Thursday, May 30

தங்கம்மா அப்பாக்குட்டி

0

1925.01.07 ஆம் நாள் மல்லாகத்தில் பிறந்தவர். சைவத்தமிழ் எழுச்சியில் ஆற்றிய சமய ஆன்மீகப் பணிகளுடன் சைவம் வாழவேண்டும்,சைவத்தமிழ் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றவகையில் நாவலர் பெருமானுக்கு அடுத்த படியாக அவர் வழியில் நின்று உலகளாவிய மட்டத்தில் வாழும் சைவத் தமிழ்ப் பெண்கள் எல்லோரிலும் முதன்மையானவராகத் திகழ்கின்றார். பண்டிதர், சைவப்புலவர் பட்டங்களைப்பெற்று ஆசிரியராக 31 ஆண்டுகள் பணிபுரிந்த இவர் தன்னுடைய பேச்சுத்திறத்தால் நாட்டின் வடதிசையின் மணிமுடியாகத் திகழும் நகுலேஸ்வரர் ஆலயம் முதல் மத்திய மாகாணத்தின் மணிமுடியாகத்திகழும் ஹற்றன் மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் வரை இவரது கணீரென்ற குரலோசை ஒலித்தமையும் சைவத்தமிழ் எழுச்சி எங்கும் பரவியமையும் கண்கூடு. இதுபோலவே இந்தியா முதல் பற்பல நாடுகளுக்கும் சென்று சைவத்தமிழ்ப் பெருமையைப் பறைசாற்றி நின்ற திறத்தால் அவர் பெற்ற பட்டங்களோ ஏராளம். ஆனால் மார்கழித் திருவாதிரை காலத்தில் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் அவர் ஆற்றிய உரைகளின் எழுச்சி கண்டு அவர்களால் வழங்கப்பட்ட சிவத்தமிழ்ச் செல்வி என்ற பட்டமே அவருடன் என்றும் நின்று பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். இதுவன்றி சைவம் வாழவேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு தான் பிறந்த ஜனவரி ஏழாந் திகதியை அறக்கொடை விழாவாக ஆரம்பித்து அத்தினத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஓரிரு நூல்களை வெளியிட்டு அதன்மூலம் வருகின்ற நிதியினை அறக்கொடைக்கே வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. ஆசிரியப்பணி, சமூகப்பணி, ஆலய அறங்காவல்பணி, சொற்பொழிவுப் பணி ஆகிய பன்முகப் பணிகளால் மக்கள்பணி செய்தவர். தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக 1977 ஆம் ஆண்டு பொறுப்பேற்று இறக்கும் வரை பணியாற்றியவர். இவரது காலத்தில் தெல்லிநகர் துர்க்கை அம்மன் ஆலயம் பேரெழுச்சி கண்டமை வரலாற்றில் மறுக்கமுடியாத உண்மை. இங்கு மகளிர் இல்லம், அன்னையரில் லம், சைவத்தமிழ் ஆய்வுநூலகம், யாத்திரிகர்மடம் எனப்பல அமைப்புக்களை நிறுவியவர். பல நூல்களின் ஆசிரியராகவும், பழம் பெரும் நூல்களின் பதிப்பாசிரியராகவும் திகழ்கின்றார். சிங்கப்பூர், மலேசியச் சொற்பொழிவுகள், இலண்டனில் ஏழுவாரம், பத்துச்சொற் பொழிவுகள், கந்தபுராணச் சொற்பொழிவுகள் முதலான இவரது நூல்களும், இவரைத் தலைவராகக் கொண்டமைந்த மணி விழாமலர், சிவத்தமிழ் இன்பம், பவளவிழாமலர், தங்கம்மா நான்மணிமாலை, தங்கத்தலைவி போன்ற நூல்களும், இவரால் பதிப்பிக்கப்பெற்ற நூல்களான பெரியபுராணவசனம், அரியவும் பெரியவும்-பகுதி1, பகுதி11, சைவபோதம், அபிராமி அந்தாதி, கந்தபுராணச் சுருக்கம் சைவக்கிரியைகளும் விரதங்களும் போன்றனவும் குறிப்பிடத்தக்கது. இவருடைய தன்னலம் கருதாத பணிகளைப் பெருமைப்படுத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழகம் 1997 ஆம் ஆண்டு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 2008.06.15ஆம் நாள் வாழ்வுலகை நீத்து இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!