Tuesday, May 21

சச்சிதானந்தன், க (பண்டிதர்)

0

1912-10-19 ஆம் நாள் மாவிட்டபுரத்தில் பிறந்தவர். பிராமண வீதி தும்பளை பருத்தித்துறை என்னும் முகவரியில் வசித்து வந்தவர். மிகச்சிறந்த கவிஞர், தமிழறிஞர், ஆங்கிலத்திலும், தமிழிலும், வடமொழியிலும் வல்லவர். உளநூல், கல்வி நூல் விற்பன்னர்.பண்டிதர். பலாலி ஆசிரியர் கலாசாலையில் உப அதிபராய் இருந்து ஓய்வுபெற்றவர். சுவாமி விபுலானந்தர் யாழ் நூல் உருவாக்கிய காலத்தில் அவருடனிருந்து ஆய்வுகளுக்கும், எழுத்துப் பணிகளுக்கும் உதவிய பெருமைக்குரியவர். யாழ்ப்பாண மண்ணில் ஒரு நடமாடும் நூலகமாக, அறிவுச்சுடராக, மிளிர்ந்த இவர் தமிழில் கீழைத்தேய, மேலைத்தேய இருவழிக் கல்வியிலும் ஈடுபாடும் புலமையுமிக்கவர். கவிதை, சிறுகதை, நவீனம், காவியம், நாவல், வானியல், சோதிடம் முதலாம் பல்துறை இலக்கியத் திறன்படைத்தவர். மதுரையில் தமிழன் நாளிதழ், இலங்கையில் சக்தி, ஈழகேசரி போன்ற நாளிதழ்களில் இருபதிற்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். ‘சாகில் தமிழ் படித்துச்சாக வேண்டும் – எந்தன் சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்”; என்ற பாடலடிக்குச் சொந்தக்காரர். இவரின் நவகவிதைகளின் தொகுப்பாக ஆனந்தத்தேன் என்ற நூல் 1954 இல் வெளிவந்தது.1952 இல் மாவைமுருகன் என்ற நூலையும், 1960 இல் தியாகமாலை என்ற நூலையும் வெளியிட்டவர். 1450-1467 காலப் பகுதியில் யாழ்ப்பாண அரசனாகவிருந்த கனகசூரிய சிங்கையாரியனை கோட்டை அரசன் ஆறாம் பராக்கிரமபாகு ஆட்சியின்போது அவனுடைய வாரிசான சம்புமால் குமனரையன் வென்று யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி ஆண்டதான வரலாற்றையும், தமிழ் நாட்டிலிருந்து வந்த படை விஜயபாகுவை வென்று ஆட்சியைக் கைப்பற்றிய செய்தியையும் கொண்டதாக 1998இல் யாழ்ப்பாண காவியம் என்ற பெருநூலை வெளியிட்டவர். இவ்வறிஞரின் படைப்புக்கள் பலவும் அச்சுப்பெறாமலேயே உள்ளன. கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, கிளாலித்துறைமுகம் என்பவற்றை நிலைக்களமாகக் கொண்டமைந்ததும், 1950 முதல் 42 வருட காலவரலாற்றையும், செல்வன் என்னும் தமிழ்ச் சிறுவனும், அவன் பள்ளி மாணவரும் பத்து வருட காலத்தில் படுகின்ற துன்பங்களையும் கருவாகக் கொண்டதுமாய் நாலாயிரத்து முன்னூறு கவிதைவரிகளில் எழுதப் பெற்றதுமான மகாகாவியம் பருவப்பாலியர் படும்பாடு என்னும் தமிழியல், மொழியியல் தொல்காப்பிய அடிப்படையில் தமிழுக்கோர் பிரயோக இலக்கணம், எனது யாழ்ப்பாணமே, தமிழர் யாழியல், மஞ்சு, காசினியம், மலர்க்கொத்து, எடுத்தமலரும் தொடுத்த மாலையும், பறவைகளே போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கனவாகும். மரபு இலக்கியங்களிலும், நவீன இலக்கியங்களிலும் ஆற்றல்மிக்க பேரறிஞர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெல்லிப்பளை கலை இலக்கியக்களம் இவரது ஆக்கங்கள்பற்றி மாவைப்பண்டிதர் க.சச்சிதானந்தன் இலக்கியப்பணி என்ற கைநூல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. ஈழகேசரி, மறுமலர்சிக்கால இப்பிரதேச புனைகதையாசிரியர் எனப் போற்றப்படும் கவிஞரவர்களின் அன்னபூரணி என்னும் தொடர்நவீனம் ஈழகேசரியில் வெளிவந்து பல புனைகதையாசிரியர்கள் உருவாக முன்னோடியாக இருந்தவர். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கம் பரீட்சகராகவும் இருந்தார். இவரது இத்தகைய பணிகளைப்பாராட்டி 1999 இல் சாஹித்தியரத்னா, 2005 இல் இலங்கை அரசின் உயர்விருதான கலாகீர்த்தி, 2001 இல் சம்பந்தன் விருது, 2003 இல் வடக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் விருது, 2004 இல் தந்தை செல்வா அறக்கட்டளை விருது, கதிரவேற்பிள்ளை சனசமூக நிலைய விருது போன்ற பல விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டவர். 2008-03-21ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!