33 மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற வணபிதா கலாநிதி எச்.எஸ்.டேவிட் 1907 ஜூன் மாதம் 21ஆம் திகதி வடமராட்சியைச் சேர்ந்த தும்பளைக் கிராமத்தில் பிறந்தவர். 1913ஆம் ஆண்டு தொடக்கம் 1924ஆம் ஆண்டு வரை யாழ். பத்திரிசியார் கல்லூரியில் கற்றவர். அந்தக் கல்லூரியில் இருந்து இலண்டன் மற்றிக்கியூசின் பரிட்சையில் சித்தியடைந்தார். பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்து பி.ஏ. பரிட்சைக்குத் தோற்றி முதலாம் தரத்தில் வரலாற்றுப் பாடத்தில் சித்தியடைந்தார். ((B.A. Hons, History 1st Class – University of London)) 1936ம் ஆண்டு பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியப் பணியினைப் பொறுப்பேற்று 25 வருட காலம் அங்கு மாணவர்களுக்குப் போதித்தார். 1947ஆம் ஆண்டு தொடக்கம் 1951 வரை தமது கல்வி அறிவினை மேலும் விருத்தி செய்யும் நோக்கமாக இந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணத்தை மேற்கொண்டார். அப்பொழுது இருந்த ஆரிய மொழிகளில் முதுமாணிப் பட்டத்தினையும் மொழியியலில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். இக்காலகட்டத்தில் இவர் பல்வேறு மொழிகளை ஆழ்ந்து கற்றார். ஐரோப்பிய மொழிகள் 14 இலும் செமித்திய மொழியில் 5 இலும் இந்தோ – ஆரிய மொழிகள் 14 இலும் தேர்ச்சி பெற்றார். இவ்வடிகளார் 1931ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி கத்தோலிக்க மதகுருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இளைப்பாறிய பின்னர் ஞானப்பிரகாசம் அடிகளார் ஆரம்பித்த சொற் பிறப்பு அகராதியைத் தொகுத்து முடிப்பதில் தீவிர கவனம் செலுத்தினார். இந்த சொற்பிறப்பு அகராதிகள் 1970ஆம் ஆண்டிலிருந்து வெளிவரத் தொடங்கின. 1981ஆம் ஆண்டு அவர் மறைவதற்கு முன்னர் அந்த அகராதியில் 5 தொகுதிகள் வெளிவந்துவிட்டன. தும்பளையில் கத்தோலிக்க தேவாலயம் 1634ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவருடைய மூதாதையரே இந்தத் தேவாலயத்துக்கு அருகாமையில் நீண்டகாலம் குடியிருந்தவர்கள் ஆவர். இவருடைய தந்தையாருடைய பெயர் எலிசபெத் என்பதாகும். எலிசபெத் பாவிலுப்பிள்ளை தம்பதியினரின் மகள் ஆவார். இவருடைய தந்தையார் மதகுருவாக வரும் நோக்கத்துடன் இறையியல் பள்ளியில் இணைந்து கொண்டவர். ஆனால் அவருடைய தகப்பனார் சடுதியாக இறந்துவிடவே இக்கல்வியினை அவரால் தொடர முடியவில்லை. இவ்வாறு இறையியல் படிப்பை தாம் நிறுத்திக் கொண்டபடியினால் தம்முடைய மகன் எப்படியாவது மதகுருவாக வேண்டும் என்று தீர்மானித்து அவரை இப்பணிக்கு அர்ப்பணம் செய்தார்.தாவீது (H.S.David) அடிகளார் கல்வி கற்கும் வயதை எட்டியதும் அவருடைய தந்தை பத்திரிசியார் கல்லூரியில் அவரைச் சேர்த்து விடுதியிலேயே தங்கிக் கற்பதற்கு ஒழுங்கு செய்தார். கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் அவர் தம்முடைய தாயாரை இழந்துவிட்டார். ஆனால் தந்தையாருடைய அரவணைப்பினால் தமது படிப்பை உற்சாகமாகத் தொடர்ந்து முடித்தார். தாவீது அடிகளார் கல்வியில் சிறந்து விளங்கியவர். ஆங்கிலேயர் ஆட்சிசெய்த காலத்தில் அரசில் உயர்ந்த பதவியைப் பெற்றிருக்கமுடியும். ஆனால் தந்தையாரின் விருப்பப்படி மதகுருவாகப் பணி செய்யத் தீர்மானித்தார். இவரே பருத்தித்துறைப் பங்கின் முதலாவது கத்தோலிக்க குருவாக விளங்குகின்றார். முதன் முதலாக இவர் தம்முடைய பெயரை தாம் தொகுத்த (1970 இல்) சொற் பிறப்பு அகராதியில் தும்பளை அருட்தந்தை கலாநிதி ஹயசிங் சிங்கராயர் தாவீது (அடிகள்) எனக் குறிப்பிட்டுள்ளார். “தாவீது” என்பது எபிரேய மொழியில் காணப்படும் பெயராகும். இவருடைய சொற்பிறப்பு ஆராய்ச்சிகள் மூலமாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றார். இரு சாகியத்தாரின் மொழிகளும் ஒரே சொற்பிறப்பைக் கொண்டவை. எனவே இருவரும் ஒரே இனத்தார் என்று எடுத்தியம்பினார். சிங்களவரும் தமிழரும் ஒருவரையொருவர் பகைத்துக்கொள்ளுவது அறிவீனம். ஏனெனில் இரு சாகியத்தாரும் ஒரே அடியில் இருந்து தோன்றியவர்கள். இறுதிவரை அவர் தீவிரவாதத்தையும் பகை உணர்ச்சியையும் கடிந்து கொண்டே வந்தார். இதுவே இருவருடைய வாழ்க்கையில் காணப்படும் தனித்தன்மையாகும். தாவீது அடிகளார் மிகுந்த எளிமை வாய்க்கப்பெற்றவர். உடையிலும் உணவிலும் இருப்பிடத்திலும் கடும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தார். ஆனால் அவரிடம் உடலைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற அரிய சிந்தனையும் காணப்பட்டது. உடலைப் பாதுகாப்பதற்கு தேகப்பியாசம் அவசியம் என்று உணர்ந்து கொண்டார். இதனாலே “ரெனிஸ் றக்கற்றோடு” அவர் நடந்து செல்வதனை பலர் கண்டுள்ளார். யாழ்ப்பாணத் திலிருந்த கோட்டை ரெனிஸ் கிளப்பில் விளையாடுவது அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு சம்பத்தரிசியார் கல்லூரியில் விளையாட்டுத் துறையில் மாணவர்கள் ஊக்கமாக ஈடுபடவேண்டுமென்று உற்சாகம் அளித்தார். எத்தகைய வேலைகள் இருந்தாலும் அவர் பிரார்த்தனை, வாசிப்பு, உடற்பயிற்சி, பிறருக்கு சேவை என்பதனை ஒருபோதும் தவறவிடுவது இல்லை. தாவீது அடிகள் கல்விக்காக தமது வாழ்வை அர்ப்பணித்தவர். 1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி அவர் மனதில் பெரிதும் குடிகொண்டிருந்த யாழ். பொதுசன நூல்நிலையம் எரியூட்டப்பட்டசெய்தி அறிந்தவேளை அவர் சிந்தை கலங்கியது. இச்செய்தியைக் கேட்டவுடன் மாரடைப்பினால் உயிர் நீத்தார்.