ஈழத்துப் புலவர் ஒலி எனப் போற்றப்படும் மேலைப்புலோலியில் 1871 இல் மார்கழி மாதம் 3 ஆம் நாள் நா.சதாவதானி பிறந்தார்.தனது ஆரம்பக் கல்வியை மேலைப்புலோலி சைவப் பிரகாசித்தியாசாலையில் கற்றார்.இளமையில் வறுமையால் வாடிய இவர் புலோலியூரில் வாழ்ந்த நொத்தாரிசு சிதம்பரப்பிள்ளைக்கு எழுதுநராகக் கடமையாற்றி பின் தான் கல்விகற்ற மேலைப்புலோலியில் உதவி ஆசிரியரானார். தமது அறிவைப் பெருக்கும் நோக்குடன் 21 ஆவது வயதிலே தமிழகம் சென்றார். ஈழத்தில் நாவலரின் மாணாக்கர்களான தியாகராசபிள்ளை, சதாசிவம்பிள்ளை முதலியோரிடம் தமிழ் இலக்கண இலக்கிய சைவசித்தாந்தங்களைக் கற்ற இவர் தமிழகத்தில் காசிவாசி செந்திநாதையர், கனகசுந்தரம்பிள்ளையார் ஆகியோரிடம் விரிவாகக் கற்று தன் அறிவைக் கூர்மைப்படுத்திக் கொண்டார். இவரது சைவப்பணிக்குச் சான்றாக ஆரணி சமஸ்தான வித்துவானாய் இருந்து ஆலய வழிபாட்டை நெறிப்படுத்தியமையும், திருமுறை ஓதும் வழக்கத்தினை ஏற்படுத்தியமையையும், சித்தாரிப்பேட்டை புராணபடன, சமயப் பிரசங்கங்களையும் குறிப்பிடுவதுடன் நாவலரால் தொடக்கப்பட்ட வழக்காகிய வள்ளலாரின் பாடல்கள் திருமுறைக்கு நிகராக ஓதத்தக்க அருட்பாக்கள் அல்ல என பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியிலும் துணிந்து நீதிமன்றம் வரை சென்று வாதாடி வென்று திருமுறைகளின் புனிதத்தினைக் காத்தமையும், சமய நூல்கள் காலத்தால் அழியாவண்ணம் பதிப்பித்து வெளியிட்டமை, பல சமய நூல்களுக்கு ஏற்கனவே உள்ள உரையை தம் அறிவால் புதுப்பித்து வெளியிட்டமை, தாமே சில சிறப்பான சைவசித்தாந்த பக்தி இலக்கியங்களினைப் படைத்தமை இவரது சைவப்பணிகளுள் முக்கியமானவையாக விளங்கு கின்றன. இவரிடம் இயல்பாகக் காணப்பட்ட பேச்சாற்றல் வாதத்திறன், ஆழமான சித்தாந்த அறிவு என்பன இவரது பணிகளுக்குத் துணைநின்றன. இவர் தனது 36 ஆவது வயதில் சென்னை இலட்சுமி விலாச மண்டபத்தில் பலரும் வியக்கும் வண்ணம் ஒரே நேரத்தில் நூறு விடயங்களினை அவதானித்து அவற்றுக்கு ஒழுங்குபட விடைகூறவல்ல சதாவதானம் செய்து “சதாவதானியாகி” ஈழத்துப் புலமை ஆழமதை உலகறியச் செய்து தமிழ் சமுதாயம் போற்றும் மேதையானார்.