யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும்ஒன்றாக உள்ளது. காலத் தால் முந்திய வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுலமுனிவர், இராமன், சோழவேந்தன்,நளன்,அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதிசோழமன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் இதுவாகும். இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்பகாலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக்கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப்பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பனஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது. முன்னொரு போது மேரு மலையில் ஒரு பக்கத்தில் தவம்செய்து கொண்டிருந்த சுதாமா என்னும் பெயருடைய முனிவரால் தனது தவத்திற்கு இடையூறுசெய்தமைக்காகச் சாபமிடப்பட்ட யமத்கினி என்ற வேடன் கீரிமுகம் வாய்க்கப் பெற்றான். அவ்வேடன் இங்கு நீராடி சாப விமோசனத்தைப்பெற்றான். கீரிமுகம் நீங்கியதால் அவ்வேடன் நகுல முனிவர் எனப்பட்டார். இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்றும் நகுலகிரி என்றும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடமொழிச்சொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயம் நகுலேஸ்வரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இக்கோவிலை உருவாக்குவதற்கு ஆறுமுகநாவலர் முயற்சி எடுத்தார். 1878 ஆம் ஆண்டுக்காலத்தில் அவரது முயற்சியைத் தொடர்ந்து திருப்பணி வேலைகள் நடந்தேறி, நித்திய, நைமித்திய கிரியைகள் ஒழுங்காக நடைபெற்றுவந்தன. 1895 ஆம் ஆண்டு மன்மத ஆண்டு ஆனி மாதம் மஹா கும்பாபிN~கம் நடைபெற்றது. இங்கு ஆறுகாலப் பூசைகளும் நித்திய கிரியைகளாக இடம்பெற்று வருகின்றன.இவ்வாலய மகோற்சவம் மாசி மாதத்தில் பதினைந்து நாட்கள் நடைபெறுகின்றது. மாசி மகா சிவராத்திரியில் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.