வட்டுக்கோட்டை வேளான் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை என்று கூறிக்கொண்ட சிதம்பரப் பிள்ளையவர்கள் முத்துக்குமாரு என்னும் அறிஞரின் மகனாவார்.1820 ஆம் ஆண்டு மானிப்பாய் சங்குவேலி என்னும் ஊரில் பிறந்தவர். தமது பன்னிரண்டாவது வயது வரை தமிழ்மொழியை நன்றாகக் கற்ற இவர் வட்டுக்கோட்டை செமினரியில் சேர்ந்து விவேகியாக விளங்கினார். செமினரி யில் சேர்பவர்கள் அக்காலத்து வழக்கின்படி கல்விக்காக உதவும் அமெரிக்க நன்கொடையாளர் களின் பெயர்களைப் புனைந்து கொள்ளவேண்டும். இதனடிப்படையில் வில்லியம் நெவின்ஸ் எனத் தம்மை அழைக்கலானார். இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளையும் நன்கு கற்று அம்மொழிகளின் இலக்கணங்களையும் துருவி ஆராய்ந்து பெரும் பண்டிதரானார். ஆங்கிலத் தமிழகராதி, நியாய இலக்கணம், இலக்கிய ஆங்கிலம், தமிழ் வியாகரணம் ஆகிய நூல்களை யாத்து தமிழிற்குப் பெருமை சேர்த்தவர். 1840 ஆம் ஆண்டிலே வட்டுக்கோட்டை செமினரியில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர். மாணவராகவிருந்த காலத்தில் கணித பாடத்தில் கடும் விவேகியாகவிருந்தமையால் கணிதப்புலி என அழைக்கப்பட்டவராகவும் கேத்திர கணிதத்தில் எந்தக் கணக்கையும் எவரும் வியக்கும் வகையில் புதுவழியாலும் சுருக்கவழியாலும் செய்து நிரூபித்து வந்ததனால் பெரியவர்கள் இவரின் விவேகத்தை மெச்சி யூகிளிட் என அழைத்துப் பெருமை கொண்டனர். இவர் 1889 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.