சாவகச்சேரிச் சந்தையின் தென் பகுதியையொட்டிக் காணப்படுகின்ற மருதமரங்கள் நிறைந்த பகுதி ஆதிகாலத்தில் வயல்நிலங்களாகவே இருந்தன. அப்பகுதியில் சிவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வந்தது. போர்த்துக்கேயரின் வருகையின் பேறாக சைவாலயங்களின் அழிப்பு இவ்வாலயத்திலும் இடம்பெற்றது. அடியவரொருவரால் விக்கிரகங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கிணற்றினுள் போடப்பட்டது. காலப்போக்கில் இக்கிணறு சாத்தாவரிக்கொடிகளால் மூடப்பட்டுமண்மேடாகியது. யாவா தேசத்தைச் சேர்ந்த யாவகர்கள் சாவகச்சேரி யில் குடியேறியதனால் யாவகர்சேரி சாவகச்சேரி என அழைக்கப்பட்டது. இத்தேசத்தைச் சேர்ந்த சிவபக்தனாகிய விருபாக்கன் என்பவன்பால் வியாபாரத்தினைமேற்கொண்டு வந்தான். இவன் தலையில் பாற்குடத்துடன் வருகையில் சாத்தாவரிக்கொடி தடக்கி விழுத்தியது. தொடர்ந்து மூன்று முறை இவ்வாறு நடந்தமையினால் அக்கொடியினை கத்தியினால் வெட்டியவேளை இரத்தக் கசிவோடு சிவலிங்கமொன்றினைக் கண்டான்.இவ்வாறு தான்தோன்றீஸ்வர மாகத் தோன்றியதே அமிர்தபாஷினி உடனுறை வாரிவனநாதர்பெருமான் கோயிலாகும். சாத்தாவரிக்கொடிகளால் மூடுண்டு கிடந்தமையினால் அச்சிவலிங்கப்பெருமானை வாரிவனநாதர் என்றும் அம்பாளை அமிர்தபாணி என்றும் அடியவர்கள் அழைத்தார்கள். 2012ஆம் ஆண்டு ஐப்பசித் திங்களில் முதன்முதலாக பத்து நாட்கள் நடைபெறும் வகையிலான மகோற்சவம் ஆரம்பமானதும், 2013ஆம் ஆண்டு தைத்திங்கள் பொங்கல் தினத்துக்கு இரண்டாம் நாள் முதன்முதலாக வாரியப்பருக்கான மகோற்சவம் பத்து நாட்கள் நடைபெறும் வகையில் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.