ஈழத்திருநாட்டிலுள்ள சிவ ஆலயங்களில் திருக்கோணேஸ் வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், முனீஸ்வரம் ஈழத்துச் சிதம்பரமும் ஒன்றாகும். இத்தலம் இந்தியாவி லுள்ள சிதம்பரக்கோயிலில் நடைபெறும் கிரியை மரபுகளை பாரம்பரியமாகச் செய்து வருவதாலும், மார்கழித் திருவா திரை உற்சவமும் ஒத்திருப்பதாலும் ஈழத்துச் சிதம்பரம் என சைவச்சான்றோர்களால் போற்றப்பட்டு வருகின்றது.மூர்த்தி, தலம்,தீர்த்தம் என்பனவும் விசேடமாக அமைந்த பெருங் கோயிலாகும். இத்திருக்கோயிலில் அருவுருவத் திருமேனி யாக விளங்கும் சிவலிங்கப்பெருமானுக்கும் பூரணை புட்கலை சமேத ஐயனார் பெருமானுக்கும் அடுத்தடுத்ததாக இரு கோபுரங்கள் வாயிலில் வானை ஓங்கி நிற்கின்றன. இத்தலத்தில் பங்குனி, ஆடி, மார்கழி ஆகிய மாதங்களில் மூன்று பெருந் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. மார்கழித் திருவாதிரை உற்சவம் சிறப்புடையது. தவத்திரு சிவயோக சுவாமிகள் இத்தலத்தினை வழிபட்டு சிறப்பான ஆலயம் எனச் சுட்டிக்காட்டினார்.