Wednesday, May 29

சிவயோகமலர், ஜெயக்குமார் (திக்கம் )

0

1950 ஆம் ஆண்டு திக்கம் பிரதேசத்தில் பிறந்தவர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகளில் பாண்டித்தியமுடைய இவர் தினகரன் வாரமஞ்சரியில் 1999 ஆம் ஆண்டிலிருந்து 21 அத்தியாயங்களாக வெளியான அடிமையின் காதலி என்ற சரித்திர நாவல் மூலம் ஈழத்தின் முதலாவது பெண்சரித்திர நாவலாசிரியை என்ற பெருமையைப் பெற்றவர். இவரது கதைப் பொருளாக யாழ்ப்பாணத்துச் சமகாலப்பிரச்சினைகள், சமூகப்பிரச்சினைகள்,பெண்களின் வாழ்வியல் குடும்ப கலாசார மாற்றங்கள் என்பன விரவி நின்று மண்வாசனைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப் பது கவனத்திற் கொள்ளலாம்.1984 இல் சிந்தாமணியில் வெளியான மகன் தேடியவீடு என்ற முதலாவது சிறுகதையுடன் ஆரம்பித்தார். பல்வேறு அமைப்புக்களால் நடத்தப்பட்ட போட்டிகளில் முதற் பரிசினைப் பெற்றிருக்கும் இவர் தினகரன், தினக்குரல், வீரகேசரி, சுடர்ஒளி, ஈழநாடு, முரசொலி, தினமுரசு, ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் லண்டன் தமிழ்உலகம், சிரித்திரன், கற்பகம், அருள்ஊற்று, நமதுதூது சஞ்சிகைகளிலும் மலைஒளி நூல் தொகுப்பிலுமாக எழுபத்தைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியுள்ளார். அன்சார் தேடும் அர்ச்சனா, விழித்துணை, நினைப்பதெல்லாம், சாமேளம், வானமே கூரையாக, பாவத்தின் சுவடுகள், மீண்டும் வரும் உயிர்ப்புக்கள், தூரத்துத் தண்ணீர், இவர்கள் மனிதர்கள், அந்திரக்கஸ் அந்தரம், அவள் அகதி இல்லை, காலமெல்லாம் காத்திருப்பேன், மயங்குகிறாள் மங்கை, மலர்தாவும் வண்டு, மகன்தேடியவீடு, பறக்குது பலூன்,விடியலைத்தேடும் தியாகங்கள், ரயில், வெற்றிலை போடாமல் சிவந்தவர்கள், இறுதி ஆசையின் இறுதி யாத்திரைகள், இன்னும் காத்திருக்கப் போகிறாள், மலரும் மொட்டுக்கள் போன்றன இவரை ஒரு காத்திரமான படைப்பாளியாக உலகிற்கு அடையாளப்படுத்தியுள்ளன. 1999 ஜனவரி மல்லிகையின் முப்பத்N;தாராவது ஆணடு; மலரின் அட்டைப்படமாக இவரது புகைப்படத்தினைப் பிரசுரித்துக் கௌரவம் வழங்கியிருக்கின்றது. கலாநிதி க.குணராசா அவர்கள் எழுதிய ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற நூலில் ஈழத்தின் தரமான பெண் படைப்பாளிகளில் ஒருவராக இவரது சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தினைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.சமூகப் பார்வையுடன் இலக்கியம் படைத்த திக்கம் சிவயோகமலர் ஏழாந் தலைமுறைப் படைப்பாளியாக ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளார். 2014-01-16 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!