நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மிகப்புராதன கட்டடம் கி.பி. 948இல் கட்டப்பெற்றது. பின்னர் 13ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண மன்னனின் அமைச்சரினால் கோயில் பிறிதொரு இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு விருத்தி செய்யப்பட்டது என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. கி.பி. 1624இல் போர்த்துக்கீசர் கோவிலைத் தரைமட்டமாக்கியதும் பின்பு வந்த டச்சுக்காரர் காலத்தில் கி.பி. 1734 ஆம் ஆண்டில் திரும்ப நிர்மாணிக்கப்பட்டது. இதற்காக கடுமையாக உழைத்தவர்கள் இருவர். ஒருவர் பிராமணரான கிருஸ்ண சுப்பையா, மற்றவர் இரகுநாதமாப்பாண முதலியார். இரகுநாதமாப்பாண முதலியாhர் குருக்கள் வளவில் ஒரு நிலத்தை வாங்கி வேற்பெருமானை வைத்து வழிபாட்டை ஆரம்பித்தார். பின்னர் முருகனுக்கோர் கோவிலையும் அமைத்தார். நல்லூர் கந்தசுவாமி கோவில் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. கிழக்கு வாசலிலும், தெற்கு வாசலிலும், வடக்கு வாசலிலும் பெரிய கோபுரங்கள் ஆலயத்தைச் சிறப்பித்து நிற்கின்றன. ஆறு மணிக்கூட்டுக் கோபுரங்கள் அழகுறக்காட்சியளிக்கின்றன. தீர்த்தக்கேணியின் நான்கு புறமும் மண்டபம் உண்டு. நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாக நடைபெறும். நித்தியாக்கினி, நித்தியோற்சவம் இடம்பெற்று வருகிறது. சிற்ப வேலைப்பாடமைந்த மஞ்சம், கைலாசவாகனம் மற்றும் வெள்ளி வாகனங்கள் இங்கு பிரசித்தமானவை. சூரிய வழிபாடும் நேரம் தவறாத ஆறுகாலப்பூசையும் இங்குள்ள தனிச்சிறப்புக்களாகும். ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானமக்கள்இந்நாட்களில் வந்து வழிபடுவர். நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் வாழும்இந்துப் பெருமக்களுக்கு சமூகரீதியாகவும் முக்கியமானது. கோயிலின் மூலஸ்தானத்தில் கந்தனின் ஆயுதமான வேல் உள்ளது. முருகன் இரு மனைவியருடன் அலங்காரக்கந்தனாக திருவிழாக் காலங்களில் வலம்வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இன்றுவரை மாப்பாண முதலியாரின் வழித்தோன்றல்கள் கோயிலின் அறங்காவலர்களாக இருந்து இறைபணி செய்து வருகின்றனர்.