Saturday, February 8

சுந்தரம்பிள்ளை, செ (கலாநிதி)

0

B.A. (Lond.), M.Ed. (Colombo), M.Phil. (Jaffna), Ph.D. (Jaffna)
Teacher Counsellor, Dip-in-Ed., Dip-in-Drama & Theatre Arts, SLEAS-II

அறிமுகம்.
கம்பர், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்ப் புலவரின் பரம்பiயிலே வந்த கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளை என முன்னாள் தமிழ்ப்பேராசிரியரும் யாழ்பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தருமான சு. வித்தியானந்தன் அவர்கள் 01.04.1970ஆம் நாள் பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் கூறிய கூற்றொன்றுடன் கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களது அறிமுகத்தினை ஆரம்பிக்கலாம். கவிஞர், ஆய்வாளர், ஆசிரியர், விரிவுரையாளர், அரங்கவியலா ளர், மண்பற்றாளன், என்ற பன்முக வகிபாகத்துடன் ஈழத்தில் வலம்வந்த காரை அவர்கள் தான் பிறந்த ஊர் மீது கொண்டிருந்த அதீத பற்றின் காரணமாக தனது பெயரின் முன்னால் காரைநகர் என்பதனை காரை என சுருக்கி அடைமொழியாக இணைத்துக்கொண்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்திருக்கும் தீவுகளில் காரைநகர் தனக்கென்றதான தனியிடத்தினை பெற்றிருக்கின்றது. ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன்கோயிலும் கயூரினா பீச் எனப்படும் அழகி கடற்கரையினையும் யாழ்ப்பாணத்தின் முதல் கலங்கரை விளக்கினையும் கொண்டமைந்து எந்நேரமும் தேவார திருப்பாசுரங்களை ஒலித்துக்கொண்டிருக் கும் பூமியில் வந்தோரை வரவேற்று இன்முகத்துடன் உபசரித்து வாழ்த்தி அனுப்பும் பண்புடை மண்ணில் வரலாற்றுக் காலத்தில் மன்னர்கள் போர் புரிந்தார்களென்ற காரணப் பெயருடன் விளங்கும் களபூமி எனும் அழகிய கிராமத்தில் செ. சுந்தரம்பிள்ளை அவர்கள் 1938 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 20 ஆம் திகதி செல்லர் – தங்கம் தம்பதியினருக்கு பிள்ளைகள் ஐவரில் மூன்றாவது புத்திரனாகப் பிறந்தார். அப்பூமியின் உரமே எப்போதும் தன் வாழ்வின் உரமெனக் கொண்டு வாழ்வோடு போராடிப் போராடி உயர்வு கண்டதே இவரின் வெற்றியாகும்.

காரைநகர் ஊரித் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வி ஆரம்பித்து, இடைநிலைக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவேனஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் பல்கலைக் கழகக் கல்வியைக் கற்று இளமாணிப் (பீ. ஏ.) பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

1976 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்தில நடத்தப்பட்ட நாடகமும் அரங்கியலும் கற்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவாகிய பதினொரு அரங்கப் புலமையாளரில் இவரும் ஒருவராக இரு வருடங்கள் பயின்று நாடகத்துறையில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாப்பட்டம் பெற்றதுடன், கல்வியியல் துறையிலும் டிப்ளோமாப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். இத்தகைய தகைமைகளைப் பெற்று மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார்.

இவருடைய தமிழ்மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்துவான் க.கி.நடராஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க.வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோர் விளங்கினர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழி, சமஸ்கிருத மொழி, பாளி மொழி, சிங்கள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றார்.

