1902-10-18 ஆம் நாள் மானிப்பாய்- கட்டுடை என்னும் ஊரில் பிறந்தவர். சுன்னாகம் ஸ்கந்தவரோத யக் கல்லூரியின் புகழ்பூத்த அதிபராகக் கடமையாற்றிய இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வேளையில் அதிபர்களின் சிங்கம் என அழைக்கப்படும் நெவின்ஸ் செல்லத்துரை அவர்களினால் புடம் போடப்பட்டவர். பாடசாலையில் நடைபெற்ற மாணவர் மன்றக் கூட்டத்திற்கு பொறுப்பாசிரியர் வராமையினால் அதிபரவர்களால் சில தலைப்புக்களை எழுதி ஆங்கிலத்தில் உரையாற்றுமாறு மாணவர்கள் கேட்கப்பட்டார்கள். அப்போது சுப்பிரமணியம் என்ற மாணவன் எழுந்து ஒரு துண்டை எடுத்து அதிலுள்ள விடயத்தினை ஆங்கிலத்திற் பேசினான். இதனால் அனைவருமே வாயைப்பிளந்து நின்றவேளை அதிபர் நெவின்ஸ் செல்லத்துரை அவர்கள் பரவசப்பட்டு “இவன் ஒரு ஒறேற்றர் எடா” என்று கூறினார். அன்றிலிருந்து இவரது பெயருடன் ஒறேற்றர் என்ற பெயரும் இணைந்து விட்டது. மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் அதிபராக நியமனம் பெற்று அங்கு சென்று பல அரியபெரிய சாதனைகளை நிலைநாட்டினார். பாடசாலையின் தரத்தினை உயர்த்தியதோடமையாது ஒரேதடவையில் 50 மாணவர்களை பல்கலைக்கழகம் செல்லவைத்தார். கலைத்துறையிலும் விளையாட்டுத்துறையிலும் பாடசாலையை மிளிரவைத்து கரிசன மக்களையும் பாடசாலையில் சேர்த்து கல்வியறிவூட்டிய பெருந்தகையாளனான இவர் 1994-02-18 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.