யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை என்னும் இடத்தில் பிறந்தவர். தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் புகழ்பெற்ற எழுத்தாளராகும் வாய்ப்புக் கிடைத்தது. புரட்சிதாசன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் அறியப்பட்ட போதிலும் பொதுவுடமைக் கட்சியாளராகச் செயற்பட்டு முற்போக்கு எழுத்தாளர் என்று புகழ்பெற்றார். அரசியல் நோக்கிற்கு ஒரு கருவியாகவே எழுத்தாக்கங்களைப் பயன்படுத்தி வருகின்றேன். எழுத்து எனக்கு தொழிலல்ல என்று கூறிய டானியலவர்கள் தமிழகத்து மணிக்கொடி இதழைப்படித்து அதன் எழுத்தாளராக மாறினார். சுதந்திரன், ஈழகேசரி, தேசாபிமானி, தினகரன், வீரகேசரி முதலிய ஏடுகளில் அவர் ஆக்கங்கள் வெளிவந்தன. தமிழக இதழ்களான சரஸ்வதி, தாமரை இதழ்களிலும் எழுதியது மட்டுமன்றி தமிழகத்திலும் புகழ்பெற்றார்.டானியலவர்கள் கட்டுரை, நாடகம், சிறுகதை, நாவல், குறுநாவல் ஆகிய துறைகளில் மிகுந்த படைப்பாளியாக விளங்கினார். டானியல் கதைகள்-10, உலகங்கள் வெல்லப்படுகின்றன-13, முதலிய சிறுகதைகளும் பஞ்சமர், போராளிகள் காத்திருக்கின்றனர், கோவிந்தன், அடிமைகள், கானல், தண்ணீர், பஞ்சகோணங்கள் ஆகிய நாவல்களும் பூமரங்கள்,கே.டானியல் குறுநாவல்கள் ஆகிய குறுநாவல்களும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. கே.டானியல் கடிதங்கள், என்கதை என்ற நூல்களும் வெளிவந்துள்ளன. 1986-03-23 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.