1960ஆம் ஆண்டில் கொழும்பு, சென். யோசேப் கல்லூரியில் ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். பின்னர் கேகாலை ஹெம்மாதகம முஸ்லிம் மகா வித்தியாலயம், கேமாவனல்ல சாஹிரா கல்லூரி, யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி, யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவ்வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மறைந்த திரு. அமிர்தலிங்கம் அவர்களின் வேண்டுதலின் பேரில் தனது ஊர்ப் பாடசாலையான காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபராகப் பதவியேற்றார். அதிபர் பணி தொடரும் வேளை பதவி உயர்வின் நிமித்தம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு விரிவுரையாள ராகவும், தொடர்ந்து தலவாக்கலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை சென்று அக்கலாசாலையின் அதிபராகவும் கல்விப்பணியில் உயர்வடைந்தார். மீண்டும் யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து, 1998ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை அதிபராகக் கடமையாற்றினார்.

இக்காலப் பகுதியிலேயே யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் மேற்பார்வையில்; வடஇலங்கை நாட்டார் வரலாறு என்ற ஆய்வுப் பொருளில் கலாநிதிப் பட்டத்திற்கான அய்வினை மேற்கொண்ட அரங்கியல் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்ற முதலாவது ஆளுமையாளராவார். பெற்றுக் கொண்டார். ஓய்வுபெற்ற பின்னரும் பலாலி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் ஆங்கில மொழி மூலம் கல்வியியல், உளவியல் ஆகிய பாடங்களைக் கற்பித்தார். கலாசாலையில் கடமையாற்றும் போதே திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் உளவியலையும், யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலையும், யாழ்ப்பாணக் கல்லூரியில் இந்துநாகரிகத்தையும் போதிக்கும் இடைவரவு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

பிற்காலப்பகுதியில் இந்தியாவிற்கு செல்லும் வேளைகளில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை அமெரிக்கன் மிஷன் கல்லூரி, பாளையங்கோட்டை சென். சேவியர் கல்லூரி ஆகியவற்றில் கருத்தரங்குகளை மேற்கொண்டதுடன் நாட்டாரியல் பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். அவற்றின் பயனாகவே இவரது இறுதி நூலான ‘ஈழத்து மலையகக் கூத்துக்கள்’ எனும் நூல் வெளிவந்தது. அதுமட்டுமன்றி ஜேர்மனி நாட்டிற்குச் சென்று, புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மாணவர்களின் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்குத் தயாரிக்கப்பட்ட ‘வளர்நிலை’ எனும் தமிழ்கல்வி நூலின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.

வாழ்வு முழுமையும் கற்றலையும் தேடலையும் தன் வசப்படுத்திக் கொண்டதனால் தன்னையொரு மாணவனாக அடையாளப்படுத்தி வாழ்ந்தார். அதனால் எத்துறையிலும் கற்பிக்கும் ஆற்றலையும் பேசும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார். தமிழ் மொழி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் சந்தேகம் என்றால் அதற்குரிய நூலைத் தேடி எடுத்து வாசித்து தீர்வு காண்பார். பண்டிதர் வித்துவான் க. கி. நடராஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ. பொன்னுத்துரை, தமிழ்த்தாத்தா கந்த முருகேசனார், ஆ. சபாரத்தினம் ஆகியோர் கற்பித்த தமிழ் பற்றி எப்போதும் பெருமை கொள்வார். எஸ். செல்லத்துரை, ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை, அன்ரன் யேசுதாசன், எம். எம். துரைசிங்கம் ஆகிய ஆசிரியர்களிடம் ஆங்கில இலக்கியமும் கற்றிருந்தார். கே. நாகரத்தினம், பிரம்மஸ்ரீ சீதாராமசாஸ்திரிகள், சீ. சீ. எஸ். ஆனந்தகுருகே ஆகியோரிடம் முறையாக சமஸ்கிருதம் கற்றதனால் உச்சரிப்புப் பிழையின்றி சுலோகங்களைச் சொல்லுகின்ற ஆற்றல் அவருக்குச் சாதகமாயிற்று. சண்டிலிப்பாய் நாகரத்தினம் ஆசிரியரிடம் பாளி மொழியையும் வண. மகாநாம தேரரிடம் சிங்கள மொழியையும் கற்றிருந்தார்.

