1939-01-19 ஆம் நாள் யாழ்ப்பாணம் கலட்டி என்னுமிடத்தில் பிறந்து கொக்குவிலில் வாழ்ந்தவர். இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் பிரதேச செயலாளராகவும் யாழ்ப்பாண மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராகவும் பணியாற்றியவர். தனது நிர்வாகப் பணிகளுக்கப்பால் சமூகத்தில் உள்ள சிறுமைகளை சாடியும் ஒடுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களது அவலங்களை எடுத்துக்கூறுவதாகவும் தனது கலை ஆளுமையின் கருத்தாக்கமாகவும் கொண்டு மிளிர்ந்தவர். குறுநாவல், நாவல், சிறுகதை ஆகியவற்றில் அளப்பரிய பங்கினை வழங்கியுள்ளார். மண்ணின் கனவுகள் என்ற சிறுகதைத் தொகுதியினையும் ஒருதிட்டம் மூடப்படுகின்றது. பூம் பனி மலர்கள், சிறைப் பறவைகள், மண்ணின் குழந்தைகள் ஆகிய நாவல்களையும் ஆக்கியவர். யாழ். இந்துக் கல்லூரியில்மு.கார்த்திகேசன், அற்புதரத்தினம், ஏரம்பமூர்த்தி, சிவராமலிங்கம், கணேசரட்ணம் போன்ற ஆளுமை ஆற்றல் கொண்ட ஆசான்களிடம் கல்வி கற்றுப்பெற்ற சிந்தனையின் விளைவே இவரது கலையாற்றலின் வெளிப்பாடாகும். சிறுவயதிலிருந்தே தனது ஆளுமையை வளர்த்து வந்ததோடல்லாமல் கடந்த இரு தசாப்தங்களாக ஆக்க இலக்கியத்துறையில் ஈடுபட்டு வந்தவர் என்றால் அது மிகையாகாது. நாடகத்துறையிலும் ஆற்றலுடைய இவர் இலக்கிய சாதனைகளுக்காக தகவல், யாழ் இலக்கிய வட்டம் போன்ற கலை நிறுவனங்களினால் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். நல்லை ஆதீன முதல்வரால் ஒப்புரவாளர் என்ற விருது வழஙகி மதிப்பளிக்கபட்டவ இவர் 2008-05-28 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.