Thursday, October 10

கைலாசபதி,க (பேராசிரியர்)

0

1933-04-05 ஆம் நாள் கோலாலம்பூர் மலேசியாவில் பிறந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வாழ்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக வளாகமாக ஆரம்பிக்கப்பட்ட பொழுது அதன் முதலாவது வளாகத் தலைவராகப் பணியாற்றியவர். தமது பதவிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும் பல்கலைக் கழகத்தில் பணிக்கமர்த்தியவர். எழுத்தாளர், ஆய்வாளர், பத்திரிகையாளர், ஆசிரியர், நடிகர் எனப் பன்முகங்கொண்ட இவ் அறிஞர் மிகச் சிறந்த இலக்கிய ஆய்வாளராகவும், இலக்கிய விமர்சராகவும் விளங்கியுள்ளார். பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில்இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங் கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத் தினார். இலக்கியத்துறை, இதழியல்துறை மற்றும் கல்வித்துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தவர். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்த அவர், இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கை வந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் தமது உயர்கல்வியைப் பெற்றார். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் இளங் கலையில் தமிழைச் சிறப்புப் பாடமாக கற்று B.A (Hons) முதல் தர மாணவனாகச் சித்தியெய்தினார் (1957). பல்கலைக்கழகக் கல்வியின் பின்னர் இலங்கையின் அரச பத்திரிகையான தினகரனில் உதவி ஆசிரியராக1957 முதல் 1961 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார் (1961-62). 1963-1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார். 1974 இல் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டபொழுது அதன் தலைவராக கைலாசபதி அவர்கள் பணியாற்றினார். அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தில் (1977), வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத் துறைத் தலைவராகவும் (1978-82) பணிபுரிந்தார். பல்கலைக்கழகப் பணிகளில் மாத்திரமின்றி இலங்கை அரசின் கல்வி சார்ந்த குழுக்களிலும் இடம் பெற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார். யுனெஸ்கோவிற்கான தேசிய ஆணைக்  குழுவிலும் (1970), இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழுவிலும் இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழுக்களிலும் பணிபுரிந்துள்ளார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நாட்டியக்குழு, இலக்கியக்குழு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர். பேராசிரியர் கணபதிப்பிள்ளை தயாரித்த நாடகங்களிலும் கைலாசபதி நடித்துள்ளார். க.கைலாசபதி அவர்கள் இலக்கியத் துறையின் அனைத்துப் பாடுபொருளைப் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். ஜனமகன், உதயன், அம்பலத்தான்,அம்பலத்தாடி, அபேதன் உள்ளிட்ட புனைபெயர் களிலும்  எழுதியுள்ளார். மாணவராக இருந்த காலத்திலேயே இவர் மார்க்சிய லெனினிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கினார். சீன அரசின் அழைப்பில் இவர் 1979 இல் சீனா சென்றுவந்தார்.தம் சீனப் பயணப் பட்டறிவுகளைத் தம் மனைவியுடன் இணைந்து எழுதிய “மக்கள் சீனம் – காட்சியும் கருத்தும்” என்ற நூல்வழி வெளிப் படுத்தியுள்ளார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டபொழுது அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் நூல்களாக, பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், 1966, தமிழ் நாவல் இலக்கியம் 1968, Tamil Heroic Poetry-Oxford, 1968,   ஒப்பியல் இலக்கியம், 1969, அடியும் முடியும்,1970 ,ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி,1971, இலக்கியமும் திறனாய்வும்,1976, கவிதை நயம் (இ.முருகையனுடன்), 1976, சமூகவியலும் இலக்கியமும், 1979, மக்கள் சீனம்- காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979, The Tamil Purist Movement–A Re-Evalution,Social Scientist, Vol: 7:10,Trivandrum. நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், 1980, திறனாய்வுப் பிரச்சினைகள், 1980, பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், 1980, இலக்கியச் சிந்தனைகள், 1983, பாரதி ஆய்வுகள், 1984, The Relation of Tamil and Western Literaturesஈழத்து இலக்கிய முன்னோடிகள், 1986, , On Bharathi 1986 இரு மகாகவிகள், 1987இ ழுn டீhயசயவாi – 1987 இச் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் (1979-1982) Tamil (mimeo) (co-authorA.Shanmugadas குறிப்பிடத்தக்கவை. இவரது மனைவியார் ஈழத்தில் தயாரிக்கப்பட்ட பொன்மணி என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தமை இங்கு மனங்கொள்ளத்தக்கது. 1982-12-06 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!