தமிழ் மொழி மீதும் சைவத்;தின் மீதும் மிகுந்த பற்றுடன் வாழ்ந்த இவர், 1968 ஆம் ஆண்டு தமிழாராட்சி மாநாட்டுக்குத் தமிழ்நாடு சென்று வந்தார். தமிழரசுக் கட்சியின் முன்னணிப் பேச்சாளாராகத் திகழ்ந்த இவர் சிங்கள ஸ்ரீP அழிப்பில் பங்குபற்றிச் சிறைக்கும் சென்றவர். ஆவரங்காலில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில் நடைபெற்ற கவியரங்கில் ‘கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்’ எனக் கூற, இளைஞர் அணியொன்று தம் ஆதரவைக் கோசங்களாக்கி மேடை நோக்கி வந்தமை உணர்வுபூர்வ சம்பவமாகும். ஆனாலும் மொழி, மதம் இரண்டையும் நேசித்த போதும் அவற்றினை வெறியாகக் கொண்டவரில்லை. மனிதமே இவரது தலையாய பண்பு.

தமிழரசுக் கட்சி உறுப்பினரான இவர் அக்கட்சிக் கூட்டங்களுக்குச் சென்றுவரும் போது வட அல்வை க. முருகேசு ஆசிரியருடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தார். இவருடைய பண்பினையும் ஆற்றலையும் புரிந்து கொண்ட முருகேசு வாத்தியாரவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த தன் ஏக புதல்வியான இந்திராவதி அவர்களை 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இத்தம்பதியர், இல்லற வாழ்வில் நான்கு பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களுக்கு கௌசல்யா, மாதவி, பூங்குன்றன், திருப்பரங்குன்றன் என தமிழில் பெயர்சூட்டி அவர்களை கல்வியில் மட்டுமல்ல வாழ்வில் உயர்நிலை அடைவதற்கும் வழிகாட்டினார். அதில் வெற்றியும் கண்டார்.

ஆரம்ப காலங்களில் இவரது கவியாற்றல் கண்டு கனக செந்திநாதன் மேடைகளில் கவிபாடச் சந்தர்ப்பங்கள் அளித்திருந்தார். தொடர்ந்து அ. செ.முருகானந்தன், மதுரகவி நாகராசன் ஆகியோர் ஊக்குவித்தனர். அன்று வடஈழத்தின் மூலை முடுக்கெல்லாம் இவர் தம் கவிதைகள் அரங்கேறின. கவிதைகளைப் பண்டிதர் முதல் பாமரர் வரை ரசித்துக் கேட்கும் கவியரங்க மேடையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராக இவரை ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் பதிவிட்டுள்ளனர்.. நகைச்சுவையுணர்வுடைய இவர், பட்டிமன்ற மேடைகள், சமயச் சொற்பொழிவுகள், ஆய்வரங்குகள் போன்றவற்றிலும் பாராட்டுப்பெறும் பேச்சாளராக விளங்கினார். அத்துடன் தனியார் கல்வி நிறுவனங்களில் பிரபல்யமான இந்துநாகரிக ஆசிரியராகவும் அறியப்பட்டிருந்தார்.

நாடக ஆய்வாளனாக தன்னை இவர் இனங்காட்டிக்கொள்வதற்கு குடும்பச் சூழலும், இயல்பாக அமைந்த நடிப்பாற்றலும் காரணமாகின. இரணிய சம்ஹாரம் (நாட்டுக்கூத்து), ஆநசஉhயவெ ழக ஏநniஉந (ஆங்கில நாடகம்), பராசக்தி (சமூகநாடகம்) என்பவற்றில் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். பாடசாலை, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடிப்புப் பயிற்சியைப் பெற்றதுடன், பெரிய தகப்பன் அண்ணாவியார் ஆண்டிஐயா, ஆசிரியர் ஆ.முருகேசு, நடிகமணி வி.வி. வைரமுத்து ஆகியோருடன் நெருங்கிப் பழகி ஆட்ட நுணுக்கங்களையும், இசை நுணுக்கங்களையும் கற்றிருந்தார். ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றபோது தனக்கு ஆலோசனைகளை வழங்கி வழிநடத்திய பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் கா. சிவத்தம்பி இருவரிடத்திலும் வாழ்நாள் முழுதும் அன்பும், மதிப்பும், நன்றியும் கொண்டவராக இருந்தார். நாடக நெறியாளனாக பல்வேறு நாடகஙகளை இயக்கியுள்ளார். அந்தவகையில் சமூகநாடகங்கள், இதிகாச புராண நாடகங்கள், ஆட்டநாட்டுக்கூத்துக்கள,; சிறுவர் நாடகங்கள் என்ற வகையான நாடகங்களை நெறிப்படுத்தியுள்ளார்.

