்லை என்றே கொள்ளலாம். அரசனின் அரண்மனையையும், வேறு சில முக்கியஸ்தர்களின் வாசஸ்தலங்களையும் விடக் கோயில்கள் மட்டுமே நிலைத் திருக்கக்கூடிய பொருள்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும். நகரின் நான்கு திசைகளிலும், கந்தசுவாமி கோயில், வீரமாகாளியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோவில், நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளை யார் ஆலயம்,சட்டநாதர் கோயில் ஆகிய கோயில்கள் இருந்ததும், யமுனை நதியிலிருந்து கொண்டுவந்த நீர் விடப்பட்ட யமுனா ஏரி எனப்பட்ட கேணியொன்றிருந்ததும் அக்காலத்திலும், அதன்பின்னரும் எழுதப்பட்ட சில நூல்கள்மூலம் தெரியவருகின்றது.
நல்லூர் யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்ததற்கு ஆதாரமாக இன்று இருப்பவை, அக்காலத்திய அரண்மனையிருந்ததாகக் கருதப்படும், சங்கிலித் தோப்பு எனப்படும் நிலமும், அதிலுள்ள ஒரு நுழைவாயில் வளைவுமாகும். இவற்றைவிட, நாயன்மார்கட்டு குளம், பண்டாரக்குளம், பண்டாரவளவு, இராஜ வீதி, கோட்டை வாயில் முதலிய அரசத்தொடர்புகளைக் குறிக்கும் இடப்பெயர் களும் உண்டு. சங்கிலித்தோப்பு வளைவும், மந்திரிமனையும் ஒல்லாந்தர் காலக் கட்டிடங்களின் பகுதிகளென்பது அவற்றின் கட்டடக்கலைப் பாணியிலிருந்து தெரிகிறது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!