1930-06-02 ஆம் நாள் ஆவரங்கால் என்னும் ஊரில் பிறந்து யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு என்னும் இடத்தில் வாழ்ந்தவர். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம், மரபுவழிக்கவிதை, வரலாறு, பாடநூலாக்கம் போன்ற துறைகளில் படைப்பாளியான இவர் பண்டித, பால பண்டித வகுப்புகளில் கற்பித்து பல மாணவர் பரம்பரையினை உருவாக்கிய பெருமைக்குரியவர். ஈழகேசரி, மறுமலர்ச்சி , வீரகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள் பலவற்றினை எழுதியவர். முத்தமிழ் வெளியீட்டுக்கழகம் என்ற ஒன்றினை நிறுவி பல இலக்கிய, வரலாற்று, ஆய்வு நூல்களை வெளியிட்டவர். வீரத்தாய், நசிகேதன், நெடும்பா, நல்லூர் நான்மணி மாலை என்கின்ற கவிதை நூல்களையும், சீதா, செல்லும்வழி, இருட்டு, ஞானக்கவிஞர், சலதி ஆகிய நாவல்களையும், கடல், சொக்கன் சிறுகதைகள் என்கின்ற சிறுகதை நூல்களையும், சிங்ககிரிக் காவலன், ஞானக்கவிஞன், சிலம்பு பிறந்தது ஆகிய நாடக நூல்களையும், ஈழத்து தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி, சைவம் வளர்த்த தையலர், அறநெறிப்பாமஞ்சரி, இலக்கியக்கருவூலம், மாருதப்புரவீகவல்லி, தெய்வப்பாவை, தமிழ்ப்பேரன்பர் க.வேந்தனார், சேர் பொன்.இராமநாதன் வாழ்க்கைச்சுருக்கம், மனோன்மணி, உரைநடைத்தெளிவு, பாலையும் சோலையும், போக்கிரி முயலாரின் சாகசங்கள், நல்லூர்க்கந்தன் திருப்புகழ், திருக்குறள் தெளிவுரை முதலான பல நூல்களையும் வெளியிட்டவர். ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றில் சாதிமுறையை மையமாக வைத்து எழுதப்பட்ட இலக்கியமாக சீதா என்கின்ற நாவல் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. சிங்ககிரிக்காவலன், சிலம்பு பிறந்தது ஆகிய நாடகங்களுக்கும்,கடல் என்கின்ற சிறுகதைத் தொகுப்பு நூலிற்கும் சாகித்திய மண்டலப்பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய பணிகளுக்காக குகஸ்ரீ,சாகித்தியரத்னா, செந்தமிழ் வித்தகர், நாவலர், மூதறிஞர் போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றதுடன் யாழ்.பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தினையும் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. எந்தத் தூரமானாலும் தனது துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்து தமிழ்ப்பணியாற்றிய இவ் அறிஞர் ஒவ்வொரு நாளும் நல்லைக் கந்தனை தரிசனம் செய்யத் தவறுவதில்லை. இவரது புதல்வியார் சங்கீதத்துறையில் இன்று யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வருவது இவUடைய தமிழ்ப்பணியின் சிறப்பாகும். 2004-12-10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.