இவர் நெறிப்படுத்திய சமூகநாடகங்கள்
தரகர் தம்பர், தம்பி படிக்கிறான், வாழ்வும் தாழ்வும், சினிமா மோகம், சித்திரமே சித்திரமே.
இவர் நெறிப்படுத்திய இதிகாச புராண நாடகங்கள்
பக்தநந்தனார், கர்ணன், சகுந்தலை, தமயந்தி, வில்லொடித்த விதுரன், சிற்பியின் காதல்.

இவர் நெறிப்படுத்திய ஆட்டநாட்டுக்கூத்துக்கள்:
பாஞ்சாலி சபதம், மூவிராசாக்கள், முத்தா மாணிக்கமா, காமன்கூத்து.

இவர் நெறிப்படுத்திய சிறுவர் நாடகங்கள்
மூத்தோர்சொல் வார்த்தையமுதம், பாவம் நரியார்.

வுழங்கிய கௌரவங்கள்
விருதுகளும் கௌரவங்களும் தான் கலைஞனை வாழவைக்கும் என்பதில்லை. ஆனால் கிடைத்த விருதுகள், கௌரவங்கள் பதிவிற்குள்ளாவது காலத்தின் தேவையாகும். அவ்வகையில் இவர் பெற்ற பரிசில்கள் பின்வருமாறு:
1-பதுளை பாரதி கல்லூரி 1968இல் நடத்திய அகில இலங்கை ரீதியான கவிதைப்            போட்டியில் முதற்பரிசு, தங்கப்பதக்கம்.
2-யாழ் மாநகரசபை 1969 இல் நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசு.
3- அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி 1969 இல் நடத்திய கவிதைப்போட்டியில்                    முதற்பரிசாகத் தங்கப்பதக்கம்.
4-‘சுதந்திரன்’ நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசு.
5-தமிழ் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு.
6-யாழ் மாநகர சபை 1982இல் நடத்திய மன்றக் கீதத்திற்கான போட்டியில்                            முதற்பரிசும், விருதும்.
7-ஈழநாடு தினசரிப் பத்திரிகை 1970இல் நடத்திய அகில இலங்கைக் காவியப்                    போட்டியில் ‘சங்கிலியம்’ முதற்பரிசு.
8-யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990இல் சமர்ப்பித்த ஆய்வேடு         சிறந்த ஆய்வு எனக் கருதிக் கிடைத்த தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு    விருது.

சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற நூல்கள்:
தேனாறு (1968), சங்கிலியம் (1970), ஈழத்து இசைநாடக வரலாறு (1990), இந்துநாகரிகத்திற் கலை (1994), நடிகமணி வி. வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996).

வடக்குக் கிழக்கு மாகாண, சிறந்தநூற்பரிசு பெற்ற நூல்கள்:
இந்துநாகரிகத்திற் கலை (1994), நடிகமணி வி. வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996).

வடக்கு, கிழக்கு மாகாணக்கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் 2000ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய விழாவின்போது ஆளுநர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாண மாநகரசபையின் மன்றக்கீதத்தை எழுதியதற்காக இவருக்குக் கேடயமும், சான்றிதழும், பொற்கிழியும் வழங்கப்பட்டு அன்றைய மேயராகவிருந்த இராசா.விஸ்வநாதன் அவர்களால் பொன்னாடையும் போர்த்திக் கௌரவிக்கப் பட்டார். பொற்கிழியை எரிந்த யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார். யாழ். மாநகர மன்றுக்கான கீதம் திறந்த போட்டியாக இடம்பெற்றுத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தவிர யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும், யாழ்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டவை என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும். புகைவண்டி என்ற இவரது முதலாவது கவிதை அழ. வள்ளியப்பாவில் பூஞ்சோலை என்ற இதழில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து ‘பூஞ்சோலையிலும் ‘கண்ணன்’ எனும் சிறுவர் சஞ்சிகையிலும் பல கவிதைகள் வெளிவரத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து இலங்கைப் பத்திரிகைகளிலும் கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவரலாயின.

