Saturday, October 5

சோமசுந்தரப்புலவர்

0

1878-05-25 ஆம் நாள் மானிப்பாய் -நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். தங்கத்தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். “ஆடிப்பிறப் புக்கு நாளை விடுதலை” போன்ற பல செய்யுள்களை சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார். பலவகைப் பக்திப் பாடல்களையும் அவர் இயற்றியிருக்கின்றார். பனையின் பெருமைகளைக் கூறும் தாலவிலாசம், கதிர்காமம் முருகக் கடவுளைக் குறித்து பாடிய கதிரைச் சிலேடை வெண்பா புகழ் பெற்றவை. நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ், இலக்கண இலக்கியங்களையும் தனது உறவினரான இராமலிங்க உபாத்தியாயரிடம் ஆங்கிலத்தையும் கற்றார். சிறுவயதிலேயே பேச்சாற்றலையும் விவாதத்திறமையையும் பெற்றார். தனது இளமைப் பருவத்திலேயே அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை போன்ற நூல்களை இயற்றினார். பதிகம், ஊஞ்சல் என்றும் இரண்டு பிரபந்தங்களையும் பாடிய சோமசுந்தரப் புலவர் கலம்பகம், நான்மணிமாலை, அட்டகம், அந்தாதி, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களையும் பாடினார். சைவத் தலங்களை மையமாக அட்டகிரிக் கலம்பகம், தில்லை அந்தாதி, கதிரைச் சிலேடை வெண்பா போன்ற பிரபந்தங்களைப் பாடியுள்ளார். நானூற்றுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த தாலவிலாசம் என்ற இவரது செய்யுள் நூல் பனையின் பெருமைகளைக் கூறுகிறது. சிறந்த குழந்தைப் பாடல்கள் இயற்றுவதில் தமிழகத்தில் முன்னோடியாக விளங்கிய கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை போன்று ஈழத்தில் சோமசுந்தரப்புலவர் முதன்மை பெற்றுள்ளார். ஆடிப்பிறப் புக்கு நாளை விடுதலை , கத்தரி வெருளி, தாடியறுந்தவேடன், இலவு காத்தகிளி, பவளக்கொடி, எலியுஞ் சேவலும் போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கன. கந்தபுராணக் கதைகளும் அவை உணர்த்தும் உண்மை நூற்கருத்தும் கந்தவனக் கடவை நான்மணிமாலை, சாவித்திரி கதை ( உரைநடை நூல்), கந்தபுராண நுண்பொருள் விளக்கம் (சைவாங்கில வித்தியாசாலை வெளியீடு ), தந்தையார் பதிற்றுப்பத்து, நல்லை முருகன் திருப்புகழ், நல்லையந்தாதி, அருணாசலந்துரை சரித்திரச் சுருக்கம், சுகாதாரக் கும்மி ( சைவபரிபாலன சபையார் பதிப்பு ), சூரியவழிபாடு, மருதடி விநாயகர் பாமாலை, கந்தவனநாதர் திருப்பள்ளியெழுச்சி, அட்டகிரிப்பதிகம், கல்லுண்டாய் வைரவர் பதிகம், கதிரைமலை வேலவர் பதிகம், செந்தமிழ்ச் செல்வியாற்றுப்படை போன்றவற்றினையும் சிறுவர் பாடல்களாக அஞ்சு முகத்தவர் கொஞ்சி முகந்திடுமாறு முகப்பதுமம்” என்று தனது பதினெட்டு வயதில் முருகனைப் பாடியவர். ஈழத் திருநாட்டின் செய்யுள் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டில் பெருமையுடன் முன்னோடியாகத் திகழ்ந்தவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் எனலாம். அதுமட்டுமல்ல ஈழத்தில் திளைத்த செய்யுள் இலக்கிய வரலாற்றில் பழமைக்கும் புதுமைக் கும் பாலமாகவும் அமைந்தவர் சோமசுந்தரப் புலவர் என்றால் மிகை இல்லை. நாமகள் துணைகொண்டு பாடல்கள் இயற்றிய சோமசுந்தரப் புலவர் நாமகளின் சிறப்பினை எடுத்து ஓதிய பாடல்களை “நாமகள் புகழ் மாலையில் காணலாம். ‘கம்மனை கும்மி”, ‘பதி பசு பாச விளக்கச் செய்யுள்’ நூல்களும் சைவசித்தாந்தங்களை விளக்குவதாக ஆக்கப்பட்டுள்ளன. மேலும் அவர் எழுதிய கந்தபுராணக் கதைகளும் சைவசமயத்தின் உள் கருத்துக்களை தெளிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகும். இவர் ஆக்கிய ‘உயிரிளங் குமரன்’ நாடகம் மூலம் சமூகத்தில் தேங்கிக் கிடக்கும் சமூக குறைபாடுகளை எடுத்து இயம்பி யுள்ளமை புலவரின் துணிச்சலை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. நமது நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேசிய விழிப்புணர்வை உருவாக்க இவர் பாடல்கள் ஏதுவாக்கப் பட்டமை வியக்கத்தக்கதொன்றாகும். ‘உயிரிளங்குமரன்’ நாடகத்தில் கமத்தொழில், நெசவுத் தொழில் என்பனவற்றை மக்கள் அலட்சியம் செய்தமையை எடுத்துக்காட்டியும் அத்தொழில்களின் சிறப்பினையும் சுட்டிக் காட்டியதனால் மக்களிடையே மறுமலர்ச்சி ஏற்பட்டது. உயிரிளங்குமரன் நாடகத்தில் திருநீலகண்டன் பாத்திரமேற்று நடித்து நடிப்புத்துறையிலும் தனதாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.  1953-07-10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!