இவருடைய படைப்புகள் என்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பங்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவையாவன:
1. தேனாறு (1968)
2. சங்கிலியம் (1970)
3. தவம் (1971)
4. ஈழத்து இசைநாடக வரலாறு (1990)
5. பாதைமாறியபோது (1986)
6. காவேரி (1993)
7. இந்து நாகரிகத்திற் கலை (1994)
9. வி.வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996)
10. சிங்களப் பாரம்பரிய அரங்கம் (1997)
11. பூதத்தம்பி இசை நாடகம் (2000)
12. வட இலங்கை நாட்டார் அரங்கு (2000)
13. விவேக சிந்தாமணி – உரைநடை
14. நாடகதீபம் – தொகுத்தது
15. உளவியல் – பதிப்பித்தது
16. கல்வியியல் – பதிப்பித்தது
17. புள்ளிவிபரவியல் – பதிப்பித்தது
18. ஈழத்து மலையகக் கூத்துக்கள் ஆகிய பதினெட்டு நூல்களுக்குச் சொந்தக்காரராக மிளிர்கின்றார். ஏராளமான கவிதைளும் கட்டுரைகளும் பல்வே சஞ்சிகைகள், மலர்கள் என்பவற்றிலே எழுதி தன் ஆளுமைத்தினை வெளிப்பத்தினார். அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளையும் கவிதைகளையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானதாக அமையம் என நம்புகின்றோம்.

தொகுத்த நூல்கள்
பூதத்தம்பி இசை நாடகம்
நாடகதீபம் – தொகுத்தது
கல்வி உளவியல் (பாகம் – ஐஐ) – பதிப்பித்தது
காரை செ. சுந்தரம்பிள்ளை மணி விழா

கட்டுரைகளும் கவிதைகளும் (ஈழநாடு, வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் எழுதியவை)
தேசத்தை வீடாக எண்ண வேண்டும.; யூன் – 1967
முதன் முதலில் சந்தித்தேன.; மார்ச் – 1975
அரசியல் நீதி நடக்கிறது. ஜனவரி – 1979
புழுக்கம். யூன் – 1983
இசை நாடகங்கள் – பெப்ரவரி – 1985
சொக்கறி ஒரு சிங்களக் கூத்து – ஒக்ரோபர் – 1985
ஒரு கிராமம் கூத்துப் பழகத் தொடங்குகிறது – ஜனவரி – 1993
வட இலங்கை மகிடிக்கூத்து – ஜனவரி – 1995
அல்வாயூர்ச் செல்லையாவின் – ஒக்ரோபர் – 1995
பட்டமரம் ஒரு பாடம் புகட்டுது – ஒக்ரோபர் – 1999
மனிதம் மரித்து – ஓகஸ்ட் – 2001
வைரமுத்துவின் அரங்கு – ஒக்ரோபர் – 2001
லண்டனிலிருந்து ஒரு கடிதம் – யூலை – 2002
மனிதம் மரித்து – ஓகஸ்ட் – 2002
ஈழத்தின் புகழ்பூத்த கவிஞன் … டிசம்பர் – 2005
ஒரு கவிஞனின் பிரிவு – மே – 2006

நல்லைக்குமரன் மலர்
கோழியைப் பாடியவாயால் குஞ்சைப் பாடுவேனா? – 1993
ஆணவம் போக்கி அருளவோர் அவதாரம் – 1994
செவ்வேள் அருளும் திரப்பரங்குன்றம் – 1996
நடராஜ வடிவமும் தத்துவமும் – 1998

கலைமுகம்
கிராமியக் கலைகள் – மார்ச் – 1993
பள்ளு நாடகங்கள் – மார்ச் – 1994
காரை. செ. சுந்தரம்பிள்ளை – யோவான் அஞ்சலி – டிசம்பர் – 2005
அடிகளார் இனிது வாழ்க – 1999

இலண்டன் சுடரொளி
ஈழத்து நாடகமேதை வைரமுத்து – யூன் – 2007
ஈழத்து நாடகமேதை வைரமுத்து – ஓகஸ்ட் – 2007
ஈழத்து நாடகமேதை வைரமுத்து – மார்ச் – 2008
ஈழத்து நாடகமேதை வைரமுத்து – ஏப்ரல் – 2008
ஈழத்து நாடகமேதை வைரமுத்து – யூலை – 2008
ஈழத்து நாடகமேதை வைரமுத்து – ஜனவரி – 2009
ஈழத்தில் கவிஞர் கலாநிதி காரை.செ. சுந்தரம்பிள்ளையும் அவரது நாடகப் பணிகளும் – சித்திரை – ஆனி, 2010

விழா மலர்கள்
ஏ. ரீ. பொன்னுத்துரை வெள்ளி விழா மலர் – ஓகஸ்ட் – 1974
சொக்கன் 60 – யூன் – 1990
பாலர் கல்விக் கழகம் – வெள்ளி விழா மலர் – 1991
தமிழ் சாஹித்திய விழா – 1993
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் – தமிழ் கலைவிழா மலர் – 1994
கம்பமலர் – 1995
வில்லிசைப் புலவர் சின்னமணியின் வெள்ளி விழா மலர் – ஒக்ரோபர் – 1997
இலங்கை சுதந்திரதின 50 ஆண்டு நிறைவு விழா மலர் – 1998
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம், வெள்ளி விழா மலர் – 1999
அ. அமிர்தலிங்கம் பவழ விழா மலர் – ஓகஸ்ட் – 2002
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு – ஒக்ரோபர் – 2002
ஈழத்து நாடகமேதை வைரமுத்து – ஜனவரி – 2009

இவர் தன் இல்லற வாழ்விலும் இலக்கிய வாழ்விலும் ‘எறித்த முழுநிலா’வாகத் தான் வாழ்ந்தார். ஏற்றத்தாழ்வுகள் பார்த்து யாரோடும் உறவு கொண்டாடியதில்லை. எந்த இடத்திலும் தன் ஆளுமையை அடையாளப்படுத்தியபடியே வாழ்ந்தார். சிறியனவற்றைச் சிந்திக்காமையே இவரது பலம்; உயர்ந்த சிந்தனைகளும், மென்மேலும் முன்னேற வேண்டுமென்ற ஆர்வ மிகுதியுமே எப்பொழுதும் காணப்பட்ட விடயங்கள். அவரது முயற்சியே அவரது வளர்ச்சி, தனது உயர்வுகளுக்கு எவரது உதவியையும் நாடியவரல்ல.

உயர் பண்புள்ள நண்பர்களும், உறவுகளும் மாணாக்கர்களும் இவருடன் இரண்டறக் கலந்திருந்தமை என்றும் பலர் வியக்கும் விடயங்கள். அனைத்து வரங்களையும் பெற்ற பூரண மனிதனாக வாழ்ந்த காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்கள் 2005ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இருபத்தோராம் நாள் தனது அறுபத்தேழாவது வயதில் இலண்டனில் காலமானார். இவர்பற்றிய மேலதிக விபரங்களை karaikavi.com என்னும் இணையத்தில் பார்க்க முடியும்.

காரை செ.சுந்தரப்பிள்ளை அவர்கள் பற்றி அறிஞர்கள் உள்ளத்தெழுந்தவை
‘நவில்தொறும் நூனயம் போலும்
பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு’
(அதிகாரம்: நட்பு குறள் எண்:783)
தமிழரானவர் முதுசொம்
காரை என்ற புனைபெயர் தாங்கியே
கவிதை வானில் எறித்த முழுநிலா
ஊரைத் தன்னெழுத் தூழியத் தால்தமிழ்
உலகெலாம் நிலை நாட்டிய உத்தமன்
ஆர வாரமற்(று) ஆய்வுகள் செய்தவன்
அநுப வஸ்த்தன் ஆசிரியர் நடுவன்ஓர்
தாரகை எனப் போற்றிடத் தக்கவன்
தமிழ ரானவர் முதுசொம்நம் சுந்தரம்

நாட்டுக் கூத்துக்கள் ஆடி நயந்தவன்
நாட கத்தின் வளங்கள் அறிந்தவன்
ஏட்டில் கூத்துப் பழக்கும் அண்ணாவியார்
இரவெ லாம்மத் தளத்தொ டிசைத்திடும்
பாட்டில் நெஞ்சைப் பறிகொடுத் துப்பல
பாத்தி ரங்களை ஆட்டிப் படைத்தவன்
வாட்டும் நோய்தரு வாதையினூடும் நம்
மலைய கத்தவர் கூத்தை ஆராய்ந்தவன்

ஆர வாரங் கடந்தவன் தன்முதுகு
ஆரும் ஏற அனுமதிக் காதவன்
ஈர அன்பினன் உதவிகள் செய்வதில்
ஈடில் லாதவன் நட்புக் கிலக்கணம்
நேரில் போயிரு வார்த்தைகள் சொல்லிக்கண்
நீரி லாட்ட ஒண்ணாத மிகப்பெருந்
தூரமாம் எனும் சோகம் சுமந்தனம்
தூய நெஞ்சினோய்! சென்றுவா நண்பனே!

கண்ணை மூடிநீ தூங்குகிறாய், உன்றன்
காதல் மக்கள் கண்ணீர் கடலாட, நான்
என்ன வாறவர்க் காறுதல் சொல்லுகேன்!
ஏவர்தாம் எனக் காறுதல் சொல்லுவார்!
விண்ணை மூடிக் கவிந்தது காரிருள்
வீட்டில் எல்லா விளக்கும் அணைந்தன
எண்ண எண்ண இனிக்கின்ற பண்பினோய்
எண்ணுகேன் உனை என்றைக்கும் எண்ணுகேன்!

கவிஞர் சோ. பத்மநாதன்
– முன்னாள் முதல்வர்,
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, பலாலி.

அறிஞர்களின் மதிப்புரைகள்
கம்பர், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்ப் புலவரின் பரம்பரையிலே வந்த கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளை.-                                                                                    பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராதனை, 01.04.1970

ஆயிரத்திலொரு கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளை அவர்கள்-                         பேராசிரியர் வி. செல்வநாயகம், மல்லிகை, மார்கழி, 1969

காவியத்துக்கொரு காரை. செ. சுந்தரம்பிள்ளை.-செந்தமிழ்மணி                                 பொன். கிருஷ்ணபிள்ளை, வியாபாரிமூலை

ஆழமான சிந்தனை மிக்கவர்.- கவிஞர் அம்பி, சுதந்திரன், 18.10.1969

காரை. செ. சுந்தரம்பிள்ளையின் கவிதைகள் யாரையும் துள்ள வைக்கும்.- கவிஞர். வி. கந்தவனம், குரும்பசிட்டி

தேனாம் புலம்மிகு சுந்தரம்பிள்ளைநின் றீங்விவே. – அல்-ஹாஜ் ஆ.மு. ஷரிபுத்தீன், மருதமுனை, 27.12.1969

செங்கை பெறத்தவஞ் செய்சுந் தரம்பிள்ளை சீருறவே. – கவிஞர். வே. ஐயாத்துரை
அரியாலையூர், 28.02.1970

நன்றி : karaikavi.com
இத்தொகுப்பினை வடிவமைப்பதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய காரை செ.சுந்தரப்பிள்ளையவர்களின் புதல்வன் பூங்குன்றன் அவர்களுக்கு நன்றி.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!